search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல் முருகன்
    X
    எல் முருகன்

    அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்- எல் முருகன் பேட்டி

    தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி தலைமையில் இணையவழியில் நடக்க உள்ளது.
    சென்னை:

    திருப்பரங்குன்றம் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன் நேற்று திடீரென பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அப்போது பேசிய மாநிலத்தலைவர் எல்.முருகன், அ.தி.மு.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்தார்.

    சென்னையில் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசார வாகனத்தை தமிழக. பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், அதிருப்தியில் இருந்து வந்த திருப்பரங்குன்றம் தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் அக்கட்சியில் இருந்து விலகி, எல்.முருகன் முன்னிலையில் நேற்று பா.ஜ.க.வில் சேர்ந்தார். அவருக்கு உறுப்பினர் அட்டையை எல்.முருகன் வழங்கினார்.

    அப்போது, துணைத்தலைவர் சக்கரவர்த்தி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், கு.க.செல்வம் எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    இதையடுத்து எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்சியில் சேர்ந்த டாக்டர் சரவணனை வரவேற்கிறேன். கடந்த வாரம் கு.க.செல்வம் எம்.எல்.ஏ., அதற்கு முன்னதாக நடிகர் செந்தில் ஆகியோர் பா.ஜ.க.வில் சேர்ந்தனர். பா.ஜ.க.வில் பிரபலங்கள் சேருவது எங்களுக்கு ஊக்கம் தருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் பிரசார வாகனத்தை தொடங்கியிருக்கிறோம். பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் இந்த வாகனங்கள் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படும். மத்திய-மாநில அரசுகளின் சாதனைகளையும், திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்ல இருக்கிறோம்.

    தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமையில் இணையவழியில் நடக்க உள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கை பொய்யும், புரட்டும் கொண்ட ஏமாற்று அறிக்கையாக இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்காக பொய் சொல்லிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் கொள்ளை அடிப்பவர்கள்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, ஊழல், நிலஅபகரிப்பு நடைபெறும். இதனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தில் மக்கள் நலனுக்காக செயல்டும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்கும். அ.தி.மு.க. சொல்வதை செய்யும். தி.மு.க. சொல்வதை செய்யமாட்டார்கள். காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் என்பது புதியது அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து டாக்டர் சரவணன் கூறுகையில், ‘‘என்னுடைய சேவைக்காக நான் மக்கள் மத்தியில் அறியப்பட்டவன். மாவட்ட செயலாளர்கள் எனக்கு, அமைதியாக நெருக்கடி கொடுத்தார்கள். அவர்களை மீறி என்னால் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை. அதனால் பா.ஜ.க.வில் சேர்ந்தேன். தி.மு.க.வில் இருந்து வெளியேற மாவட்ட செயலாளர்கள் தான் காரணம். கம்யூனிஸ்டு கட்சி திருப்பரங்குன்றம் தொகுதியை கேட்காதபோதிலும், தன்னிச்சையாக அந்த தொகுதியை மாவட்ட செயலாளர்கள் பரிசீலித்தார்கள்’’ என்றார்.

    இதற்கிடையே மதுரை வடக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக டாக்டர் சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து எல்.முருகன் கூறுகையில், ‘டாக்டர் சரவணன் கட்சியில் நேற்றே (நேற்று முன்தினம்) இணையவழியாக சேர்ந்துவிட்டார். இன்று (நேற்று) அதிகாரப்பூர்வமாக மக்கள் மத்தியில் பா.ஜ.க.வில் சேர்ந்தார். அவர் ஏற்கனவே, எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். அவர் ஒரு பிரபலமான மருத்துவர். அந்த பகுதியில் உள்ள பெரிய சமுதாயத்தை சேர்ந்தவர். இவற்றை எல்லாம் பார்த்து தான் அவருக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.க தேர்தல் அறிக்கை வருகிற 21-ந் தேதி மக்களின் குரலாக ஒலிக்கும். 18-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×