search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாவட்ட செயலாளர்களுடன் தேமுதிக அவசர ஆலோசனை
    X
    மாவட்ட செயலாளர்களுடன் தேமுதிக அவசர ஆலோசனை

    மாவட்ட செயலாளர்களுடன் தேமுதிக அவசர ஆலோசனை

    மாவட்ட செயலாளர்களுடன் நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு, அதிமுக உடன் தேமுதிக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.
    சென்னை:

    2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க.வுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில், 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு உயர்ந்ததுடன் 7.9 சதவீத வாக்குகளையும் பெற்றது.

    ஆனால், 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், 3-வது அணியான மக்கள்நல கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற்று படுதோல்வி அடைந்தது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற்றது. தற்போது, நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே தே.மு.தி.க. தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில், ஆரம்பம் முதலே தே.மு.தி.க. அதிருப்தியில் இருந்து வந்தது. அ.தி.மு.க. முதன் முதலில் பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி, அக்கட்சிக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது. இது தே.மு.தி.க.வை எரிச்சலடைய செய்தது. வடமாவட்டங்களில் மட்டும் வாக்கு வங்கி வைத்திருக்கும் பா.ம.க.வுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும்போது, தமிழகம் முழுவதும் வாக்கு வங்கி வைத்திருக்கும் தங்களுக்கு, அதைவிட கூடுதலாக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தே.மு.தி.க. வலியுறுத்தியது.

    ஆனால், அதை அ.தி.மு.க. கண்டுகொள்ளவில்லை. பா.ம.க.வுக்கு பிறகுதான் தே.மு.தி.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது. ஆரம்பத்தில், 41 தொகுதிகளை தே.மு.தி.க. கேட்டது. ஆனால், அ.தி.மு.க. தரப்பில் 28 தொகுதிகளை தருவதாக கூறப்பட்டது. 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அ.தி.மு.க. அழைத்தபோது தே.மு.தி.க. செல்லவில்லை.

    அதனால், அ.தி.மு.க. 28 தொகுதிகள் என்பதையும் வெகுவாக குறைத்தது. இந்த நேரத்தில், தே.மு.தி.க. 25 தொகுதிகள் கேட்டது. ஆனால், அ.தி.மு.க., தே.மு.தி.க.வை அதிர்ச்சியடைய செய்யும் வகையில், 15 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று தடாலடியாக கூறிவிட்டது.

    இதனால், சற்று யோசித்த தே.மு.தி.க., பா.ம.க.வுக்கு வழங்கியதுபோல, 23 தொகுதிகளையாவது தாருங்கள் என்று அ.தி.மு.க.விடம் கேட்டது. இந்த கோரிக்கையுடன் நேற்று முன்தினம் இரவு தே.மு.தி.மு.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார்.

    ஆனால், அ.தி.மு.க. தரப்பிலோ, 13 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தருவதாக சொல்லப்பட்டது. “நாமும் எவ்வளவுதான் இறங்கிவந்தாலும், அ.தி.மு.க.வும் பின்னால் செல்கிறதே” என்று தே.மு.தி.க. அதிருப்தி அடைந்தது.

    இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் தொடரலாமா? அல்லது தனித்து போட்டி முடிவை எடுக்கலாமா? என்பது குறித்து இன்று மாவட்ட செயலாளர்களுடன் தே.மு.தி.க. தலைமை அவசர ஆலோசனை நடத்துகிறது.

    சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் கூட்டம் தொடங்கியது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அ.தி.மு.க ஒதுக்கும் தொகுதிகளை ஏற்பது குறித்து கருத்து கேட்பு நடைபெறுகிறது.

    மாவட்ட செயலாளர்களுடன் நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு, அ.தி.மு.க. உடன் தே.மு.தி.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.


    Next Story
    ×