search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் தொகுதி
    X
    ராமநாதபுரம் தொகுதி

    ராமநாதபுரம் தொகுதி கண்ணோட்டம்

    ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மும்மதங்களின் புண்ணிய தலங்கள் நிறைந்த ஆன்மிக தொகுதியாக திகழ்ந்து வருகிறது.
    இங்கு வெற்றி பெறும் கட்சி தான் தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிக்கக் கூடியதாக கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது. அந்த வரிசையில்தான் தமிழகத்தில் இதுவரை ஆட்சி அமைந்துள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலிலும் கடந்த கால வரலாறு நிலை நிறுத்தப்படுமா? என்பது தேர்தலுக்குப் பின்னர் தெரிய வரும்.

    ராமநாதபுரம், கீழக்கரை, ராமேசுவரம் ஆகிய நகராட்சிகளை உள்ளடக்கிய ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் மண்டபம் பேரூராட்சி மற்றும் ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம் என 3 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது.

    ராமநாதபுரம் தொகுதி

    இந்த தொகுதியில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 6 ஆயிரத்து 372. இதில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 722 பேர்.பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 589 பேர். மூன்றாம் பாலினத்தர் 21 பேர்.

    ராமநாதபுரம் தொகுதி

    இங்கு முக்குலத்தோர், முஸ்லிம், தேவேந்திரகுல வேளாளர், கிறிஸ்தவர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினர் கணிசமாக உள்ளனர்.

    தேசிய விடுதலைக்கு பிறகு ராமநாதபுரம் தொகுதியில் 1952-ல் முதல் முறையாக தேர்தல் நடந்தது. இதுவரை 15 தடவை தேர்தல் நடந்துள்ளது. இதில் அ.தி.மு.க-6, தி.மு.க-4, காங்கிரஸ்-3, ம.ம.க., சுயேச்சை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

    இந்த தொகுதியை பொறுத்தவரை மீன்பிடி தொழிலும் விவசாயமும் பிரதானமாக இடம் பெற்றுள்ளது. ராமேசுவரத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அந்நியச் செலவாணி ஈட்டக்கூடிய மீன்பிடித் தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இதன் மூலமாக ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர்.

    ராமநாதபுரம் தொகுதி

    இது தவிர விவசாயம் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. இங்கு தொழிற்சாலைகள் எதுவும் கிடையாது. இந்த தொகுதியில் உள்ள பெரும்பாலானோர் வெளிநாட்டில் வேலை செய்தும், தொழில் நடத்தியும் வருகின்றனர்.
    ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் இன்னும் கூட தீர்க்கப்படாமல் பல பிரச்சினைகள் இருப்பதாக தொகுதி மக்கள் கூறுகிறார்கள்.

    கோரிக்கைகள்

    இந்த தொகுதியில் எந்த தொழிற்சாலையும் ஏற்படுத்தாமல் இருப்பது இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

    ராமநாதபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை போக்குவதற்கு உரிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது. ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தாமல் இருப்பதால் சாக்கடை கழிவு நீர் சாலைகளில் கரைபுரண்டு ஓடுகிறது என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதேபோல் ராமநாதபுரம் நகரில் ஆண்களுக்கான அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாதது பெரும் குறையாக இருந்து வருகிறது.

    ராமநாதபுரம் தொகுதி

    மீனவர்களின் வாழ்வாதாரமாக இருந்து வந்த கடல் அட்டைக்கான தடையை நீக்கம் செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் மீனவர்கள் தரப்பில் எழுந்துள்ளது.

    கீழக்கரையில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் ஏற்படுத்த வேண்டும். கீழக்கரை பகுதியில் மீன் எண்ணெய் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

    ராமநாதபுரம் தொகுதி

    இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் ராமேசுவரம் மீனவர்கள் கச்சத்தீவை மீட்க வேண்டுமென்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதை நிவர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    ராமநாதபுரம் தொகுதி இதுவரை
    ராமநாதபுரம் தொகுதி இதுவரை

    1952- சண்முக ராஜேஷ்வர சேதுபதி (காங்கிரஸ்)
    1957- சண்முக ராஜேஷ்வர சேதுபதி (சுயேட்சை)
    1962- சண்முக ராஜேஷ்வர சேதுபதி (காங்கிரஸ்)
    1967- தங்கப்பன் (தி.மு.க.)
    1971- சத்தியேந்திரன் (தி.மு.க.)
    1977- ராமசாமி (அ.தி.மு.க.)
    1980- ராமசாமி (அ.தி.மு.க.)
    1984- ராமசாமி (அ.தி.மு.க.)
    1989- ராஜேந்திரன் (தி.மு.க.)
    1991- தென்னவன் (அ.தி.மு.க.)
    1996- ரகுமான்கான் (தி.மு.க.)
    2001- அன்வர்ராஜா (அ.தி.மு.க.)
    2006- ஹசன்அலி (காங்கிரஸ்)
    2011- ஜவாஹிருல்லா (ம.ம.க.)
    2016- மணிகண்டன் (அ.தி.மு.க.)
    Next Story
    ×