search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்- கேஎஸ் அழகிரி

    தமிழகம் முழுவதும் உள்ள 25 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3,400 இடங்கள் உள்ளன. இதில் 405 இடங்களில் மட்டுமே, 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நீட் தேர்வையும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும் எதிர்த்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. எதிர்க் கட்சிகளின் போராட்டம் காரணமாகவே மருத்துவப் படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி சட்டம் இயற்றப்பட்டது.

    இதன் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 313 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பல் மருத்துவப் படிப்பில் சேர 92 மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள 25 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3,400 இடங்கள் உள்ளன. இதில் 405 இடங்களில் மட்டுமே, 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

    இதுவே போதுமானதாக இல்லை என்று நாம் போராடிக் கொண்டிருக்கும்போது, பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கையும் நீட் தேர்வின் மூலம் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது தமிழகத்துக்கு மத்திய பாஜக அரசு செய்யும் தொடர் துரோகமாகவே தெரிகிறது. சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு நீட் தேர்வு நடத்தினால், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தால் மட்டுமே, கல்வித்தரத்தை உயர்த்தி, நீட் தேர்வை நம் அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் தயார்ப்படுத்த முடியும். அரசுப் பள்ளிகளுக்கான தரமான தேவைகளை மாநில அரசு ஆராய வேண்டும். இதை எல்லாம் ஆராயாமல் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும்.

    கல்வியில் மத்திய அரசு தலையிடக்கூடாது. மாநிலப் பட்டியலில் சேர்த்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கையில், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியுள்ளது.

    நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். ஆனால், அதனை எதிர்த்து இதுவரை முதல்-அமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பவில்லை.

    நீட் தேர்வு நடைமுறைக்கு வரும் முன்பு,2015-16-ல் 456 மாணவர்களும், 2016-17-ல் 438 மாணவர்களும் மருத்துவக் கல்லூரிகளில் சேருகிற வாய்ப்பை பெற்றிருந்தனர். ஆனால், நீட் தேர்வு அறிமுகமானதற்குப் பிறகு, 2017-ல் 7 மாணவர்களும் 2018-ல் 5 மாணவர்களும், 2019-ல் ஒரே ஒரு மாணவர் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர முடிந்தது.

    கல்வியைப் பொறுத்த வரை மாநில அரசுகள் மீது மத்திய அரசு திணிக்கக் கூடாது. தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், மத்திய பாஜக மற்றும் அ.தி.மு.க. அரசால் கசக்கிப் பிழியப்படும் தமிழக மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உருவாக்கித் தரப்படும். நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தின் மூலமே நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கை பாதிப்புகளிலிருந்து தமிழக மாணவர்களை பாதுகாக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×