search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    மத்திய பா.ஜனதாவிடம் அ.தி.மு.க. அடமானம் வைத்த தமிழக அரசை மீட்கும் வலிமை தி.மு.க.விடமே உள்ளது: திருமாவளவன்

    எடப்பாடிபழனிசாமியை முதலமைச்சர் ஆக்கினால் மோடியை முதலமைச்சர் ஆக்குவதாக தான் பொருள். ஓ.பி.எஸ் துணை முதலமைச்சர் அல்ல அமித் ஷா தான் துணை முதலமைச்சர்.

    தஞ்சாவூர்:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பாபநாசத்தில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்தார்.

    மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் தி.மு.க.வை எதிர்த்து மட்டுமே பேசுகிறார்களே தவிர அ.தி.மு.க., பா.ஜனதாவை பற்றி பேசுவது கிடையாது. ஏனென்றால் அவர்களது இலக்கு தி.மு.க மட்டும்தான். தமிழகத்தில் உள்ள மாம்பழம், தாமரை, இரட்டை இலை மூன்றுமே பா.ஜனதாவின் சின்னம்தான். மாம்பழத்திற்கு ஓட்டு போட்டாலும் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டாலும் அது பா.ஜனதாவுக்கு ஓட்டுப் போடுவதாக தான் அர்த்தம்.

    எடப்பாடிபழனிசாமியை முதலமைச்சர் ஆக்கினால் மோடியை முதலமைச்சர் ஆக்குவதாக தான் பொருள். ஓ.பி.எஸ் துணை முதலமைச்சர் அல்ல அமித் ஷா தான் துணை முதலமைச்சர்.

    அ.தி.மு.க முற்றிலுமாக பா.ஜனதாவின் பினாமியாக மாறி விட்டது. அவர்கள் ஓட்டுக்கு ரூ.5000 கொடுத்தாலும் மக்கள் இந்த முறை அவர்களுக்கு வாக்களிக்க போவதில்லை.

    தமிழக அரசை மத்திய பா.ஜனதாவிடம் அ.தி.மு.க. அடமானம் வைத்துள்ளனர். அதனை மீட்க கூடிய வலிமை தி.மு.க.விற்கு தான் உள்ளது.

    தி.மு.க. கூட்டணி மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு பார்வையில் வழிநடத்தி வந்து கொண்டிருக்கிறார். பா.ஜனதாவை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான்.

    டெல்டா மாவட்டங்களை அழிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என ஒருபோதும் பா.ஜனதா பேசியது கிடையாது. அவர்கள் பேசுவதெல்லாம் இந்து,முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்றுதான் பேசுவார்கள்.எனவே தமிழகத்தில் ஒற்றுமை விளங்க தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை மக்கள் ஆதரியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×