search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி - முக ஸ்டாலின்
    X
    ராகுல் காந்தி - முக ஸ்டாலின்

    சேலத்தில் 28ந்தேதி திமுக பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின்-ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம்

    சேலத்தில் வரும் 28-ந்தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க. கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதால் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து கடந்த 12-ந்தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. 19-ந்தேதி வேட்புமனுக்கள் பெறுவது நிறைவடைந்தது.

    மொத்தம் 7,250 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இதில் 4,488 மனுக்கள் ஏற்கப்பட்டன. இந்த வேட்பு மனுக்களில் 440-க்கும் கூடுதலான மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.

    அதன்படி இந்த தேர்தலில் 4,061 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இந்த வேட்பாளர்கள் போட்டியிடக்கூடிய சின்னங்களும் ஒதுக்கப்பட்டு விட்டன. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்கள் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

    அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி வேட்பாளர்களையும், கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இது தவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் பிரசாரத்தில் உள்ளனர்.

    இது தவிர மற்ற உள்ளூர் தலைவர்களும், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    தேசிய தலைவர்களான பிரதமர் மோடி தமிழகத்திற்கு 2 முறை வந்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார். தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 30-ந்தேதி தாராபுரம் பொதுக்கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகனை ஆதரித்தும், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் ஒரே மேடையில் பேச உள்ளார்.

    இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    இதை தொடர்ந்து அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஒரே மேடையில் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஏப்ரல் 2-ந் தேதி மதுரையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுவதுடன், கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

    இதேபோல் தி.மு.க. கூட்டணியிலும் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பேசுவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்தது.

    ராகுல்காந்தி ஏற்கனவே கன்னியாகுமரியில் பிரசாரத்திற்கு வந்துவிட்டு சென்றதால் மீண்டும் தமிழகத்திற்கு பிரசாரம் செய்ய வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    ராகுல்காந்தி யுடன், பிரியங்காவும் தேர்தல் பிரசாரத்திற்கு வருவாரா? என்ற கேள்வியும் காங்கிரசார் மத்தியில் எழுப்பப்பட்டு வந்தது.

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்திற்கு மீண்டும் ராகுல்காந்தி சுற்றுப் பயணம் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ராகுல்காந்தி- மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு சேலத்தில் வருகிற 28-ந் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து சேலம், சீலன்நாயக்கன்பட்டியில் ஞாயிற்றுகிழமை (28-ந் தேதி) மாலை 4 மணிக்கு இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இதில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, திராவிட கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்கு மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன், ஆதி தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், மக்கள் விடுதலை கட்சி நிறுவன தலைவர் முருகவேல் ராஜன் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

    அகில இந்திய தலைவர்கள் தமிழகத்தில், கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச இருப்பதால் தமிழக தேர்தல் களம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    Next Story
    ×