search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கடையில் ஜி.கே.வாசன் பஸ்சில் வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.
    X
    புதுக்கடையில் ஜி.கே.வாசன் பஸ்சில் வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.

    தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மக்களை ஏமாற்றும் செயல்- ஜி.கே.வாசன்

    தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மக்களை ஏமாற்றுகின்ற கணிப்பு என்று த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
    நாகர்கோவில்:

    கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் த.மா.கா. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் நேற்று குமரி மாவட்டம் வந்தார்.

    இதை தொடர்ந்து அவர் கருங்கல் சந்திப்பில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் குறும்பனை, ஆலஞ்சி, மிடாலம், மேல் மிடாலம், இனயம், தூத்தூர், தேங்காப்பட்டணம், பைங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு திறந்த வாகனத்தில் சென்றபடி பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற கருத்து கணிப்பு வெளியாகி வருகிறது. ஆனால் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் மக்களை ஏமாற்றும் கணிப்பு ஆகும். மக்கள் கணிப்பு என்பது தேர்தல் அன்று வெளிப்பட கூடியது. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் தமிழகத்திற்கு முழுமையாக வந்து சேர்ந்துள்ளன. இதன் மூலம் தமிழகம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக வரக்கூடிய நல்ல சூழல் இருக்கும்போது நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

    குமரி மாவட்டத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மிக பிரமாண்டமான பாலங்களை அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைத்ததோடு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து கொண்டு வந்த பெருமை பொன்.ராதாகிருஷ்ணனை சேரும். மக்களோடு மக்களாக இருந்து தொகுதிக்கு நல்ல திட்டங்களை மக்களுக்கு கொடுத்த பா.ஜனதா கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுக்கடையில் வாக்கு சேகரித்த ஜி.கே. வாசன் திடீரென அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் ஏறினார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகளிடம் இரட்டை விரலை காட்டி வாக்கு கேட்டார். மேலும் பயணிகளுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து சாலையோரம் உள்ள ஓட்டலுக்கு சென்று டீ மற்றும் பலகாரங்களையும் சாப்பிட்டார்.
    Next Story
    ×