search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக பா.ஜ.க. மகளிரணி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.
    X
    தமிழக பா.ஜ.க. மகளிரணி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

    ‘தேசிய ஜனநாயக கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்’- வானதி சீனிவாசன் பேட்டி

    தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்கப்போகிறது என்று பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.
    சென்னை:

    பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர்சிங் ஹூடா செயல்பட்டதாக கூறி, அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழக பா.ஜ.க. மகளிரணி சார்பில் சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளர் நடிகை குஷ்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்தபின்னர் வானதி சீனிவாசன், நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி பெண்களை இழிவுபடுத்துவதாக நாங்கள் கருதுகிறோம். இந்த செயலுக்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிற கட்சிகளும் பெண்களுக்கான மரியாதையை கொடுக்காமல் இருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.எல்.ஏ.க்களை கூட எப்படி நடத்துகிறார்கள் என்று மக்களுக்கு சொல்லத்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

    தமிழகத்தில் கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கிய 20 தொகுதிகளும் திருப்தி அளிக்கின்றன. இந்த தொகுதிகளில் பா.ஜ.க. தான் வெற்றி பெற போகிறது. தமிழகத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்கப்போகிறது.

    தமிழகத்தில் யார், யாரெல்லாம் அரசாங்கத்தின் உதவிகளை பெறுகிறார்களோ?, அத்தனை பேருக்கும் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக அந்த உதவிகளை வழங்குவது தான் பிரதமரின் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. பா.ஜ.க. குடும்ப கட்சி இல்லை. பெண்கள், இளைஞர் என எல்லோருக்குமான கட்சி. குஷ்புவை பா.ஜ.க. எப்போதும் கைவிடாது. குஷ்புவுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை பா.ஜ.க. கொடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து நடிகை குஷ்பு, நிருபர்களிடம் கூறுகையில், “சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளராக எனக்கு கொடுத்த பணிகளை ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை செய்து கொண்டு வருகிறேன். நான் தேர்தலில் நிற்கப்போகிறேன், எனக்கு சீட் கொடுக்க வேண்டும் என்ற ஒப்புதலின் பேரில் நான் கட்சியில் சேரவில்லை. கட்சியின் மேல் உள்ள நம்பிக்கையில்தான் நான் சேர்ந்தேன். நிச்சயமாக இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதோடு, அசாம், மேற்கு வங்காளத்திலும் நான் தேர்தல் பிரசாரம் செய்வேன்” என்று குறிப்பிட்டார்.
    Next Story
    ×