search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    ஜெயலலிதா மரணத்துக்கு காரணமே கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் தான்- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    ஜெயலலிதா மரணத்துக்கு காரணமே கருணாநிதியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தான். ஆண்டவன் நிச்சயம் அதற்கான தண்டனையை கொடுப்பான்'' என்று எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பின்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 4¼ ஆண்டு கால ஆட்சியில் மக்களின் நன்மைக்காக பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மழை வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலன் கருதி கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டது. ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் வரும்போதுதான் தேர்தல் அறிக்கை வெளியிட்டு திட்டங்களை அறிவிப்பார்கள். பின்னர் ஆட்சிக்கு வந்து திட்டங்களை நிறைவேற்றுவார்கள். ஆனால் அ.தி.மு.க. அரசு தேர்தலுக்கு முன்பாக இதை செய்தது.

    குடிமராமத்து திட்டம் மூலம் மழைநீர் வீணாவது தடுத்து நீர்நிலைகளில் சேமிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது, நடந்தாய் வாழி காவிரி, காவிரி-குண்டாறு திட்டம் உள்ளிட்ட நீர்மேலாண்மைக்கான திட்டங்கள் கொண்டுவந்தது என அ.தி.மு.க. அரசின் சாதனைகள் ஏராளம். 2006-2011-ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தில் கடுமையான மின்வெட்டால் மக்கள் அவதிக்கு ஆளானார்கள். ஆனால் இன்று தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு எண்ணற்ற நல்ல திட்டங்களால் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. குறிப்பாக அத்திக்கடவு-அவினாசி திட்டம் 50 ஆண்டு கால விவசாயிகளின் கோரிக்கை ஆகும். அந்த கோரிக்கையை நிறைவேற்றி வைக்கும் விதமாக ரூ.1,652 கோடியில் அந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. இந்த பணி இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்.

    இப்படி பல திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறோம். அந்தவகையில் இனிவரும் காலங்களிலும் தமிழகம் சிறப்பான மாநிலமாக விளங்க நல்ல திட்டங்களை தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:- கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் ரத்து, கூட்டுறவு வங்கிகளில் 6 பவுனுக்கு கீழே உள்ள நகைக்கடன் ரத்து, விவசாயிகளுக்கு மும்முனை மின்சார திட்டம் என நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களைத்தான் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிப்புகளாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த திட்டங்கள் எல்லாம் அறிவிக்கப்பட்டு பணிகளும் நடந்து வருகின்றன. சட்டமன்றத்தில் எங்களது அறிவிப்புகளை தான் அவர்கள் புதிதாக தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்திருக்கிறார்கள்.

    கேள்வி:- பெட்ரோல்-டீசல் விலை எவ்வளவு குறைக்கப்படும்?

    பதில்:- இப்போதுதான் தேர்தல் அறிக்கையில் இதை அறிவித்துள்ளோம். அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்படும்.

    கேள்வி:- அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே?

    பதில்:- ஊழல் செய்ததே தி.மு.க. தான். இன்று 13 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. முதலில் அந்த வழக்குகளை சந்திக்க சொல்லுங்கள். 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வாய்தா தான் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
    ஜெயலலிதா
    கேள்வி:- ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே?

    பதில்:- ஜெயலலிதா மரணத்துக்கு காரணமே தி.மு.க. தான். ஆண்டவன் நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை கொடுப்பான். ஜெயலலிதா யாரால் இறந்தார்? என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தவறான, அவதூறான பிரசாரத்தை நாட்டில் பரப்பி வருகிறார்கள். ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை கண்டிப்பாக தண்டிக்கும். ஜெயலலிதா நன்மதிப்புடன் சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி கொண்டிருந்தார். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து நீதிமன்றமே அவரை நிரபராதி என்று கூறியது. ஆனாலும் அவர் வெளியே வந்தபிறகு, அவர் மீது வீண்பழி சுமத்தி மேல்முறையீட்டு வழக்கு போட்டு அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தினர். இதனாலேயே அவர் உரிய சிகிச்சை பெறமுடியாமல் துரதிருஷ்டவசமாக இந்த மண்ணை விட்டு மறைந்தார். இதற்கு காரணம் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் தான் என்பதை மக்கள் அறிவார்கள்.
    கருணாநிதி- முக ஸ்டாலின்
    கேள்வி:- அம்மா வாஷிங்மிஷின் திட்டத்தை எப்படி நிறைவேற்ற போகிறீர்கள்?

    பதில்:- உரிய நிதி ஆதாரத்தை பெருக்கி எங்களது வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும். ஏற்கனவே 2011, 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள திட்டங்களை நல்லபடியாக நிறைவேற்றினோம். அதுபோல இம்முறையும் செய்வோம்.

    மேற்கண்டவாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
    Next Story
    ×