search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள்.
    X
    பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள்.

    தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கிறது- வேட்பாளர்கள் வீடு, வீடாக செல்ல அனுமதி

    தேர்தலுக்கு இன்னும் 2 வார காலம்தான் உள்ளதால் ஒவ்வொரு கட்சி தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க. கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    தேர்தலில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கோவில்பட்டியிலும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கிலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூரிலும் போட்டியிடுகிறார்கள்.

    இவர்களது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 234 தொகுதிகளில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டு இருந்த 7155 மனுக்களில் 3,681 மனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் ஏற்கப்பட்டுள்ளது.

    2185 மனுக்கள் இன்று காலை வரை தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுக்கள் வாபஸ் பெற நாளை கடைசி நாள். எனவே நாளை மாலை 5 மணிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் எத்தனை பேர் என்ற விவரம் தெரிய வரும்.

    தேர்தலுக்கு இன்னும் 2 வார காலம்தான் உள்ளதால் ஒவ்வொரு கட்சி தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த டிசம்பர் மாதமே பிரசாரத்தை தொடங்கி இருந்தாலும் தற்போது எந்தெந்த தொகுதிக்கு யார்? யார் வேட்பாளர் என்பது முடிவாகிவிட்டதால் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பிரசாரத்தில் இறங்கி உள்ளார்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து சுற்றுப்பயணம் செய்து பேசி வருகிறார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் ஜீப்பில் சென்று பிரசாரம் செய்வதற்கும், வீதி வீதியாக நடந்து சென்று ஓட்டு கேட்பதற்கும் தேர்தல் கமி‌ஷன் அனுமதி அளித்து வருகிறது.

    இதுவரை முக்கிய பிரமுகர்களை மட்டுமே வேட்பாளர்கள் சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு கேட்ட வண்ணம் இருந்தனர். அதுமட்டுமின்றி வியாபார பிரமுகர்கள், நலச்சங்க நிர்வாகிகள், கூட்டணி கட்சி பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவுகோரி வந்தனர். ஆனால் இப்போது வேட்பு மனுதாக்கல் முடிந்துவிட்டதால் வேட்பாளர்களும் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் கமி‌ஷன் அனுமதி அளித்து வருகிறது.

    அதன்படி வேட்பாளர்கள் தற்போது தொகுதிகளில் வலம்வந்து பிரசாரம் செய்து வருகின்றனர். ஆட்டோ, ஜீப், வேன்களில் சென்று பிரசாரம் செய்வதற்கு தேர்தல் கமி‌ஷன் அனுமதி கொடுத்துள்ளதால் ஒவ்வொரு வேட்பாளர்களும் வீதிகளில் பிரசாரம் செய்து ஓட்டு கேட்டு வருகின்றனர்.

    இதேபோல் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் பிரசாரத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் எந்தெந்த வாகனங்களை பிரசாரத்துக்கு பயன்படுத்த உள்ளனர் என்கிற விவரங்களை தேர்தல் கமி‌ஷனில் தெரிவித்து அனுமதி பெற்று வருகின்றனர்.

    நாளை (திங்கட்கிழமை) இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களுக்கு கட்சி சின்னங்கள் ஒதுக்கப்படும். சுயேட்சைகள் உள்ளிட்ட மற்ற வேட்பாளர்களுக்கு என்னென்ன சின்னங்கள் என்பது நாளை மாலை தெரியவரும். அதன்பிறகு அந்த வேட்பாளர்கள் சின்னத்துடன் சென்று ஓட்டு கேட்க உள்ளனர்.

    ஆனாலும் இப்போதே வீடு வீடாக ஓட்டு கேட்பதற்கு அவர்களுக்கு தேர்தல் கமி‌ஷன் அனுமதி கொடுத்துள்ளது. இதனால் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வருவதால் பிரசாரம் சூடுபிடித்து தேர்தல் களை கட்டத்தொடங்கி உள்ளது.
    Next Story
    ×