search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    ஆட்சி மாற்றத்தின் மூலமே தமிழகத்துக்கு விடிவுகாலம்- கேஎஸ் அழகிரி அறிக்கை

    10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி நீடிப்பதற்கு எந்தவிதமான நியாயமான காரணங்களும் இல்லை. தமிழகத்துக்கு விடிவு காலம் ஆட்சி மாற்றத்தின் மூலமே ஏற்பட முடியும் என்று கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் மீது புதிய கல்விக் கொள்கையைப் புகுத்தி இந்தி திணிப்பை பா.ஜனதா அரசு செய்கிறது. தமிழ் கலாச்சாரத்தை அவமதிக்கிற வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பொதுத் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளுக்காக நடத்தப்பட்ட தேர்வுகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது.

    நாடு முழுவதும் இருக்கிற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள 12 ஆயிரம் எழுத்தர் பணிகளுக்கான காலி இடங்களை நிரப்புவதற்காக வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனம் அதற்கான தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தியது. இதில் குறைந்தது 3 ஆயிரம் காலிப்பணியிடங்கள் தென் மாநிலங்களில் உள்ளது என்ற போதிலும், மாநில மொழிகளில் தேர்வு எழுதுகிற உரிமை மறுக்கப்பட்டது.

    அதேபோல், தபால் துறையிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. இதன் மூலம் தமிழர்களின் அடையாளத்தை அழிக்கிற முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டு வகுப்புவாத ஒற்றைக் கலாச்சாரத்தைத் தமிழகத்தின் மீது திணிக்கத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதில் இருந்து தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், பா.ஜனதாவின் பிடியிலிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். அப்படி அகற்றுவதன் மூலமே நமது தனித்தன்மை காப்பாற்றப்படும் என்ற எண்ணம் ஒவ்வொரு தமிழர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டத்தால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய புள்ளியியல் ஆய்வக நிறுவனத்தரவுகள் தெரிவிக்கின்றன. வறுமை 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

    2003-ம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால், தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவித்து வருகிற இலவச மின்சாரம் நிச்சயமாக ரத்து செய்கிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

    இப்படி தொடர்ந்து தமிழர்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டு, சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கத் துடிக்கும் பிரதமர் மோடி எந்த முகத்தோடு வந்து தமிழக மக்களிடம் வாக்குகளைக் கேட்பார். மோடியின் ஒவ்வொரு அசைவும் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் எதிரானதாகவே உள்ளது.

    இந்த மண்ணில் மதக் கலவரங்களைக் கட்டவிழ்த்து விட நினைக்கிறார்கள். இந்த மண்ணின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் அழிக்க நினைக்கிறார்கள்.

    இதற்கு எதிராக தமிழ் இளைஞர்களும் வீறு கொண்டு எழுந்துள்ளனர். மோடியே திரும்பிப்போ என்ற குரல்கள், தமிழர்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அந்த குரல்கள் விண் அதிர ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    கடந்த மக்களவை தேர்தலில் தமிழக வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணியை நிராகரித்ததைப்போல வருகிற சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்து மதச்சார்பற்ற கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகி வருகிறது.

    10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி நீடிப்பதற்கு எந்தவிதமான நியாயமான காரணங்களும் இல்லை. தமிழகத்துக்கு விடிவு காலம் ஆட்சி மாற்றத்தின் மூலமே ஏற்பட முடியும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×