search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    மானமுள்ள தமிழன் அமித்ஷா காலில் விழ மாட்டான்- ராகுல் காந்தி ஆவேசம்

    சென்னை விமான நிலையம் வந்த ராகுலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ்குண்டு ராவ் ஆகியோர் வரவேற்றனர்.
    சென்னை:

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் இன்று சென்னை வந்தார். காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்த ராகுலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ்குண்டு ராவ் ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் அங்கிருந்து காரில் அடையாறு வந்தார். அங்கு வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா, மா.சுப்பிரமணியன், செல்வ பெருந்தகை ஆகியோருக்கு ஆதரவு கேட்டு ராகுல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    எனது முழு வலிமையையும் சேர்த்து பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணியை ஏன் எதிர்க்கிறேன் என்பதற்கு சில உதாரணங்களை உங்களிடம் இப்போது நினைவுபடுத்துகிறேன்.

    அமேதி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி பா.ஜனதாவில் இணைந்தார். அவர் அமித்ஷா சோபாவில் அமர்ந்திருக்க அவர் முன்பு கும்பிடு போட்டபடி நின்று கொண்டிருந்தார். அவ்வாறு கையெடுத்து கும்பிடுவதை நான் அவமரியாதையாக நினைக்கவில்லை.

    ஆனால் ஒரு மக்கள் பிரதிநிதி இவ்வாறு அடிமைபோல் நிற்பதை நான் விரும்பவில்லை. ஆனால் பா.ஜனதாவை பொறுத்தவரை இந்த மாதிரி பழக்க வழக்கங்களைத்தான் எதிர்பார்க்கிறது.

    பா.ஜனதாவில் இருந்தாலும் சரி, அதன் கூட்டணி கட்சிகளில் இருந்தாலும் சரி அவர்களுக்கெல்லாம் இந்த மாதிரியான அவமரியாதை மட்டும்தான் கிடைக்கும்.

    மோடி, அமித்ஷா முன்பு அவர்களால் கைகட்டிதான் நிற்க முடியும். ஆனால் எங்களுடைய சித்தாந்தில் ஏற்றத்தாழ்வு எதுவும் கிடையாது. எங்கள் பார்வையில் தமிழக மக்கள் அனைவரும் சமம்தான். அனைவரும் சகோதர, சகோதரிகள்தான்.

    இப்போது பாரத நாட்டில் 2 சித்தாந்தங்கள் உள்ளது. ஒன்று எல்லோரும் தனக்கு கீழ்தான் என்று நினைப்பது. அது ஆர்.எஸ்.எஸ்., மோடி, அமித்ஷா ஆகியோரின் சித்தாந்தம். இன்னொரு சித்தாந்தம் சகோதரத்துவத்துடன் அனைவரிடமும் பாசம், மரியாதை காட்டுவது. அதைத்தான் நாங்கள் நம்புகிறோம்.

    தொன்மையான பாரம்பரியமும், கலாச்சாரமும் மிகுந்த தமிழகத்தின் முதல்-அமைச்சர், அமித்ஷா, மோடியின் கால்களில் விழுந்து கிடக்கிறார்.

    தமிழகத்திற்கு நீண்ட நெடிய வரலாறும், பாரம்பரியமும் உள்ளது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த மாநிலத்தின் முதல்வர் இவ்வாறு விழுந்து கிடப்பதை பார்த்துதான் கோபம் வருகிறது.

    அதனால்தான் உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கிறேன். தமிழகத்தை டெல்லி, ஆட்சி செய்யக்கூடாது. தமிழகத்தில் இருந்துதான் ஆட்சி செய்ய வேண்டும்.

    இந்தியாவின் மையப்புள்ளி அனைத்து தரப்பினரையும், அனைத்து மொழிகளையும் அரவணைத்து செல்வதில் தான் இருக்கிறது. ஒரு பாரம்பரியத்தைவிட இன்னொரு பாரம்பரியம் மேலானது என்று சொன்னால் அப்படிப்பட்ட இந்தியா வேண்டாம்.

    தமிழ், கன்னடம், பஞ்சாபி, வங்காளி என்று அனைத்து மொழிகளும் சேர்ந்ததுதான் இந்தியா. ஆனால் ஒரு பெரிய மாநிலத்தின் முதல்-அமைச்சர் பிரதமரின் காலில் விழுந்து கிடந்தால், அது இந்தியா அல்ல.

    உ.பி. முதல்-அமைச்சர் அமித்ஷா காலில் விழுந்து கிடக்கிறார். ஏன்? அவர் நேர்மை இழந்ததால்தான். எனவே அவருக்கு வேறு வழியில்லை.

    அதே நிலையில்தான் தமிழகமும் உள்ளது. மானம் உள்ள தமிழர்கள் யாரும் காலில் விழுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் தமிழக முதல்-அமைச்சருக்கு காலில் விழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    மக்களிடம் சுரண்டிய பணத்தால் அவர் நேர்மை இழந்துவிட்டார். அதனால்தான் காலில் விழவேண்டிய கட்டாயம். எனவேதான் நான் முழு வலிமையையும் கொடுத்து பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றை வீழ்த்த போராடுகிறேன்.

    தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் தேவை. தமிழகம் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்த மாநிலத்தில் திறமையும், அறிவும் மிகுந்த இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை.

    பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. புதிய சிந்தனையும், புதிய வழிமுறைகளும் தேவைப்படுகிறது. அது தமிழகத்தின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மையமாக வைத்து இருக்க வேண்டும். எங்கள் மத சார்பற்ற கூட்டணி அரசாங்கம் இதை நிச்சயம் செய்யும்.

    மக்களை மதிக்கும் அரசாக, மக்கள் மதிக்கும் அரசாக மதச்சார்பற்ற கூட்டணி அரசு இருக்கும். டெல்லியால் கட்டுப்படுத்தப்படும் அரசாக இருக்காது.

    தற்போது தமிழரின் பண்பாட்டின் மீது தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. இதை குறைத்து மதிப்பிடாதீர்கள். இதற்கு பின்னால் மிகப்பெரிய பணபலம் உள்ளது. இந்த தாக்குதலை தொடங்கி வைத்தது ஆர்.எஸ்.எஸ்.தான் அவர்கள் எதிர்பார்ப்பது அவர்கள் முன்பு தமிழகம் மண்டியிட வேண்டும் என்பதுதான்.

    ஆனால் 3000 ஆண்டு பழமையான வரலாறு கொண்ட தமிழர்கள் யாரிடமும் தலைகுனிந்த சரித்திரம் இல்லை. தமிழர்கள் எல்லோரையும் மரியாதையாகவே நடத்துவார்கள். யாரையும் மரியாதை குறைவாக நடத்துவதில்லை.

    தமிழக மக்களை அரவணைத்தால் அவர்களும் அரவணைப்பார்கள். இதை நானும் என் குடும்பமும் புரிந்து வைத்துள்ளோம். நாம் ஒரு மடங்கு அன்பை கொடுத்தால், அவர்கள் அதை பல மடங்காக திருப்பி தருவார்கள். இதை போன்ற மரியாதை உள்ள உறவை தவிர வேறு எதையும் எதிர் பார்க்கவில்லை. தமிழகம் இல்லாமல் இந்தியா இல்லை. இந்தியாவின் அடித்தளமாக நீங்கள் இருக்கிறீர்கள்.

    இவ்வாறு ராகுல் பேசினார்.
    Next Story
    ×