search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
    X
    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

    புதிதாக பெயர் சேர்த்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் 30-ந்தேதிக்குள் வழங்கப்படும்- சத்யபிரத சாகு

    தபால் ஓட்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் தபால் ஓட்டுகளை வழங்கும் தேதிகள் முடிவு செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்த்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி வருகிற 30-ந்தேதிக்குள் முடிவடையும்.

    தமிழகத்தில் தபால் ஓட்டுகளை வினியோகிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தபால் ஓட்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் தபால் ஓட்டுகளை வழங்கும் தேதிகள் முடிவு செய்யப்படும்.

    80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்குரிமை உள்ளது. இதற்காக ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படும். தபால் ஓட்டு போட உரிமை பெற்றவர்களின் விவரங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளரிடம் பட்டியலாக அளிக்கப்படும்.

    தபால் ஓட்டுகளுடன் வாக்குச்சாவடி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகளை வினியோகித்து அதனை பெறுவார்கள். தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6-ந்தேதிக்கு முந்தைய தினத்துக்குள் தபால் வாக்குகள் வினியோகம் முடிக்கப்படும்.

    தமிழகத்தில் மொத்தம் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 300 வாக்குச்சாவடிகள் சட்டம்-ஒழுங்கை பேணி காக்கவேண்டிய நிலையில் உள்ளன. 10,528 வாக்குச்சாவடிகளில் பணம், பரிசு பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கும் சூழ்நிலை நிலவுகிறது. அதை தடுக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

    எனவே மொத்தம் 10,828 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. 105 தொகுதிகள் அதிகம் பணம் புழங்கும் தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதலாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    மொத்தம் 44,758 வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×