search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
    X
    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

    தமிழகத்தில் 6.29 கோடி வாக்காளர்கள்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 7,255 வேட்புமனுக்களில் 4,512 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தலை நடத்த தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு 7,255 பேர் மனுதாக்கல் செய்து இருந்தனர். இதில் 4,512 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

    தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் நடத்தி வருகிறது.

    தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் கணக்கில் வராத ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.83.99 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.

    ரூ.1.70 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ.231 கோடி அளவுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் சிக்கி உள்ளன.

    சட்டசபை தேர்தலில் 6.29 கோடி வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கு தகுதியானவர்களாக உள்ளனர். வாக்காளர்கள் எண்ணிக்கை 6.21 கோடியில் இருந்து 6.29 கோடியாக தற்போது உயர்ந்துள்ளது.

    இவர்களில் 3.09 கோடி ஆண் வாக்காளர்களும், 3.19 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். 7,192 திருநங்கைகளும் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

    தமிழகத்தில் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 8,153 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 ஆயிரத்து 712 பேர் ஆயுதங்களை திரும்ப ஒப்படைத்துள்ளனர். இதுவரை அரசியல் கட்சிகளிடம் இருந்து 1,971 புகார்கள் வந்துள்ளன. இதில் 1,368 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 12.87 லட்சம் பேர் உள்ளனர். இதில் 1 லட்சத்து 49 ஆயிரம் பேர் மட்டுமே தபால் ஓட்டு போடுவதற்கு பதிவு செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×