search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    திமுக, காங்கிரஸ் கட்சிகளிடம் சரியான திட்டங்கள் இல்லை- பிரதமர் மோடி

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை காங்கிரஸ்- தி.மு.க. ஆட்சி காலங்களில் நினைத்துக்கூட பார்க்காத ஒன்று என்று பிரதமர் மோடி கூறினார்.
    மதுரை:

    பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பிரசாரம் செய்வதற்காக நேற்று இரவு மதுரை வந்தார்.

    தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்து கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அவர் இரவு தங்கினார்.

    இன்று காலை மதுரை ரிங் ரோடு அம்மா திடலில் இன்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஓட்டலில் இருந்து பிரதமர் மோடி கார் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

    பின்னர் அம்மா திடலில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடைக்கு மோடி வந்தார். அவரை பார்த்ததும் மோடி வாழ்க... என தொண்டர்கள் உற்சாகமாக கோ‌ஷமிட்டனர். இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்று பேசினர்.

    பிரதமர் மோடி மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசினார். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்த மண் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் அருள் புரியும் மண். புண்ணிய பூமி. இந்த மண்ணுக்கு நான் தலைவணங்குகிறேன். நேற்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் ஓர் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனது வாழ்நாள் முழுவதும் இதனை அசை போட்டு வாழ்வேன்.

    மதுரை மண் அழகர் பெருமான் கோவில் உள்ள ஊர். கூடலழகர், திருப்பரங்குன்றம் முருகன் அருள் பாலிக்கும் மண்.

    மதுரை என்றதும் நினைவுக்கு வருவது தமிழ்சங்கம் தான். இந்த மண் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண். தமிழ் இலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது மதுரை மண்.

    மகாத்மா காந்திக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது மதுரை மண். இந்த மண்ணில் இருந்து முத்துராமலிங்கத் தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், காமராஜர், இமானுவேல்சேகரன், வ.உ.சி. ஆகியோருக்கு வணக்கம் செலுத்துகிறேன்.

    நண்பர்களே, இந்த மண்ணில் மிக பரந்த மனம் கொண்ட மக்கள் உள்ளனர். எனது சொந்த மாநிலமான குஜராத்தில் இருந்து ஏராளமான சவுராஷ்டிரா மக்கள் இங்கு வந்து பல ஆண்டுகளுக்கு முன்பே குடியேறி உள்ளனர். தெலுங்கு பேசும் மக்களும் இங்கே இருக்கின்றனர்.

    தென் தமிழகத்துக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் நடித்த “மதுரை வீரன்” திரைப்படத்தை மறக்க முடியுமா? எம்.ஜி.ஆருக்கு பல படங்களில் பாடலுக்கு குரல் கொடுத்த டி.எம். சவுந்தரராஜனை யாராவது மறக்க முடியுமா?

    1980-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தமிழகத்தில் எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சியை கலைத்தது.

    அதற்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் நின்று தான் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். அவருக்கு வலிமையின் கற்பாறையாக மதுரை மக்கள் நின்றார்கள்.

    எம்ஜிஆர்

    அதன் பிறகு நடைபெற்ற 3 தேர்தல்களிலும் எம்.ஜி.ஆர். தென் தமிழகத்தில் இருந்து தான் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாட்டில் எல்லோருக்குமான வளர்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி சிறப்பாக உள்ளது. 130 கோடி இந்திய மக்களுக்கும் நேர்மறையான மாற்றத்தை கொடுத்துள்ளது. கட்டுமானம், நீர்ப்பாசனம் ஆகியவற்றை சிறப்பாக செயல்படுத்தி உள்ளோம்.

    தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு புதிய ரெயில் தடங்கள் மற்றும் பல்வேறு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன.

    இதில் மதுரை-கொல்லம் வழித்தடம் என்பது மிக முக்கியமானது. 238 சதவீத ரெயில்வே கட்டுமான திட்டங்களை தமிழகத்திற்கு மட்டும் அறிவித்துள்ளோம். வருங்காலத்தில் மெட்ரோ, சாலைகள், ரெயில் பாதைகள் என பல திட்டங்களை கொண்டு வர உள்ளோம்.

    பிராட்பேண்ட் சேவை கிராமங்களிலும் கிடைக்கும் வகையில் தொலை தொடர்புத்துறை மேம்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் வை-பை சேவை மூலம் வர்த்தக சேவை வளரும்.

    இந்த மண் சுந்தரேஸ்வரரின் பல்வேறு திருவிளையாடல்கள் நிறைந்த மண். முக்கியமாக தண்ணீருக்கும், தமிழ் பண்பாட்டுக்கும் சம்பந்தமான மண்.

    நீருடன் இணைந்த பண்பாடு நிறைந்த பகுதி. எனவே தான் நாடு முழுவதும் தண்ணீரை சேமிக்க மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டம் அறிவித்துள்ளது. இதன் மூலம் 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து ஊர்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    தமிழகத்தில் 16 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு, மாநில அரசுடன் இணைந்து தமிழகத்தில் பல்வேறு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    24 மணி நேரமும் தடையில்லா குடிநீர் வழங்கும் முறையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு அதிகமான தண்ணீரை வழங்கி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதுடன் உணவு பதப்படுத்தும் தொழிலுக்கும் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

    தமிழக இளைஞர்கள் வேலைகள் உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய, புதிய தொழில்களை தொடங்க உதவி வருகிறது.

    வரி விதிப்பு என்ற பெயரில் வரி கொடுமைகள் இருக்கக்கூடாது என்பதற்காக வரிகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    ஜவுளி துறைக்கு மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி தொழில் தொடங்க கடன் வசதி, புதிய எந்திரங்கள் ஆகியவற்றை வழங்கி வருகிறோம்.

    ஜவுளி பூங்கா திட்டம் தமிழகத்திலும் அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு 7 புதிய ஜவுளி பூங்கா விரைவில் தமிழகத்தில் தொடங்கப்படும்.

    தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளிடம் சரியான திட்டங்கள் இல்லை. பொய் சொல்வதில் இருந்து அவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் சொல்வதெல்லாம் கேட்க மக்கள் முட்டாள்கள் அல்ல என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    தி.மு.க.-காங்கிரஸ் தமிழ் பண்பாட்டின் பாதுகாவலராக சித்தரித்து கொள்கிறார்கள். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தான் தி.மு.க. மந்திரி சபையில் பெரிய இலாகாக்களை பெற்று இருந்தது.

    அப்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அப்போதிருந்த மத்திய சுற்றுச்சூழல் மந்திரி ஜல்லிக்கட்டு ஒரு காட்டு மிராண்டித்தனமான செயல் என்று விமர்சித்தார்.

    ஜல்லிக்கட்டு காட்டு மிராண்டித்தனமான விளையாட்டா? நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வர அ.தி.மு.க. அரசு அவசர சட்டம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. அதனை உடனடியாக செயல்படுத்திட நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டை கொண்டு வந்தோம். இதற்காக காங்கிரஸ்-தி.மு.க. தங்களது செயலை எண்ணி வெட்கப்பட வேண்டும்.

    நண்பர்களே தி.மு.க.வும், காங்கிரசும் ஒரு விதத்தில் மகிழ்ச்சி பெற்று இருக்கின்றனர். பொய் சொல்வதில் அவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை காங்கிரஸ்- தி.மு.க. ஆட்சி காலங்களில் நினைத்துக்கூட பார்க்காத ஒன்று. ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று அறிவித்தது நமது அரசாங்கம் தான்.

    நான் தற்போது உங்களுக்கு ஒரு உறுதிமொழியை தருகிறேன். மதுரையில் மிக விரைவாக முறையாக எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். இந்த மருத்துவமனை மூலம் சர்வதேச சிகிச்சையை மக்கள் பெற முடியும்.

    மத்திய அரசு மருத்துவ கட்டமைப்புகளை நிறைவேற்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. 3 மாவட்டங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. மருத்துவ படிப்புகளுக்கு கணிசமான இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழிலேயே கற்கலாம் என உத்தரவாதம் அளிக்கிறேன்.

    தி.மு.க. எந்த மக்கள் நல திட்டங்களையும் செய்வதில்லை. அவர்கள் சொல்வதெல்லாம் பொய்கள்தான். இவர்கள் ஆட்சியில் இருக்கும்போது தேவேந்திரகுல சமுதாயத்துக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை. எத்தகைய நீதியும் கிடைக்கவில்லை.

    ஆனால் மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசும், மத்தியில் உள்ள பா.ஜனதா அரசும் தேவேந்திரகுல சமுதாய வேளாள மக்களின் 70 ஆண்டுகளாக கோரிக்கையை நிறைவேற்றி அவர்களின் கண்ணியத்தை மீட்டெடுத்துள்ளது.

    தி.மு.க.வும், காங்கிரசும் நமக்கான பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியாது. அவர்கள் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருந்தனர்.

    இந்த மதுரை நகரை வன்முறை நகரமாக வைத்திருந்தனர். அவர்களது குடும்ப சீர்குலைவை பயன்படுத்தி வன்முறையை கட்டவிழ்த்தனர். அதனை மீட்டுள்ளோம். மதுரை நகரம் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் நகரம். எப்படி அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் நகரம்.

    இந்த நகரத்தில் மீனாட்சி அம்மன் ஆட்சி செய்கிறார். கண்ணகி அம்மனுக்கு மரியாதை செய்துள்ளோம். ராணிமங்கம்மாள், வேலுநாச்சியார் என பெண்கள் மதிக்கப்பட்ட பூமி. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புரட்சி பாரத திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பெண்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கானது.

    தி.மு.க.வும், காங்கிரசும் பெண்களை திரும்ப.... திரும்ப... அவமானப்படுத்தினால் அது எனக்கு ஆச்சரியம் அளிக்காது. அவ்வாறு அவமானப்படுத்துவது அவர்களது இயல்பு.

    மதுரை தூங்காநகரம் என்பார்கள். இந்த நகரம் எப்போதும் விழித்திருக்கும். அரசியல் எதார்த்தத்திற்காகவும் விழித்திருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு வாக்களிக்கவும் விழித்திருக்க வேண்டும்.

    நன்றி வணக்கம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×