search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தஞ்சை, திருவாரூர், நாகை-மயிலாடுதுறை மாவட்டங்களில் வெற்றி பெற்ற தி.மு.க.-அ.தி.மு.க. வேட்பாளர்கள் விவரம்

    தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 7 தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் 18 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி வேட்பாளர்களின் விவரம் வருமாறு:-

    தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 7 தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

    தஞ்சை சட்டசபை தொகுதியில் தி.மு.க.வை சேர்ந்த டி.கே.ஜி.நீலமேகம் தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த முறை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். இம்முறை அவர் 1 லட்சத்து 3 ஆயிரத்து 772 வாக்குகள் பெற்றிருந்தார்.

    திருவையாறு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் துரை.சந்திரசேகரன் 1 லட்சத்து 3 ஆயிரத்து 210 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஒரத்தநாடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம் 90 ஆயிரத்து 63 வாக்குகளும், பட்டுக்கோட்டையில் தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரை 79 ஆயிரத்து 65 வாக்குகளும், பேராவூரணியில் தி.மு.க. வேட்பாளர் அசோக்குமார் 89 ஆயிரத்து 130 வாக்குகளும், பாபநாசத்தில் தி.மு.க. கூட்டணியான ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா 86 ஆயிரத்து 567 வாக்குகளும், கும்பகோணத்தில் தி.மு.க. சாக்கோட்டை அன்பழகன் 96 ஆயிரத்து 57 வாக்குகளும், திருவிடைமருதூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கோவி.செழியன் 95 ஆயிரத்து 763 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றிருந்தனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகள் உள்ளன. இதில் 3-ல் தி.மு.க.வும், 1 இடத்தில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றிருந்தன.

    கோப்புபடம்

    திருவாரூரில் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன் 1 லட்சத்து 8 ஆயிரத்து 906 வாக்குகள் பெற்று தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்றார். இதேப்போல் மன்னார்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜாவும் 87 ஆயிரத்து 172 வாக்குகள் பெற்று தொடர்ந்து 2-வது முறையாக வெற்றியை தக்க வைத்து கொண்டார்.

    திருத்துறைப்பூண்டியில் தி.மு.க. கூட்டணியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து 97 ஆயிரத்து 92 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நன்னிலம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.காமராஜ் 1 லட்சத்து 3 ஆயிரத்து 637 வாக்குகள் பெற்று தொடர்ந்து 3-வது முறையாக வெற்றியை ருசித்தார்.

    நாகை மாவட்டத்தில் 3 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 2-ல் தி.மு.க.வும், 1 தொகுதியில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன.

    நாகை சட்டசபை தொகுதியில் தி.மு.க. கூட்டணியான விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் முகமது ஷாநவாஸ் 66 ஆயிரத்து 281 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கீழ்வேளூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நாகை மாலி 67 ஆயிரத்து 988 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் 78 ஆயிரத்து 719 வாக்குகள் பெற்று தொடர்ந்து 2-வது முறையாக வெற்றியை தக்க வைத்து கொண்டார்.

    புதிதாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 தொகுதிகள் உள்ளன. இந்த 3 தொகுதிகளையும் தி.மு.க.வே வெற்றி வாகை சூடியது.

    சீர்காழியில் தி.மு.க. வேட்பாளர் பன்னீர் செல்வம் 94 ஆயிரத்து 57 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மயிலாடுதுறை மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணியான காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் 73 ஆயிரத்து 647 வாக்குகளும், பூம்புகார் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் நிவேதா முருகன் 96 ஆயிரத்து 102 வாக்குகளும் பெற்று வெற்றி அடைந்தனர்.

    Next Story
    ×