search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டணி பேச்சுவார்த்தை
    X
    கூட்டணி பேச்சுவார்த்தை

    அமமுக தலைமையிலான அணியில் இணைந்தது தேமுதிக- 60 தொகுதிகளை பெற்றது

    தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன், அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க., தங்களுக்கு பா.ம.க.வுக்கு இணையாக தொகுதிகளை ஒதுக்காததால், கூட்டணியில் இருந்து கடந்த 9-ந்தேதி வெளியேறியது. அதன்பிறகு மாற்று கூட்டணி குறித்து தே.மு.தி.க. தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியதும் முதலில் தி.மு.க.வுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் தி.மு.க. அணியில் தொகுதி உடன்பாடு முடிந்துவிட்டதால் தே.மு.தி.க.வால் அங்கு செல்ல முடியவில்லை.

    அதனைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதேசமயம் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற கருத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் உறுதியாக இருந்தனர். இதனால் அமமுகவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், உடன்பாடு எட்டப்பட்டது. 

    இதையடுத்து அமமுக தலைமையிலான அணியில் இன்று தேமுதிக இணைந்துள்ளது. அமமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன், அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் ஆகியோர் கையெழுத்திட்டனர். தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 60 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.


    கூட்டணி உறுதியாகி, தொகுதி பங்கீடு செய்யப்பட்டதை அடுத்து, தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அமமுக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×