search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனிமொழி பிரசாரம் செய்த காட்சி.
    X
    கனிமொழி பிரசாரம் செய்த காட்சி.

    அ.தி.மு.க.வை இந்த தேர்தலோடு அகற்ற வேண்டும்- கனிமொழி

    திமுக ஆட்சிக்கு வந்த உடன் பெண்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு குழு அமைத்து பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    நாகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் முகமது ஷா நவாசை ஆதரித்து இன்று நாகூரில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்தார்.

    மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆட்சி அடித்தட்டு மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. புதிய வேளாண் திருத்த சட்டம், தொழிலாளர் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் என சிறுபான்மை மக்கள், விவசாயிகள், தொழிலாளர்களை பாதிக்கும் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதற்கு துணையாக அ.தி.மு.க. நின்று மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. தற்போது தேர்தல் வருவதால் அ.தி.மு.க. நாடகம் ஆடுகிறது. தமிழ் கடவுள் முருகரை அரசியல் லாபத்துக்காகவே பா.ஜனதா பயன்படுத்துகிறது. மேலும் நீட் தேர்வை கொண்டு வந்து பல மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்துள்ளது. மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதனை கண்மூடி ஆதரிப்பதே அ.தி.மு.க. வாடிக்கையாகும். தற்போது அவர்கள் உருவாக்கி உள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும்.

    எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதலமைச்சராக பொறுப்பேற்றார் என்பது அனைவருக்கும் தெரியும்.  ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. இதனை விசாரிக்க ஆணையம் அமைத்தும் எந்த பயனும் இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் சரியான முறையில் விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கும் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். ஆனால் கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதியை கூட அ.தி.மு.க. நிறைவேற்றவில்லை. தமிழகத்துக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை தொகையான ரூ.15 ஆயிரத்து 475 கோடியை இன்னமும் மத்திய அரசிடம் இருந்து அ.தி.மு.க. பெறவில்லை. இதேப்போல் புயல், மழையால் கேட்ட இழப்பீட்டு தொகையில் மிக சொற்ப அளவிலேயே மத்திய அரசு நிதி ஒதுக்கி அநீதி இழைத்தது. அதனையும் வேடிக்கை பார்க்க மட்டுமே அ.தி.மு.க.வால் முடிந்தது.

    தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் அ.தி.மு.க.வை இந்த தேர்தலோடு அகற்ற வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் பெண்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு குழு அமைத்து பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.

    நாகையில் மீன்பதப்படுத்தும் தளம் அமைக்கப்படும். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும். உர தொழிற்சாலை நிறுவப்படும். இயற்கை விஞ்ஞானி பெயரில் இயற்கை வேளாண் மையம் அமைக்கப்படும். இதுபோல் பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படும். நீங்கள் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×