search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூவிருந்தவல்லி தொகுதி
    X
    பூவிருந்தவல்லி தொகுதி

    இடைத்தேர்தல் வெற்றி திமுக-வுக்கு சாதகமாகுமா?- பூந்தமல்லி தொகுதி கண்ணோட்டம்

    2011 மற்றும் 2016 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில், இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பூந்ததமல்லி தொகுதி கண்ணோட்டம்
    தமிழகத்தில் பழம் பெருமை வாய்ந்த தொகுதியில் ஒன்றாக திகழ்வது பூந்தமல்லி தொகுதி. இந்த தொகுதியில் பூந்தமல்லி நகராட்சி, திருமழிசை பேரூராட்சி, பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட 28 ஊராட்சிகளில் 26 ஊராட்சிகள் அடங்கி உள்ளன. இத்தொகுதி எல்லை திருவள்ளூர் வரை உள்ளது.

    இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களில் சட்டமன்ற தேர்தலில் அதிகமுறை தி.மு.க. வென்றுள்ளது. இரண்டு முறை தொடர்ந்து அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதற்கு முன்பாக தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிக முறை வெற்றி பெற்றது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

    பூவிருந்தவல்லி தொகுதி

    பிரசித்தி பெற்ற கோவில்கள் மிகுந்த இத்தொகுதியில் திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலும், நவகிரக தலங்களில் செவ்வாய் தலமும் இங்கு அமைந்துள்ளது. பெரும்பாலும் தொகுதியில் விவசாயம் மற்றும் சுய தொழில்கள், வியாபாரம் மற்றும் தொழில் நகரமாக விளங்கி வருகிறது. பூந்தமல்லியிலிருந்து சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு சென்னையின் முக்கிய நுழைவு வாயிலாக பூந்தமல்லி விளங்கி வருகிறது.

    குறிப்பாக இங்கு வெடிகுண்டு வழக்குகள், தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம், தாலுகா மருத்துவமனை, பொது சுகாதார நிறுவனம், திருமழிசை சிப்காட், செம்பரம்பாக்கம் ஏரியின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

    பூவிருந்தவல்லி தொகுதி

    பொது தொகுதியாக இருந்த பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது தனித் தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஏழுமலை போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் இந்த தொகுதி எம்.எல்.ஏவும் ஒருவர்.

    அதன்பிறகு 2019-ம் ஆண்டு இங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார். பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் அதிக முறை தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. கடந்த மூன்று தேர்தல்களில்தான் அ.தி.மு.க., தி.மு.க. நேரடியாக களம் கண்டு அதில் ஒருமுறை தி.மு.க.வும், இரண்டு முறை அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    மக்களின் கோரிக்கை

    அரசு கலைக்கல்லூரி, பாதாள சாக்கடை திட்டம், பாரிவாக்கம் சாலை சந்திப்பு, திருமழிசை கூட்டு சாலை ஆகிய பகுதிகளில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. 
    பூந்தமல்லி நகராட்சிக்கு 2 முறை பாதாள சாக்கடை திட்டம் வந்தாலும் அது நிறைவேற்றப்படவில்லை.

    பூவிருந்தவல்லி தொகுதி

    உள்ளாட்சியில் அ.தி.மு.க. இருந்தால் சட்டமன்றத்தில் தி.மு.க. இருக்கும். இவ்வாறு மாறி, மாறி வந்ததன் காரணமாக இங்கு 2 முறை வந்த பாதாள சாக்கடை திட்டம், வந்தும் அது திருமழிசைக்கும், ஆவடிக்கும் சென்றுவிட்டது. பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை கிடப்பிலேயே உள்ளது.

    போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் நெரிசலை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். வேப்பம்பட்டு, புட்லூர், செவ்வாய்பேட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்படும் பாலம் கட்டுமான பணி நீண்ட காலமாக இழுபறியில் உள்ளது. அவற்றை வேகமாக முடிக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

    பல ஆண்டுகளாக செம்பரம்பாக்கம் ஊராட்சி திருவள்ளூர் மாவட்டத்திலும், வருவாய் கிராமம் ஸ்ரீபெரும்புதூரிலும் இருப்பதால் இங்குள்ள கிராம மக்கள் தங்களுக்கு வேண்டிய நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் சிரமம் அடைந்து வருகின்றனர். இதற்கு தீர்வு வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    ஜெயலலிதா கொண்டுவந்த திருமழிசை துணைக்கோள் நகரம் பெயரளவுக்கு மட்டும் இடம் கையகப்படுத்தி அளவீடு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த பகுதி கோயம்பேடு தற்காலிக சந்தையாக செயல்பட்டது. துணைகோள் நகரத்தில் வீடுகள் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர வேண்டும் என்பதும் கோரிக்கையாக இருக்கிறது. மேலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    பூவிருந்தவல்லி தொகுதி

    சென்னைக்கு அருகே உள்ள தொகுதிகள் தொழில் நிறைந்த இடமாக பூந்தமல்லி தொகுதி இருக்கிறது. திருமழிசை, காக்கலூர், சென்னீர்குப்பம், வரதராஜபுரம், நேமம் ஆகிய இடங்களில் அதிக சிறு-குறு தொழில்கள் உள்ளன. ஆனால் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்பது மக்களின் முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது. 
    தொகுதியில் பல இடங்களில் சாக்கடை பிரச்சினை பெரிய விஷயமாக இருக்கிறது. குறிப்பாக காட்டுபாக்கம், நசரத்பேட்டை, குன்றத்தூர் ஆகிய இடங்களில் சாக்கடை பிரச்சினை மோசமான நிலையில் உள்ளது.
    வாக்காளர்கள்

    மொத்த வாக்காளர்கள்- 3,57,874 
    ஆண்கள்-1,75,953
    பெண்கள்-1,81,861
    3&ம் பாலினம்- 60


    தேர்தல் வெற்றி

    பூவிருந்தவல்லி தொகுதி இதுவரை
    பூவிருந்தவல்லி தொகுதி இதுவரை

    1957- பக்தவச்சலம் (காங்கிரஸ்)
    1962- பக்தவச்சலம் (காங்கிரஸ்)
    1967- ராஜரத்தினம் (தி.மு.க.)
    1971- ராஜரத்தினம் (தி.மு.க.)
    1977- ராஜரத்தினம் (தி.மு.க.)
    1980- ராஜரத்தினம் (தி.மு.க.)
    1984- ஆனந்த கிருஷ்ணன் (காங்கிரஸ்)
    1989- மாசிலாமணி (தி.மு.க.) 
    1991- சுதர்சனம் (காங்கிரஸ்)
    1996- சுதர்சனம் (காங்கிரஸ்)
    2001- சண்முகம் (பா.ம.க.)
    2006- சுதர்சனம் (காங்கிரஸ்)
    2011- மணிமாறன் (அ.தி.மு.க.)
    2016- ஏழுமலை (அ.தி.மு.க.)
    2019- கிருஷ்ணசாமி (தி.மு.க.)
    Next Story
    ×