search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா
    X
    சசிகலா

    பா.ஜனதா தூதர்... உறவினர்: சசிகலாவின் மனதை மாற்றிய இருவர்

    தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்த சசிகலா அடுத்த 20 நாட்களில் தனது முடிவை அதிரடியாக மாற்றியதின் பின்னணி என்ன என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
    சென்னை:

    தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணி மற்றும் தி.மு.க. கூட்டணி ஆகியவை கடும் போட்டியுடன் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த மாதம் சிறையில் இருந்து வெளிவந்தார். அவரது அரசியல் வருகையால் அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கேற்ப சசிகலாவின் பேச்சுகள் அமைந்து இருந்தன.

    தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக கூறிய அவர் விரைவில் தொண்டர்களை சந்திப்பேன் என்றும் தெரிவித்தார். இதனால் சசிகலா அரசியல் எந்த மாதிரி இருக்கும் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    ஆனால் நேற்று முன்தினம் இரவு திடீரென அரசியலில் இருந்து விலக இருப்பதாக சசிகலா பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதற்காக வெளியில் இருந்து நான் பிரார்த்தனை செய்வேன் என்று சசிகலா தெரிவித்திருந்தார்.

    இது அ.தி.மு.க. தொண்டர்களையும், நிர்வாகிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில் தினகரனின் அ.ம.மு.க.வினரை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்த சசிகலா அடுத்த 20 நாட்களில் தனது முடிவை அதிரடியாக மாற்றியதின் பின்னணி என்ன என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பாஜக

    தமிழக தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சி எப்போதும் இல்லாத வகையில் வலுவாக கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அந்த கட்சி 30 தொகுதிகளை குறி வைத்துள்ளது. இந்த தொகுதிகளில் இரட்டை இலக்கத்திலேயே வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழையவும் பா.ஜனதா காய் நகர்த்தி வருகிறது.

    வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமோடு பா.ஜனதா செயல்பட்டு வருகிறது.

    இந்த முறை எப்படியாவது அ.தி.மு.க. ஓட்டுகளையும் பெற்று வெற்றி பெற்று விட வேண்டும் என்பதில் பா.ஜனதா தலைவர்கள் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறார்கள்.

    இதுபோன்ற சூழலில் சசிகலா தனி அணியாக களம் கண்டால் அது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்கு கடும் பின்னடைவாகவே இருக்கும் என்று அந்த கட்சி கருதியது. இதையடுத்து பா.ஜனதா தூதர் ஒருவர் சசிகலாவை நேரில் சந்தித்து தேர்தல் முடியும் வரை நீங்கள் ஒதுங்கி இருக்க வேண்டும்.

    அப்போதுதான் அ.தி.மு.க.வின் ஓட்டுகளை சிதறாமல் முழுமையாக பா.ஜனதா கூட்டணி அறுவடை செய்ய முடியும் என்றும் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமர முடியும் என்றும் பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    அதே நேரத்தில் சசிகலாவின் நெருங்கிய உறவினர் ஒருவரும் நீண்ட நேரம் சசிகலாவுடன் அமர்ந்து பேசி இருக்கிறார். அப்போது நீங்கள் தனியாக அரசியலில் பயணித்தால் அது அ.தி.மு.க.வுக்கு எதிராகவே இருக்கும். இதன் மூலம் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோற்று போனால் அந்த பழி உங்கள் மீதுதான் விழும் என்று கூறியதாக கூறப்படுகிறது. இப்படி பா.ஜனதா தூதர் மற்றும் உறவினர் ஆகிய இருவரின் பேச்சுக்களே சசிகலாவின் மனதை மாற்றி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    சசிகலா விலகலையடுத்து தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரைச் சேர்ந்தவர்களுக்கு அ.தி.மு.க.வின் 2-ம் கட்ட தலைவர்கள் நேரடியாகவே அழைப்பு விடுத்துள்ளனர். தினகரனை நம்பி இன்னும் யாரும் அங்கு இருக்க வேண்டாம். உங்களை எப்போதும் சேர்த்துக் கொள்ள அ.தி.மு.க. தயாராகவே உள்ளது என்று அவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.

    இதன் மூலம் அ.ம.மு.க.வில் இருந்து பலர் விலகி அ.தி.மு.க.வில் சேருவார்கள் என்று அந்த கட்சி காத்திருக்கிறது. இதன் மூலம் தமிழக அரசியல் களம் அடுத்தடுத்த நாட்களில் பரபரப்பை எட்டும் என்றே எதிர் பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×