search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக கூட்டணி கட்சிகள்
    X
    திமுக கூட்டணி கட்சிகள்

    கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. அதிக தொகுதி கொடுக்காததன் பின்னணி

    தி.மு.க தனது கூட்டணி கட்சிகளுக்கு இன்று அல்லது நாளைக்குள் தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்து உடன்பாட்டை முடித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    சட்டசபை தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.

    இதற்காக பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது ஐ-பேக் குழுவினர் இதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஒவ்வொரு தொகுதிகளின் வெற்றி வாய்ப்புகளை அலசி ஆராய்ந்து அதன் அடிப்படையில் பட்டியல் எடுத்துக்கொடுத்துள்ளனர்.

    இதன் அடிப்படையில் ஒவ்வொரு தொகுதியிலும் தி.மு.க.வினரின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளதா? திமுக வேட்பாளராக யாரை நிறுத்தினால் வெற்றி பெற முடியும் என்பதை கேட்டறிந்து அதையும் தலைமைக்கு தெரிவித்துள்ளனர்.

    இதன் அடிப்படையில் எந்த எந்த தொகுதிகளில் தி.மு.க. நிற்க வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பது போன்ற பட்டியலும் திமுக வசம் தயாராக உள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் கடந்த சட்டசபை பொதுத்தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக கட்சிகள் இடம் பெற்றுள்ளன. காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த கட்சிகளில் இதுவரை தொகுதி பங்கீடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கி உடன்பாடு காணப்பட்டது.

    காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு இன்று அல்லது நாளை உடன்பாடு காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காங்கிரஸ் கடந்த 2016 பொதுத்தேர்தலின் போது 41 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் 8 இடங்களில் தான் வெற்றி பெற்றது. இதனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    அதன் அடிப்படையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான குழுவினர் அண்ணா அறிவாலயத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த சென்ற போது 18 தொகுதிகளில் இருந்து பேச்சுவார்த்தையை தொடங்குவதாக தி.மு.க. அறிவித்தது. இது காங்கிரசாருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

    50 தொகுதிகளுக்கான பட்டியலை நாங்கள் வைத்துள்ளோம். நீங்கள் 18 தொகுதிகளில் இருந்து பேச்சுவார்த்தையை தொடங்குகிறீர்களே என்று காங்கிரசார் வருத்தப்பட்டனர்.

    இதனால் அன்றைய தினம் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதன்பிறகு, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காங்கிரசார் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் ஏற்றுக் கொள்ளக் கூடாது. குறைந்தது 30 தொகுதிகளாவது வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதன் காரணமாக காங்கிரஸ்- தி.மு.க தொகுதி பங்கீடு இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது. இதேபோல் மற்ற கட்சிகளுக்கும் தொகுதி பங்கீட்டில் இடங்களை ஒதுக்கி கொடுப்பதில் இன்னும் முடிவு எட்டப்படாமல் உள்ளது.

    ஒவ்வொரு கூட்டணி கட்சிகளுக்கும் தி.மு.க. குறைந்த தொகுதிகளை ஒதுக்குவது ஏன்? என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

    கடந்த 2006 தேர்தலின் போது தி.மு.க.வுக்கு முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆதரவுடன் தான் ஆட்சி அமைத்தது. இதற்கு காரணம் தி.மு.க. 160 தொகுதிகளுக்கு கீழே நின்றதால் தான் மெஜாரிட்டியை பெற முடியாமல் போனது.

    அந்த சமயத்தில் எதிர்கட்சியினர் தி.மு.க. ஆட்சியைப் பார்த்து மைனாரிட்டி அரசு என்று ஏளனமாக பேசினார்கள். சட்டசபையிலும் இதை சுட்டிக்காட்டினார்கள். பெரும்பான்மையை பெற தவறியதற்கு குறைந்த இடங்களில் போட்டியிட்டதே காரணம் என்பது தெரியவந்தது.

    இதைத்தான் ஐ-பேக் குழுவினர் தற்போது சுட்டிக்காட்டி உள்ளனர். இந்த தேர்தலில் குறைந்தது 180 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் பெரும்பான்மை கிடைக்கும். இதை கூட்டணி கட்சிகளுக்கு எடுத்துச்சொல்லி அவர்களுக்கு புரிய வையுங்கள் என்று சொன்னதின் அடிப்படையில் தான் தொகுதி ஒதுக்கீட்டில் தி.மு.க.தனது கூட்டணி கட்சிகளிடம் பிடிவாதமாக உள்ளது.

    நேர்காணலின் போது ஒவ்வொரு கட்சி நிர்வாகிகள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையிலும் வெற்றி வாய்ப்புகள் அலசி ஆராய்ந்து வைக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கினால் அந்த தொகுதிகளில் எளிதாக எதிர்கட்சிகள் வெற்றி பெற்று விடுகின்றன.

    மேலும் அவரவர் சின்னத்தில் நிற்பதால் வெற்றி வாய்ப்பு குறைவதாக கருதியதால் தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இதனால் தான் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டு வருகிறது. தி.மு.க.வின் நிலையை கூட்டணி கட்சியினர் புரிந்து செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த சூழலில் தி.மு.க தனது கூட்டணி கட்சிகளுக்கு இன்று அல்லது நாளைக்குள் தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்து உடன்பாட்டை முடித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×