search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் எவை?

    காங்கிரசில் ஏற்கனவே வெற்றி பெற்ற 8 தொகுதிகளில் அதே வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் முக்கிய கட்சியாக உள்ளது.

    கடந்த முறை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டது. நடைபெற இருக்கும் தேர்தலிலும் அதே எண்ணிக்கையில் தொகுதிகளை பெற திட்டமிட்டது. ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க. அதை ஏற்கவில்லை.

    தி.மு.க. அதிக எண்ணிக்கையில் போட்டியிட முடிவு செய்துள்ளதால், கூட்டணி கட்சிகளை சமாதானம் செய்து குறைந்த எண்ணிக்கையிலேயே தொகுதிகளை ஒதுக்கியது. காங்கிரசுக்கு 25 தொகுதிகள் வழங்கப்பட்டது. இதை மகிழ்ச்சியுடன் ஏற்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான தொகுதிகள் எவை என்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஏற்கனவே கேட்டு அறியப்பட்டது. இதில், 40-க்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையிலேயே தி.மு.க.விடம் தொகுதிகள் கேட்கப்பட்டன.

    தற்போது 25 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. கடந்த முறையைப் போல் அல்லாமல், தற்போது களம் இறங்கும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. எனவே போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகளில் பட்டியலை தயாரித்து அதில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று 25 தொகுதிகளை தேர்வு செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    அதன்படி, காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளை தேர்வு செய்வதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இன்று குழு அமைக்கப்படுகிறது. இதில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் இடம் பெறுகிறார்கள்.

    இந்த குழுவினர் தீவிரமாக ஆலோசித்து குறிப்பிட்ட மாவட்டத் தலைவர்களிடம் கருத்து கேட்டு போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்கிறார்கள். இதையடுத்து தி.மு.க.வுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது உறுதி செய்யப்படும்.

    காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளில் சிலவற்றை தி.மு.க. விரும்பினால் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே 30-க்கும் அதிகமான தொகுதிகளை தேர்வு செய்து இந்த பட்டியல் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் காங்கிரஸ் பெறும் 25 தொகுதிகள் உறுதி செய்யப்படும்.

    அதன் பிறகு வேட்பாளர்கள் தேர்வு நடைபெறும். தற்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட 2,500-க்கும் அதிகமானோர் விருப்பமனு கொடுத்துள்ளனர். இதில் 25 பேரை தேர்வு செய்ய வேண்டும். இது தவிர கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரையும் தேர்வு செய்ய வேண்டும்.

    காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட கடும் போட்டி உள்ளது. எனவே 25 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வது கடும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வேட்பாளர்கள் தேர்வு முடிந்த பிறகு கட்சி மேலிடம் ஒப்புதல் பெற்று வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    காங்கிரஸ் ஏற்கனவே வெற்றி பெற்ற 8 தொகுதிகளில் அதே வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. மீதமுள்ள 17 தொகுதிகளுக்கு தகுதி உள்ள வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

    தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வருகிற 10-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதிகளை உறுதி செய்வதற்காக தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை 2 கட்டமாக நடைபெற வாய்ப்புஉள்ளது. அதன்பிறகு காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்து பட்டியல் தயாரித்து மேலிடத்தில் ஒப்புதல் பெற வேண்டும். எனவே, வருகிற 15-ந் தேதி அல்லது அதற்கு பிறகு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது.

    Next Story
    ×