search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீரங்கம் தொகுதி
    X
    ஸ்ரீரங்கம் தொகுதி

    அதிமுக - திமுக நேருக்குநேர் மோதும் ஸ்ரீரங்கம் தொகுதி கண்ணோட்டம்

    தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற வளர்மதிக்கு அதிமுக வாய்ப்பு கொடுக்காத நிலையில், 2016-ல் தோல்வியடைந்த எம். பழனியாண்டிக்கு திமுக வாய்ப்பு கொடுத்துள்ளது.
    ஸ்ரீரங்கம் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஸ்ரீரங்கம் சட்டபேரவை தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக கருதப்படுகிறது.

    தென்திசையில் காவிரியும், வடதிசையில் கொள்ளிடமும் தழுவிக்கொண்டோட நடு நாயகமாய் அமைந்துள்ளது ஸ்ரீரங்கம் தொகுதி.

    ஸ்ரீரங்கம் தொகுதி

    108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படுவதுமான 4 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட மிகப்பெரிய கோவிலான ரெங்கநாதர் கோவில் இந்த ஊரின் அடையாளம்.

    பெரும்பாலும் கிராமங்களை உள்ளடக்கிய இந்த தொகுதி நெல் விளையும் பூமியாகும். பல ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெல் விவசாயம் நடக்கிறது. இதேபோல் பல ஆயிரம் எக்டேர் பரப்பளவில் வாழையும், பூக்களும் விளைகின்றன.

    ஸ்ரீரங்கம் தொகுதி

    முக்கொம்பு சுற்றுலாத்தலம் இப்பகுதி மக்களிடையே பிரசித்தம் பெற்றது. மேலூரில் 25 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் வண்ணத்துப் பூச்சி பூங்கா ஆசியாவிலேயே மிகப் பெரியது. குழுமணியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம், நாவல் பட்டில் தேசிய சட்டப்பள்ளி, மொண்டிபட்டி டிஎன்பிஎல் காகித ஆலை என இத்தொகுதியின் அடையாளச் சின்னங்கள்.

    ஸ்ரீரங்கம் தொகுதி

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு இத்தொகுதியில் போட்டியிட்டு வென்றுதான் முதலமைச்சரானார். சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் 2014-ல் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார்.

    அ.தி.மு.க. தொடங்கிய காலத்தில் இருந்தே அந்த கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது. 9 முறை வாகைசூடிய அ.தி.மு.க. 2 முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது. அதே நேரம் ஒரு முறை மட்டுமே வென்றுள்ள தி.மு.க. 7 முறை தோற்றுள்ளது.

    ஜெயலலிதா இறந்தபின் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்றார் வளர்மதி. 2016-ம் ஆண்டு தேர்தலிலும் இதே தொகுதியில் களம் கண்ட வளர்மதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பழனியாண்டியைவிட 14,409 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தற்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். ஆனால் இந்த முறை அவருக்கு அதிமுக போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்குப் பதிலாக கு.ப. கிருஷ்ணன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் பழனியாண்டிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பல தலைமுறைகளாக ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி வாழும் பல்லாயிரம் குடும்பங்களுக்கு அடிமனை பட்டா இல்லாததே இந்த தொகுதியின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதற்காக தொடர் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் அடிமனை பட்டா பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அப்போதைய எம். எல்.ஏ. ஜெயலலிதா வாக்கு கொடுத்தார். ஆனால் அரசு இன்னும் தீர்வுகாணவில்லை.

    ஸ்ரீரங்கம் தொகுதி

    மணிகண்டம், அந்தநல்லூர் பகுதியில் ஒருங்கிணைந்த பூ வணிக வளாகம் கட்டிடத்திற்கு தீர்வுகான முடியாமல் உள்ளது. ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பல திட்டங்களை தந்தார். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.100 கோடியில் பாலம் கட்டினார். வண்ணத்துப்பூச்சி பூங்காவை கொண்டு வந்தார். 2 ஆயிரம் கோடி நிதியில் டி.என்.பி.எல். தொழிற்சாலையை உரு வாக்கி அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார். தேசிய சட்டக்கல்லூரி, தோட்டக்கலைக் கல்லூரி, சேதுராப்பட்டியில் அரசு பாலிடெக்னிக் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி, திருவானைக்காவலில் மேம்பாலம் ஆகியவற்றை கொண்டு வந்தவர் ஜெயலலிதா.

    முக்கொம்பு மேலணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை உடைந்ததால் அங்கு புதிய தடுப்பணை கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

    இந்த தொகுதியில் யாத்ரிகர்களுக்காக யாத்ரிநிவாஸ் கட்டப்பட்டுள்ளது. இப்படி பல திட்டங்களை கொண்டு வந்து ஸ்ரீரங்கத்தை முன் மாதிரி தொகுதியாக விளங்க அடித்தளமிட்டவர் ஜெயலலிதா. வளர்ச்சியும், செழிப்பும் அடிப்படை வசதிகளும் நிறைந்த இந்த தொகுதியில் மொத்தம் 3,10,739 வாக்காளர்கள் உள்ளனர். திருச்சியில் உள்ள 9 தொகுதிகளில் அதிகம் வாக்காளர்களை கொண்ட தொகுதியில் மீண்டும் அ.தி.மு.க. கோட்டையாக மாறுமா-? அல்லது தி.மு.க. கைப்பற்றுமா? என்பது வாக்காளர்களின் கையில்தான் உள்ளது.


    ஸ்ரீரங்கம் தொகுதி
    ஸ்ரீரங்கம் தொகுதி
    1951- சிற்றம்பலம் (இந்திய பொதுவுடமை கட்சி)
    1957- வாசுதேவன் (காங்கிரஸ்)
    1962- சுப்பிரமணியன் செட்டியார் (காங்கிரஸ்)
    1967- ராமலிங்கம் (காங்கிரஸ்)
    1971- ஜோதி வெங்கடாசலம் (ஸ்தாபன காங்கிரஸ்)
    1977- சவுந்தரராசன் (அ.தி.மு.க.)
    1980- சவுந்தரராசன் (அ.தி.மு.க.)
    1984- சவுந்தரராசன் (அ.தி.மு.க.)
    1989- வெங்கடேசுவர தீட்சிதர் (ஜனதா கட்சி)
    1991- கு.ப.கிருஷ்ணன் (அ.தி.மு.க.)
    1996- மாயவன் (தி.மு.க.)
    2001- கே.கே.பாலசுப்பிரமணியன் (அ.தி.மு.க.)
    2006- மு.பரஞ்ஜோதி (அ.தி.மு.க.)
    2011- ஜெயலலிதா (அ.தி.மு.க.)
    2015- வளர்மதி (அ.தி.மு.க.)
    Next Story
    ×