search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் வாக்குப்பதிவு எந்திரம்
    X
    வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் வாக்குப்பதிவு எந்திரம்

    தமிழகத்தில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்- பாதுகாப்பு பணியில் 1.58 லட்சம் போலீசார்

    சட்டமன்ற தேர்தலில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 300 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (6-ந் தேதி) நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 3,585 பேர் ஆண்கள். 411 பேர் பெண்கள்.

    சட்டமன்ற தேர்தலில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 300 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 528 சாவடிகள் பதட்டமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இன்று அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன.

    வாக்குப்பதிவு எந்திரம்

    ஒவ்வொரு தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மேற்பார்வையில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மையங்களுக்கு கொண்டு சேர்த்தனர்.

    வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இன்றே மேற்கொள்ளப்பட்டன. அனைத்து சாவடிகளிலும் குடிதண்ணீர் வசதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அதற்காக புத்தம் புதிய தண்ணீர் கேன்கள் கொண்டு செல்லப்பட்டன.

    கழிவறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இன்று வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

    சட்டமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 372 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இவர்களில் ஆயுதப்படை மற்றும் உள்ளூர்போலீசார், தமிழ்நாடு சிறப்பு படை போலீசாரும் அடங்குவர்.

    இதுதவிர முன்னாள் ராணுவத்தினர், ஊர் காவல் படையினர், தீயணைப்பு படையினர், ஜெயில் வார்டன்கள், பாதுகாவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற போலீசாரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் 34 ஆயிரத்து 130 பேர் பணியில் உள்ளனர்.

    இதுதவிர வெளி மாநிலங்களில் இருந்து 6 ஆயிரத்து 350 போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாக டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் 6 ஆயிரத்து 123 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் 3 ஆயிரத்து 254 மையங்களிலேயே தேர்தல் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை உள்பட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டு போட வரும் வாக்காளர்களுக்கு கையை தூய்மை செய்ய கிருமி நாசினிகள் வழங்கப்பட உள்ளன. கையுறைகளும் கொடுக்கப்பட இருக்கின்றன.

    இவை அனைத்தும் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஓட்டுப்போட வருபவர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும், முதியவர்களுக்கு உதவி செய்யவும் தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சென்னையில் மட்டும் 12 ஆயிரம் பேர் நாளை இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.

    தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ள டி.ஜி.பி.திரிபாதி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேஷ்குமார் அகர்வால் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    30 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர்.


    Next Story
    ×