search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.டி.வி.தினகரன்
    X
    டி.டி.வி.தினகரன்

    ஜெயலலிதா ஆட்சி அமைய அமமுக-தேமுதிக கூட்டணியை ஆதரியுங்கள்- டி.டி.வி.தினகரன் பேச்சு

    ஜெயலலிதா ஆட்சி அமைய அ.ம.மு.க.-தே.மு.தி.க.கூட்டணியை ஆதரியுங்கள் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேட்டுக் கொண்டார்.
    அரவக்குறிச்சி:

    அரவக்குறிச்சி தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி.எஸ்.என்.தங்கவேலுவை ஆதரித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.ம.மு.க. ஒரு மாற்று சக்தியாக வெற்றி கூட்டணியாக உள்ளது. துரோகிகள் எல்லாம் ஒரே கூட்டணியாக உள்ளனர். இன்னொருபுறம் தீய சக்தி என எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட தி.மு.க. எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று தவியாய் தவித்துக்கொண்டு இருக்கிறது.

    தி.மு.க. கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தபோது அவர்களுடைய நடவடிக்கைகள் உங்களுக்கு நன்றாக தெரியும். குறிப்பாக அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் போலீசுக்கு வேலை இல்லாமல் போய் விடும். ஆட்சி அதிகாரம் செய்து மக்கள் வரிப்பணத்தை ருசித்த கரூரில் ஆளும் கட்சி வேட்பாளரும், எதிர்க்கட்சி வேட்பாளரும் நிற்கிறார்கள்.

    கரூரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று பேசப்படுகிறது. உண்மையான ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அரவக்குறிச்சி தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி.எஸ்.என்.தங்கவேலுவுக்கு குக்கர் சின்னத்திலும், கரூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருக்கு முரசு சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன். நாங்கள் வெற்றி பெற்றால் அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை அமைத்து வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவோம்.

    கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், நெசவுத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு வட்டி இல்லா கடன், 60 வயதிற்கு மேற்பட்ட நெசவுத் தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இஸ்லாமியர்களுக்காக தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் போது ஏற்படும் இடர்பாடுகளை களைய இஸ்லாமியர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×