search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்- தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மனு

    அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் பாபுமுருகவேலுடன் கோட்டையில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் நாளை 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    நாட்டிலேயே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தான் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவது அதிகமாக உள்ளது.

    எனவே இவற்றை கட்டுப்படுத்த மத்திய தேர்தல் கமி‌ஷன் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்காக சிறப்பு அதிகாரிகள் மேற்பார்வையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. வாகன சோதனைகளும் நடந்தன. வருமான வரி துறையினரும் தனியாக சோதனை மேற்கொண்டனர்.

    இதில் ரூ.428 கோடி அளவிற்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சில இடங்களில் வாக்காளர்களுக்கு பணம்- பரிசு பொருட்கள் கொடுப்பதை தேர்தல் அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.

    வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக ஒவ்வொரு கட்சியும் எதிர்கட்சிகள் மீது குற்றம்சாட்டி வந்தன.

    அமைச்சர் ஜெயக்குமார்

    இந்த நிலையில், அ.தி.மு.க. மூத்த தலைவரும், அமைச்சருமான ஜெயக்குமார் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் பாபுமுருகவேலுடன் கோட்டையில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார்.

    அதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிடும் காட்பாடி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு, முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு போட்டியிடும் திருவண்ணாமலை ஆகிய 5 தொகுதிகளில் தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து இருக்கிறார்கள். எனவே 5 தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

    வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் நேரடியாக கொடுத்ததுடன் கூகுள் பே வலைதளம் வழியாகவும் பணம் நவீன முறையில் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த 5 தொகுதிகளின் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் சார்பில் அந்த மனுக்கள் கொடுக்கப்பட்டது.

    ஜெயக்குமாருடன் கொளத்தூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆதிராஜாராமும் வந்திருந்தார். அ.தி.மு.க. வக்கீல் பிரிவு இணை செயலாளர் பாபுமுருகவேல் ஆகியோர் வந்திருந்தனர்.

    5 தொகுதிகளுக்கும் தனித்தனியாக பாபுமுருகவேல் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

    பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் ஆணையம் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருவண்ணாமலை, திருச்சி மேற்கு ஆகிய இந்த 5 தொகுதிகளிலும் வாக்காளர்களிடம் செல்போன் நம்பரை வாங்கி கூகுள்பே மூலமாக பணம் போடப்பட்டுள்ளது. நவீன முறையை கையாள்வதில் தி.மு.க.வினர் தேர்ச்சி பெற்றவர்கள்.

    குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஒவ்வொரு சுய உதவி குழுக்களை அழைத்து ரூ.10 ஆயிரம் வீதம் அளித்துள்ளார்.

    தமிழ்நாடு முழுவதும் ஜனநாயகம் கேலிக்கூத்து, ஜனநாயக படுகொலை நடக்கிறது. இந்த 5 தொகுதிகளிலும் முடிந்தவரை பணம் வாரி வாரி இறைக்கப்பட்டுள்ளது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இருக்கிறது. அந்த பணத்தை வைத்து எப்படியாவது செயற்கையாக வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    எனவே கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருவண்ணாமலை, திருச்சி மேற்கு ஆகிய 5 தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் கமி‌ஷன் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. சார்பில் கோரிக்கை மனு தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
    Next Story
    ×