search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அர்ஜுன மூர்த்தி
    X
    அர்ஜுன மூர்த்தி

    சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை- புதிய கட்சியை தொடங்கிய அர்ஜுன மூர்த்தி திடீர் அறிவிப்பு

    வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்த அர்ஜுன மூர்த்தி சமீபத்தில் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு இருந்தார். அவரது கட்சிக்கு ரோபோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அக்கட்சிக்கு பொறுப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமிப்பதாக அறிவித்தார்.

    அர்ஜுன மூர்த்தி பா.ஜனதாவில் இருந்து விலகி ரஜினி கட்சியில் இணைந்தார். அவருக்கு மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் ரஜினி தனக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார்.

    இதையடுத்து அர்ஜுன மூர்த்தி தான் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். அக்கட்சிக்கு இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்று பெயர் சூட்டி கொடிகளையும் அறிமுகப்படுத்தினார்.

    வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்த அர்ஜுன மூர்த்தி சமீபத்தில் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு இருந்தார். அவரது கட்சிக்கு ரோபோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

    இந்தநிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்று அர்ஜுன முர்த்தி திடீரென்று இன்று அறிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கள பிரசாரம் உள்ளிட்டவற்றை குறுகிய காலத்தில் கையாள நமக்கு இடம் தரவில்லை. ரோபோ சின்னத்துக்கு தொழில்நுட்ப வரிசை படுத்துதல் போன்றவற்றை செயல்படுத்த குறுகிய காலமே இருந்தது. முழுமையான களப்பணியாற்ற முடியாததால் தேர்தலில் போட்டியிடவில்லை.

    எங்கள் கொள்கையின் அடிப்படையில் கள பலத்தை வளர்த்துக்கொள்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே தமிழருவி மணியன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×