search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு
    X
    தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு

    மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரத சாகு இன்று ஆலோசனை

    வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பயிற்சி, அதை கண்காணிக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த 6-ந் தேதி நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

    234 சட்டமன்ற தொகுதி மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எந்திரங்கள் அனைத்தும் 76 மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

    வாக்கு பதிவு எந்திரங்கள்

    வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அங்குள்ள டி.வி.யில் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது பிரதிநிதிகளை தினமும் அனுப்பி ‘ஷிப்ட்’ அடிப்படையில் தங்க வைத்து கண்காணித்து வருகின்றனர். போலீஸ் அதிகாரிகளும் அங்கு ரோந்து சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

    மே 2-ந் தேதி காலையில் 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட உள்ளது. ஓட்டு எண்ணும் அதிகாரிகளுக்கு தேர்தல் கமி‌ஷன் ஏற்கனவே பயிற்சிகள் கொடுத்துள்ளன.

    முதலில் தபால் ஓட்டுகளை எண்ணுவார்கள். அதன் முடிவை அறிவித்துவிட்டு அதன் பிறகு வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள வாக்குகளை ஒவ்வொரு சுற்று அடிப்படையில் எண்ண வேண்டும் போன்ற வழிமுறைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு இடம் அளிக்கப்படும். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கையின்போதும் கேமரா மூலம் காட்சிகள் பதிவு செய்யப்படும்.

    முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், வேட்பாளர்களின் முகவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரி, பொதுப் பார்வையாளர் ஆகியோரின் கையெழுத்து பெறப்படும்.

    வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பயிற்சி, அதை கண்காணிக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி ஆன்லைன் மூலமும் நடந்து வருகிறது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியாக செயல்படுகிறார்கள். இவர்களுக்கு கீழ் அந்தந்த தொகுதிக்கான தேர்தல் அதிகாரிகள் உள்ளனர்.

    இவர்களுக்கு ஓட்டு எண்ணுவதற்கான பயிற்சி கொடுக்கப்பட்டு இருந்தாலும் மீண்டும் ஆன்லைன் மூலம் விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு இன்று மாலையில் ஆலோசனை நடத்த உள்ளார்.

    காணொலி வாயிலாக ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் அவர் வாக்கு எண்ணிக்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார்.

    வாக்கு எண்ணும் மையங்களில் இட நெருக்கடியை தவிர்க்க ஒரு தொகுதிக்கான வாக்குகளை 2 அறைகளில் வைத்து எண்ணுவதற்கு தேர்தல் கமி‌ஷன் இப்போது அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×