search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவல்லிக்கேணியில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனுப்புவதற்கு தயாராகி வருவதை படத்தில் காணலாம்.
    X
    திருவல்லிக்கேணியில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனுப்புவதற்கு தயாராகி வருவதை படத்தில் காணலாம்.

    வாக்குப்பதிவுக்கு ஏற்பாடுகள் தொடக்கம்- ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி தீவிரம்

    மின்னணு எந்திரங்கள் சரியானபடி இயங்குகிறதா? என்பதை உறுதி செய்ய அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு ஒத்திகை செய்யப்படும்.
    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதையடுத்து கடந்த மாதம் 12-ந்தேதி வேட்புமனுதாக்கல் தொடங்கியது. 19-ந்தேதி வரை மனுதாக்கலுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.

    7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட மனு செய்து இருந்தனர். மனு பரிசீலனைக்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சிகளிடையே 5 முனைப்போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக அனைத்து தொகுதிகளிலும் வெற்றிக் கனியை பறிக்க கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 2 வாரங்களாக மிக தீவிர பிரசாரத்தில் தலைவர்களும், வேட்பாளர்களும், தொண்டர்களும் ஈடுபட்டு இருந்தனர்.

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் அடுத்த மாதம் தொடங்கும் நிலையில் இப்போதே வெயில் கொளுத்துகிறது. ஆனால் அதையும் மீறி வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

    இன்று இரவு 7 மணிக்கு பிறகு தொகுதிக்கு தொடர்பு இல்லாத வாக்காளர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான பயிற்சிகள் ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு அவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    சென்னை ஓட்டேரியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வாக்குசாவடி மையம் தயாராகி வரும் காட்சி.

    தமிழகம் முழுவதும் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிக்குரிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் நிலையில் இருக்கின்றன. கொரோனா தடுப்புக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் போலீசாரும், துணை நிலை ராணுவத்தினரும் பணியில் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்கள் நாளை முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு செல்ல உள்ளனர்.

    நாளை (திங்கட்கிழமை) பிரசாரம் கிடையாது. தேர்தல் ஆணையம் ஊழியர்கள் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் சென்று முன்ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டுள்ளது. வாக்குச்சாவடி பகுதிகளில் சாலையில் 100 மீட்டர் தொலைவு தூரத்தை குறிக்க பெயிண்டால் கோடு போட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே வாக்காளர்கள் மிக எளிதாக வாக்களிப்பதற்காக தகவல் சீட்டுகளை வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அனைத்து தொகுதிகளிலும் இன்றே முடித்து விட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று ‘பூத் சிலிப்’ கொடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

    சென்னை மாவட்டத்தில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளன. இந்த 16 தொகுதிகளிலும் 40 லட்சத்து 57 ஆயிரத்து 360 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இன்று மாலைக்குள் இந்த பணிகளை முடித்து விட 200 வார்டுகளிலும் மாநகராட்சி ஊழியர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

    சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பெரம்பூர், வேளச்சேரி ஆகிய 2 தொகுதிகளில் அதிக வாக்காளர்கள் உள்ளனர். எனவே இந்த 2 தொகுதிகளில் பூத் சிலிப்புகளை வழங்கும் பணியில் கூடுதல் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்துக்கும் சென்று தங்களுக்குரிய பூத் சிலிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல் வாக்காளர்களுக்குரிய ஹெல்ப் லைன் மூலமாகவும் பூத் சிலிப்பை பதிவிறக்கம் செய்யலாம்.

    சென்னையில் முந்தைய தேர்தல்களில் 901 இடங்களில் 3,754 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக சென்னையில் 6 ஆயிரத்து 123 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    2,369 துணை வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 1053 இடங்களில் இந்த வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு நாளை மறுநாள் வாக்காளர்கள் வரும்போது தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் இன்றும், நாளையும் செய்ய உள்ளனர்.

    கிருமிநாசினியும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தயார் நிலையில் வைக்கப்படும்.

    இவை தவிர வாக்குப்பதிவின்போது கொரோனா தடுப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வாக்குப்பதிவின்போது வாக்காளர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தும் கையுறை வழங்கப்படும். இதற்காக சென்னை தொகுதிகளுக்கு சுமார் 50 லட்சம் கையுறைகள் தயார் நிலையில் உள்ளன.

    வாக்காளர்கள் பயன்படுத்திய பிறகு இந்த கையுறைகளை அகற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது குறித்து முழு உடல் கவச உடை அணிவித்து வாக்குச்சாவடிக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த பணிகளை ஒருங்கிணைக்க ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 2 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    நாளை காலை மின்னணு எந்திரங்கள் பிரிக்கும் பணி நடைபெறும். முதலில் அவை அந்தந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும். நாளை இரவுக்குள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்படும்.

    அந்த மின்னணு எந்திரங்கள் சரியானபடி இயங்குகிறதா? என்பதை உறுதி செய்ய அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு ஒத்திகை செய்யப்படும். நாளை இரவுக்குள் வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து தேர்தல் ஆணையர் ஊழியர்கள் அனைவரும் தயார் நிலையில் இருப்பார்கள்.
    Next Story
    ×