

வாணியம்பாடி:
ஆலங்காயம் அடுத்த கோமூட்டேரி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சீனிவாசன் (வயது17) 12-ம் வகுப்பு படித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் வீட்டில் செல்போனில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார்.
அதிகாலை வரையில் மகன் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்ததை கண்ட பெருமாள் சீனிவாசனை கண்டித்தார். சீனிவாசனிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு அவர் வேலை செய்யும் மிட்டூரில் உள்ள வெல்டிங் கடைக்கு கொண்டு சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த சீனிவாசன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதித்துள்ள நிலையில் பப்ஜி விளையாடியதை கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.