search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டில் 36 தொகுதிகளையும் வாரி சுருட்டிய திமுக

    திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

    தி.மு.க.வின் கோட்டையாக எப்போதுமே கருதப்படும் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

    கடந்த முறை அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போது சென்னையில் தி.மு.க. 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அ.தி.மு.க. 6 தொகுதிகளை வென்று இருந்தது.

    ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளையும் தி.மு.க.வே வாரி சுருட்டி அள்ளி இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் ஆர்.கே.நகர்.தொகுதியில் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றி பெற்று இருந்தார்.

    அவரது மறைவுக்கு பிறகு நடந்த இடைத்தேர்தலில் தினகரன் அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது தவிர மயிலாப்பூர் (நடராஜ்), பெரம்பூர் (வெற்றிவேல்), ராயபுரம் (ஜெயக்குமார்) தி.நகர் (சத்யா), விருகம்பாக்கம் (வி.என்.ரவி), ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்று இருந்தது.

    இந்த 6 தொகுதிகளை தவிர்த்து அண்ணாநகர், எழும்பூர், துறைமுகம், கொளத்தூர், சைதாப்பேட்டை, திரு.வி.க.நகர், ஆயிரம்விளக்கு, வேளச்சேரி, வில்லிவாக்கம், சேப்பாக்கம் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க.வே வெற்றி பெற்று இருந்தது.

    முக ஸ்டாலின்


    இப்படி கடந்த முறை வெற்றி பெற்று இருந்த இந்த 10 தொகுதிகளையும் இந்த முறை மீண்டும் தக்க வைத்து கொண்ட தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க.விடமிருந்து 6 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. இதனால் தலைநகர் சென்னை மீண்டும் தி.மு.க.வின் கோட்டை என்பது நிரூபணமாகி உள்ளது.

    சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15-ல் தி.மு.க. களம் இறங்கிய நிலையில் கடந்த முறை நடிகர் வாகை சந்திரசேகர் வெற்றி பெற்றிருந்த வேளச்சேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    சென்னையில் இப்படி ஒட்டுமொத்த தொகுதிகளையும் தன்வசப்படுத்திய தி.மு.க. பக்கத்து மாவட்டமான செங்கல்பட்டையும் இந்த தேர்தலில் சேர்த்தே அள்ளி இருக்கிறது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து சமீபத்தில் பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகள் உள்ளன. இந்த முறை அ.தி.மு.க.வுக்கு மதுராந்தகம் தொகுதி மட்டும் கிடைத்து இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி சேர்த்து அள்ளியுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய 4 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. திருப்போரூர், செய்யூர் தொகுதிகளில் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற்றுள்ளது. மதுராந்தகம் தொகுதியை மட்டும் அ.தி.மு.க. கைப்பற்றியது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், திருபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சீபுரம் ஆகிய 4 தொகுதிகளில் திருபெரும்புதூர் தொகுதியில் மட்டுமே கடந்த முறை அ.தி.மு.க. வெற்றி பெற்று இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் இதனையும் சேர்த்து மொத்தம் உள்ள 4 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் வென்றுள்ளது. மற்ற 3 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

    கடந்த தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. அதிக இடங்களில் வென்று இருந்தது. அந்த மாவட்டத்துக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, பூந்தமல்லி,ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய 7 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி இருந்தது.

    திருவள்ளூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே தி.மு.க. வெற்றி பெற்று இருந்தது. ஆனால் இந்த முறை திருவள்ளூர் மாவட்டத்தில் நிலைமை தலைகீழாக மாறியது.

    ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த 3 தொகுதிகளை மீண்டும் கைப்பற்றிய தி.மு.க., அ.தி.மு.க.விடமிருந்து 7 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது.

    பொன்னேரி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் மற்ற 6 தொகுதிகளையும் தி.மு.க. வென்றுள்ளது.

    இதன் மூலம் தலைநகர் சென்னை மற்றும் பக்கத்து மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் 36 சட்ட மன்ற தொகுதிகளையும் தி.மு.க. தன்வசப்படுத்தி ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

    இதே போல் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

    Next Story
    ×