search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    கோவை, நீலகிரியில் அதிக தொகுதிகளை கேட்கும் பா.ஜனதா

    கோவை தெற்கு தொகுதி தனக்கு தான் என்ற முடிவில் வானதி சீனிவாசன் அந்த தொகுதியில் பிரசாரத்தையும் தொடங்கி விட்டார்.
    கோவை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா அதிக தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தது. இதனால் 30 முதல் 40 இடங்களை கேட்டு வந்தது. தற்போது 20 இடங்களை பா.ஜனதா பெற்று விட்டது.

    இதைத்தொடர்ந்து எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட்டால் தாங்கள் வெற்றி பெற முடியும் என கணித்து அந்த தொகுதிகளை அ.தி.மு.கவிடம் பாஜ.க. கேட்க உள்ளது.

    குறிப்பாக கோவை, நீலகிரி, கன்னியாகுமரி பகுதிகளில் பா.ஜனதா கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. எனவே இந்த பகுதிகளில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற விரும்பியுள்ளது. அதற்கேற்றவாறு பாரதிய ஜனதா காய்களை நகர்த்தி வருகிறது.

    கோவையில் பா.ஜனதா சூலூர், கிணத்துக்கடவு, கோவை தெற்கு போன்ற தொகுதிகளை குறிவைத்துள்ளது. காரணம் சூலூர் அல்லது கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட மாநில தலைவர் அண்ணாமலையும், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வானதி சீனிவாசனும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதுதவிர கடந்த தேர்தல்களில் இந்த தொகுதிகளில் பாரதிய ஜனதா ஓரளவுக்கு வாக்குகளையும் பெற்றதும் ஒரு காரணம் ஆகும். இதற்காகவே இந்த தொகுதிகளை கேட்டு பெறுவதில் அந்த கட்சி முனைப்பு காட்டி வருகிறது. கோவை தெற்கு தொகுதி தனக்கு தான் என்ற முடிவில் வானதி சீனிவாசன் அந்த தொகுதியில் பிரசாரத்தையும் தொடங்கி விட்டார்.

    ஆனால் கோவை தெற்கு தொகுதியோ தற்போது அ.தி.மு.க.விடம் உள்ளது. இதனால் அந்த தொகுதியை விட்டுக்கொடுக்க அ.தி.மு.க. முன் வராது என கூறப்படுகிறது. சிட்டிங் எம்.எல்.ஏவாக உள்ள அம்மன் அர்ச்சுணனும் தெற்கு தொகுதியில் தான் போட்டியிடுவேன் என தொடர்ந்து கூறி வருகிறார். அப்படி கோவை தெற்கு அ.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டால் பா.ஜனதாவுக்கு கோவை வடக்கு ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.

    இதேபோல் மற்றொரு தொகுதியான கிணத்துக்கடவும் பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இங்கு மாநில துணை தலைவர் அண்ணாமலை போட்டியிட விரும்புகின்றார். அதற்கேற்றவாறே கடந்த சில மாதங்களாகவே இந்த தொகுதியில் முகாமிட்டு கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்று வந்தார்.

    நீலகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகள் உள்ளன. இதில் ஊட்டி தொகுதியை பா.ஜனதா விரும்பி கேட்கிறது. ஆனால் அந்த தொகுதியை விட்டு கொடுக்க அ.தி.மு.க முன்வரவில்லை. தங்கள் கட்சியே அந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகிறது.

    அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளரான கப்பச்சி வினோத் அந்த தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அ.தி.மு.க., பா.ஜனதாவுக்கு ஊட்டி தொகுதிக்கு பதிலாக கூடலூர் தனி தொகுதியை ஒதுக்கி தருவதாக கூறப்பட்டு உள்ளது.


    Next Story
    ×