search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக கூட்டணி கட்சிகள்
    X
    திமுக கூட்டணி கட்சிகள்

    கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

    வருகிற 7-ந்தேதி தி.மு.க. சார்பில் திருச்சியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டை முடிக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடுகளை இறுதி செய்வதற்காக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.

    சட்டசபை பொதுத்தேர்தலுக்கு வருகிற 12-ந்தேதி மனுதாக்கல் தொடங்க உள்ள நிலையில் தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டு தொகுதி உடன்பாடு காணப்பட்டது.

    காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தைதான் நடைபெற்றது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி 50 தொகுதிக்கான பட்டியலை தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் கொடுத்திருந்தார். 35 தொகுதிகளை பெற்று விட வேண்டும் என்று பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் தி.மு.க. தரப்பில் 18 தொகுதியில் இருந்து பேச்சுவார்த்தை ஆரம்பித்ததால் காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 10 தொகுதிகளை கேட்ட நிலையில் தி.மு.க. தரப்பில் 5 தொகுதிகளை தருவதாக முதலில் பேச்சுவார்த்தையை தொடங்கினர்.

    இது கம்யூனிஸ்டு கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் அன்றைய தினம் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.

    இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் 15 தொகுதிகள் கேட்டு பட்டியல் கொடுத்திருந்தது. ஆனால் இந்த கட்சிக்கும் 6 தொகுதிகளை தருவதாக தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. ஆனாலும் 9 தொகுதிகளாவது வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி வந்தார். இதனால் உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது.

    ம.தி.மு.க.வும் 10 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்பியது. 8 இடமாவது தி.மு.க. ஒதுக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தி.மு.க.விடம் இருந்து நேற்றுவரை சாதகமான பதில் எதுவும் வராமல் இருந்தது.

    ம.தி.மு.க. தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என்று வைகோ முடிவெடுத்துள்ள நிலையில் குறைந்தது 8 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று உறுதியுடன் உள்ளார். இதையும் தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவுக்கு தெளிவுபட தெரிவித்துள்ளார்.

    ஆனாலும் தி.மு.க. தரப்பில் இருந்து நேற்று வரை எந்த பதிலும் இல்லாததால் ஒவ்வொரு கூட்டணி கட்சி தலைவர்களும் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.

    தி.மு.க. தலைமையிடம் நமது நிலைப்பாட்டை தெரிவித்து விட்டோம். எத்தனை தொகுதிகள் வேண்டும் என்று பட்டியலையும் கொடுத்து விட்டோம். இனிமேல் தி.மு.க.தான் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று தங்கள் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.

    மு.க.ஸ்டாலின்

    இந்த நிலையில்கூட்டணி கட்சிகளின் எண்ணங்களை அறிந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு கூட்டணி கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகளை ஒதுக்கலாம் என்பது பற்றி விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

    இதைத் தொடர்ந்து ஒவ்வொரு கூட்டணி கட்சிகளுக்கும் அவர்கள் திருப்திப்படும் வகையில் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கி தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என்று தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. மீண்டும் இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

    இதை ஏற்று காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இன்று அண்ணா அறிவாலயத்துக்கு பேச்சுவார்த்தை நடத்த செல்கிறார்கள்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று காலை தனது கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு அவர் அண்ணா அறிவாலயம் புறப்பட்டு சென்றார்.

    கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் இன்று பேச்சுவார்த்தைக்கு வர உள்ளதாக தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க.வின் அழைப்பை ஏற்று இன்று மாலை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அண்ணா அறிவாலயம் சென்று மீண்டும் பேச உள்ளார்.

    வருகிற 7-ந்தேதி தி.மு.க. சார்பில் திருச்சியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டை முடிக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க.வினர் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியின் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடையும் என எதிர் பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×