search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    போடியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம்

    போடியில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட வேட்பாளர்களுக்கு வாக்குசேகரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
    தேனி:

    தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்குசேகரித்து பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி, தேர்தல் பிரசார சுற்றுப் பயணமாக எடப்பாடி பழனிசாமி தேனி மாவட்டத்துக்கு இன்று (சனிக்கிழமை) வருகிறார்.

    அவருக்கு இன்று மாலை 4.30 மணியளவில் ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர் அவர் தேனி வழியாக போடிக்கு செல்கிறார். போடியில் மாலை 5.30 மணியளவில், போடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து வாக்குசேகரிக்கிறார். மேலும், கம்பம், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி) தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும் வாக்குசேகரித்து பேசுகிறார்.

    போடியில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு தேனி வழியாக மதுரைக்கு செல்கிறார். இந்த பிரசாரத்துக்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர். முதல்-அமைச்சரின் தேர்தல் பிரசாரம் என்பதால் ஆண்டிப்பட்டி, தேனி, போடி மட்டுமின்றி அவர் செல்லும் சாலையோரம் உள்ள ஊர்களிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
    Next Story
    ×