search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் வாக்குபதிவையொட்டி பாரிமுனையில் கடைகள் மூடப்பட்டுள்ள காட்சி.
    X
    தேர்தல் வாக்குபதிவையொட்டி பாரிமுனையில் கடைகள் மூடப்பட்டுள்ள காட்சி.

    சென்னையில் கடைகள் அடைப்பு- சாலைகள் வெறிச்சோடின

    பொது வேலைநிறுத்தம் நடந்தால் சென்னை எப்படி இருக்குமோ அது போன்று இன்று நகரின் பெரும்பாலான பகுதிகள் காணப்பட்டன.
    சென்னை:

    வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, அனைத்து நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

    இதையடுத்து, இன்று சென்னையில் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டது. மளிகை கடைகள், ஓட்டல்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், மின்சாதன விற்பனை நிலையங்கள், ஜவுளி கடைகள், நகை கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

    விடுமுறை என்பதால் சென்னை நகரில் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கவில்லை. வங்கிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் வீதிகளிலும், சாலைகளிலும், மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.

    பெரிய வாகனங்களும் அதிகமாக செல்லவில்லை. இருசக்கர வாகனங்களை அதிக அளவில் காண முடிந்தது.

    சென்னையில் பிரதான வணிக மையமாக திகழும் தியாகராயநகர், புரசைவாக்கம், அண்ணாநகர், பாரிமுனை, பெரம்பூர், திருவான்மியூர், அடையாறு, மயிலாப்பூர், வடபழனி, வளசரவாக்கம், கோயம்பேடு, கோடம்பாக்கம், சாலிகிராமம், எழும்பூர், நீலாங்கரை, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டிருந்தன.

    மக்கள் கூட்டம் இல்லாமல் இங்குள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கோயம்பேடு மார்க்கெட்டிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

    அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு நூறு அடி சாலை ஆகியவை வாகன நெரிசல் இல்லாமல் இருந்தன. முக்கிய வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

    வெறிச்சோடிய சாலை (கோப்புப்படம்)


    விடுமுறை தினம் என்பதால் பஸ்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டன. பொது வேலைநிறுத்தம் நடந்தால் சென்னை எப்படி இருக்குமோ அது போன்று இன்று நகரின் பெரும்பாலான பகுதிகள் காணப்பட்டன.

    ஒரு சில இடங்களில் டீ கடைகள், சிறிய பெட்டிக்கடைகள் திறந்து இருந்தன. வாக்குச்சாவடிகளிலும், வாக்குச்சாவடி உள்ள பகுதிகளிலும் மட்டுமே மக்களை அதிக எண்ணிக்கையில் காண முடிந்தது.
    Next Story
    ×