search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்-வைகோ
    X
    மு.க.ஸ்டாலின்-வைகோ

    திமுக- மதிமுக மீண்டும் இன்று மாலை பேச்சுவார்த்தை

    ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் கழக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தாயகத்தில் நடைபெறுகிறது.
    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று உள்ள கட்சிகளிடம் தி.மு.க. மூத்த தலைவர்கள் தொடர்ந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள்,  இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசும், ம.தி.மு.க.வும் சற்று அதிகமான தொகுதிகளை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் தி.மு.க. தரப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தொகுதிகளை தர முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர்.
    என்றாலும் தி.மு.க.விடம் இருந்து அதிக தொகுதிகளை பெற முடியும் என்று காங்கிரஸ் மற்றும் ம.தி.மு.க. தலைவர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். குறிப்பாக ம.தி.மு.க. மூத்த தலைவர்கள் மற்ற கட்சிகளை விட கூடுதலாக ஒரு தொகுதியாவது பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.

    இதுதொடர்பாக ஆலோசனை நடத்த இன்று பிற்பகல் ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூடுகிறது. இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் கழக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தாயகத்தில் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் ம.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் வைகோ ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக அடுத்த கட்ட முடிவுகளை வைகோ மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே தி.மு.க தரப்பில் இருந்து ம-.தி.மு.க.வுக்கு இன்று மதியம் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து மாலை 5 மணிக்கு தி.மு.க.-ம.தி.மு.க தலைவர்கள் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவுபெறும் என்று தெரிகிறது.
    Next Story
    ×