search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த்
    X
    விஜயகாந்த்

    கணீர் குரலில் கர்ஜித்த விஜயகாந்த் பேச முடியாமல் தவிக்கும் பரிதாபம்- தேமுதிக தொண்டர்கள் கண்ணீர்

    தேர்தல் பிரசாரத்தின் போது விஜயகாந்த் ஆவேசமாகவும், அதிரடியாகவும் தனது பேச்சுக்கள் மூலம் கவர்ந்தார். விஜயகாந்தின் பேச்சுக்கள் தேர்தல் களத்தில் பொதுமக்களால் பேசப்படும் வகையில் அமைந்து இருந்தன.


    விஜயகாந்த் என்றதுமே அவரது கணீர் குரலும், கம்பீர மான பேச்சுமே நினைவுக்கு வரும். திரைப்படங்களில் அதிரடி நாயகனாக ஜொலித்த விஜயகாந்த், ஒரே டேக்கில் பக்கம் பக்கமாக வசனங்களை பேசுவதில் வல்லவர்.

    இந்த பேச்சுக்களும் அதிரடியுமே சினிமாவில் அவரது பலமாக பார்க்கப்பட்டது. அதே அதிரடியை அரசியலிலும் செய்து காட்டியவர் விஜயகாந்த்.

    கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் மக்கள் செல்வாக்குடன் இருந்த போதே அரசியலில் தைரியமாக குதித்த விஜயகாந்த், 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கினார்.

    கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டு (2006) நடைபெற்ற முதல் தேர்தலிலேயே வெற்றியை ருசித்தார் விஜயகாந்த். தே.மு.தி.க. சார்பில் களம் இறங்கியவர்கள் 8 சதவீதத்தும் அதிகமான ஓட்டுகளை பெற்று அசத்தினார்கள்.

    அதன் மூலம் தமிழக தேர்தல் களத்தில் விஜயகாந்த் எதிர்காலத்தில் தானும் ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்துக் காட்டினார்.

    இதன் பின்னர் 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் விஜயகாந்த் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

    தேர்தல் பிரசாரத்தின் போது விஜயகாந்த் ஆவேசமாகவும், அதிரடியாகவும் தனது பேச்சுக்கள் மூலம் கவர்ந்தார். விஜயகாந்தின் பேச்சுக்கள் தேர்தல் களத்தில் பொதுமக்களால் பேசப்படும் வகையில் அமைந்து இருந்தன.

    சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த விஜயகாந்த், ஜெயலலிதாவுடன் நேருக்கு நேர் எதிர்த்து நின்று பேசிய வீடியோக்கள் இப்போதும் பலரால் ரசித்து பார்க்கப்படுகிறது.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு சென்றும் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் முன்புபோல சுறுசுறுப்பாக அவரால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

    இந்தநிலையில் கொரோனா தொற்றும் கடந்த ஆண்டு விஜயகாந்துக்கு ஏற்பட்டது.

    டாக்டர்களின் அறிவுரையின் பேரில் வீட்டிலேயே மருந்து மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டு முழு ஓய்வில் இருந்து வருகிறார். இருப்பினும் அரசியல் களத்தில் விஜயகாந்த்தை முன்னிறுத்தியே தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் தே.மு.தி.க. இருந்து வருகிறது.

    இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்தும் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவரால் பேச முடியவில்லை.

    திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களை பார்த்தும், கட்சியினரை பார்த்தும் கைகளை காட்டி சைகை மட்டுமே அவரால் செய்ய முடிகிறது. ஒழுங்காக நிற்பதற்குகூட விஜயகாந்தால் இயலவில்லை. உதவியாளர் துணையுடனேயே நின்று கொண்டு விஜயகாந்த் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

    கும்மிடிப்பூண்டியில் பிரசாரம் செய்த அவர், சென்னையிலும் இதே பாணியில்தான் பிரசாரம் செய்தார். விஜயகாந்தின் இந்த பரிதாப நிலையை பார்த்து தே.மு.தி.க. தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கண்ணீர் வடித்தனர்.

    விஜயகாந்தின் உடல் நிலை பற்றி அடிக்கடி கருத்து தெரிவிக்கும் அவரது மனைவி பிரேம லதா ‘‘விஜயகாந்த், கேப்டன் மீண்டும் பழைய கேப்டனாக வருவார்’’ என்று கூறி வந்துள்ளார். ஆனால் விஜயகாந்தின் உடல்நிலையை பார்க்கும் போது அவர் மீண்டும் பழைய விஜயகாந்தாக வருவாரா? என்பது கேள்விக்குறியாகவே மாறி இருக்கிறது.

    தே.மு.தி.க. தொண்டர்களும், விஜயகாந்த் மீண்டும் தனது கணீர் குரல் மூலம் எப்போதும் போல பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபடுவாரா? என்று எதிர்பார்க்க தொடங்கி உள்ளனர்.

    விஜயகாந்தின் உடல்நிலை தேறி மீண்டும் அவர் அரசியல் களத்தில் பரபரப்பான அரசியல்வாதியாக மாற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×