search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் தொகுதி
    X
    திருவாரூர் தொகுதி

    திமுக தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்றுள்ள திருவாரூர் தொகுதி கண்ணோட்டம்

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கடைசியாக போட்டியிட்ட, அதிமுக இதுவரை வெற்றி கண்டிராத திருவாரூர் தொகுதி குறித்து ஓர் பார்வை.
    திருவாரூர் சட்டமன்றத் தொகுதி அரசியல், சமயம் ஆகியவைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொகுதியாகும். மாவட்ட தலைநகராகவும் திருவாரூர் விளங்குகிறது. கடந்த 1997-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வலங்கைமான் வட்டத்தையும் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து சில வட்டங்களையும் பிரித்து 2,374 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் அமைக்கப்பட்டது திருவாரூர் மாவட்டம்.

    திருவாரூர் தொகுதி

    கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் உயரத்தில் இம்மாவட்டம் அமைந்துள்ளது. சைவ மதத்தில் பெரிய கோயில் என்றழைக்கப்படுகின்ற தியாகராஜர் கோயில் இந்த தொகுதியில்தான் உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக திருவாரூர் ஆழித்தேர் விளங்குகிறது. நீதி கேட்டு வந்த பசுவுக்காக தனது மகனைத் தேர்க்காலில் வைத்து கொன்ற மனுநீதிச் சோழன் அரசாண்ட ஊர் இது என ஆன்மீகவாதிகள் தெரிவிக்கின்றனர்.

    இதுபோல் தமிழக அரசியல் வரலாற்றில் கோலோச்சிய மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சொந்த ஊராக திருவாரூர் விளங்கி வருகிறது. அவர் திருக்குவளையில் பிறந்தாலும், தான் வளர்ந்தது, படித்தது, அரசியல் அனுபவங்களை கற்றுத் தேர்ந்தது எல்லாம் இந்த திருவாரூரில்தான் என பலமுறை கூறியிருக்கிறார்.

    திருவாரூர் தொகுதி

    திருவாரூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.  நெல் சாகுபடிக்கு ஏற்ற சமவெளிப் பகுதிகள் கொண்ட தொகுதியாக இருப்பதால் நெல் சாகுபடி அதிகமாக நடைபெறுகிறது. இம்மாவட்டத்தில் பிரதான தொழிலாக நெல் உற்பத்தி இருப்பதால் பல இடங்களில் இதனை சார்ந்த நவீன அரிசி ஆலைகள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    திருவாரூர் தொகுதி

    திருவாரூர் தொகுதியில் திருவாரூர் தாலுகாவின் அனைத்து பகுதிகள், குடவாசல் தாலுகா மற்றும் நீடாமங்கலம் தாலுகாவில் சில பகுதிகள் உள்ளன.

    இத்தொகுதியை பொறுத்தவரை ஆதிதிராவிடர்கள் நிறைந்து வாழ்கின்ற பகுதியாக உள்ளது. இவர்களுக்கு இணையாக வெள்ளாளர் சமூகத்தினர் உள்ளனர். இதற்கு அடுத்து கள்ளர் உள்ளிட்ட முக்குலத்து சமுதாயத்தினரும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய சமூகத்தினரும் கணிசமாக உள்ளனர்.

    திருவாரூர் தொகுதி

    ஆரம்பத்தில் தனி தொகுதியாக இருந்த திருவாரூர் தொகுதி 2011-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இருந்து பொது தொகுதியாக மாறியது. முதன் முதலில் 1962-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட அம்பிகாபதி வெற்றி வெற்றி பெற்றார். இதுவரை 13 சட்டமன்ற தேர்தல்களை இத்தொகுதி சந்தித்துள்ளது. இதில் தி.மு.க. 7 முறை வெற்றிவாகை சூடியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது. ஆனால் இதுவரை அ.தி.மு.க. இந்த தொகுதியில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

    திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,30,740 பேரும், பெண் வாக்காளர்கள் 1,44,772 பேர், இதர வாக்காளர்கள் 32 பேர் என மொத்தம் 2,81,534 வாக்காளர்கள் உள்ளனர்.

    திருவாரூர் தொகுதி

    கோரிக்கை

    திருவாரூர் தொகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும். அரசு வேளாண் கல்லூரி கட்ட வேண்டும். வைக்கோலில் இருந்து பேப்பர், அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவ வேண்டும். திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் புறப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். திரவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து தொலைதூரங்களுக்கு ரெயில்கள் இயக்க வேண்டும். மின்தகன மேடையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், தியாகராஜர் கோவிலில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பது தொகுதி மக்களின் கோரிக்கையாகும்.

    2019 இடைத்தேர்தல்

    பூண்டிகலைவாணன் (தி.மு.க)- 11,7616
    ஜீவானந்தம் (அ.தி.மு.க)- 53,045
    எஸ்.காமராஜ் (அ.ம.மு.க)- 19,133
    வினோதினி (நாம் தமிழர் கட்சி)- 8,544
    அருண் சிதம்பரம்- (மக்கள் நீதி மய்யம்)- 4,750

    திருவாரூர் தொகுதி இதுவரை...

    திருவாரூர் தொகுதி

    1962- அம்பிகாபதி (காங்கிரஸ்)
    1967- தனுஷ்கோடி (காங்கிரஸ்)
    1977- தாழை. மு கருணாநிதி (தி.மு.க)
    1980- செல்லமுத்து (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
    1984- செல்லமுத்து (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
    1989- தம்புசாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
    1991- தம்புசாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
    1996- அசோகன் (தி.மு.க)
    2001- அசோகன் (தி.மு.க)
    2006- மதிவாணன் (தி.மு.க)
    2011- மு.கருணாநிதி (தி.மு.க)
    2016- மு.கருணாநிதி (தி.மு.க)
    2019- கலைவாணன் (தி.மு.க)
    Next Story
    ×