search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்மிடிப்பூண்டி தொகுதி
    X
    கும்மிடிப்பூண்டி தொகுதி

    மீண்டும் அதிமுக கைவசமாகுமா?- கும்மிடிப்பூண்டி தொகுதி ஒரு கண்ணோட்டம்

    தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னோட்டத்தை காணலாம்.
    தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் முதல் தொகுதி என்ற பெருமைக்குரியது கும்மிடிப்பூண்டி. இங்கு வெற்றிபெறும் வேட்பாளர், தமிழகத்தின் நம்பர் 1 எம்.எல்.ஏ. என்ற பெருமையை பெறுவார்.

    கும்மிடிப்பூண்டி தொகுதியின் பரப்பளவு -18 சதுர கிலோ மீட்டர், கும்மிடிப்பூண்டி தொகுதியில் 131 பஞ்சாயத்துகள், 2 ஒன்றியம், 2 நகரம் ஆகியவை உள்ளது.

    தமிழக- ஆந்திர எல்லையோரம் உள்ள தொகுதியான கும்மிடிப்பூண்டியில் தமிழ், தெலுங்கு பேசுபவர்கள் அதிகம். தற்போது கும்மிடிப்பூண்டியில் மொத்தம் 2,80,776 வாக்காளர்கள். ஆண் வாக்காளர்கள் 1,37,027 பேர், பெண் வாக்காளர்கள் 1,43,708 பேர் மற்றும் பிற பாலினத்தவர் 41 பேர் உள்ளனர்.

    கும்மிடிப்பூண்டி தொகுதி

    சிப்காட் தொழிற்பேட்டை உள்ள தொழில் நகரமாக கும்மிடிப்பூண்டி இயங்கி வருகிறது. இருந்தாலும் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் விவசாயமே பிரதான தொழில். இந்த தொகுதியில் வன்னியர் 30 சதவீதம், ஆதிதிராவிடர் 25 சதவீதம், நாயுடு 15 சதவீதம், முதலியார் 10 சதவீதம், பழங்குடியினர் 5 சதவீதம், செட்டியார்கள் 5 சதவீதம், யாதவர்கள் 5 சதவீதம், இதர பிரிவினர் 5 சதவீதம். இங்கு 11 மீனவக் குப்பங்களும் உள்ளன. கும்மிடிப்பூண்டியில் 1957-ம் ஆண்டு முதல் 2016 வரை  சட்டப்பேரவைக்கு ஒரு இடைத்தேர்தல் உள்பட 15 முறை சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது.

    கும்மிடிப்பூண்டி தொகுதி

    இதில் 7 முறை அ.தி.மு.க.வும், 4 முறை தி.மு.க.வும், காங்கிரஸ், சுதந்திரா கட்சி, தே.மு.தி.க. தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2005-ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சுதர்சனம் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கே.எஸ். விஜயகுமார் 83,717 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் வெங்கடாசலபதி 56,554 வாக்குகளை பெற்றார்.

    கும்மிடிப்பூண்டி தொகுதி


    இத்தொகுதியில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு உட்பட்ட 328 தொழிற்சாலைகளும், தேர்வாய்கண்டிகை சிப்காட்டில் 28 தொழிற்சாலைகளும் உள்ளன. கூடுதலாக தற்போது மாநெல்லூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கும்மிடிப்பூண்டி தொகுதி


    2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கே.எஸ். விஜயகுமார் 89,332 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சி.எச்.சேகர்  65,937 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளர் செல்வராஜ்  43,055 வாக்குகளும், தே.மு.தி.க வேட்பாளர் கீதா 6585 வாக்குகளும், பா.ஜ.க. பாஸ்கரன் 2092, பகுஜன் சமாஜ் முரளி கிருஷ்ணா என்ற சமரன் 1282, நாம் தமிழர் 1250  வாக்குகளும் பெற்றனர்.

    இப்போதைய தேர்தலில் அ.தி.மு.க.வில்- கே.எஸ்.விஜயகுமார், பி.ரவிச்சந்திரன், வி.கோபால்நாயுடு, ஓ.எம்.கிருஷ்ணன் கே.எம்.எஸ்.சிவகுமார், தி.மு.க. வில்- டி.ஜெ.கோவிந்தராஜன், கி.வேணு, சி.எச். சேகர், பா.ம.க.வில்- துரை ஜெயவேலு, செல்வராஜ் ஆகியோர் டிக்கெட் பெறுவதில் முன்னணியில் உள்ளனர்.

    கும்மிடிப்பூண்டி தொகுதியில் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் ஆதித்யா பிர்லா, மிட்சுபா, எஸ்.ஆர்.எப், டி.வி. எஸ்., எண்ணை தொழிற்சாலைகளான கேடிவி, துல்சியான், தமிழ்நாடு எடிபிள் ஆயில், தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மெண்ட் தொழிற்சாலை, பல்வேறு இரும்பு உருக்காலைகள், தேர்வாய் கண்டிகையில் மிக்சிலின், எல்லாபுரம் ஒன்றியத்தில் ருசி தொழிற்சாலைகள் போன்றவை உள்ளது. கும்மிடிப்பூண்டி தொகுதியில் அரசு கல்லூரி இல்லாதது, தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று மாசு. சென்னை உள்பட பல இடங்களுக்கும் கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்வது கும்மிடிப்பூண்டி பகுதியில் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.

    உள்ளூர் மக்களுக்கு தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பின்மை, 20 குக்கிராமங்களில் பஸ் வசதி இல்லாதது, ஆரணி மற்றும் கொசஸ் தலை ஆற்றின் குறுக்கே மங்களம், புதுப்பாளையம், ஊத்துக்கோட்டை பகுதியில் மேம்பால வசதி போன்ற கோரிக்கைகள் நிலுவையில் உள்ளது. கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டையில் அரசு கல்லூரி வசதி, 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருந்தும் வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுவது போன்ற கோரிக்கைககள் இந்த தேர்தலில் அதிகமாக எதிரொலிக்கலாம்.

    ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்கள் கும்மிடிப்பூண்டி பஜார் வழியாக செல்ல வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக் கையாக இருக்கின்றது.  இதனால் கும்மிடிப்பூண்டி பஜார் வியாபாரிகள் நஷ்டம் அடைகிறார்கள். மக்கள் நீண்ட நேரத்திற்கு பஸ் கிடைக்காததால் அவதிப்படுகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி தொகுதியில் இதுவரை

    இந்த தொகுதி தமிழக ஆந்திர எல்லையில் உள்ள தமிழகத்தின் முதல் தொகுதி என்பதால் கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரசாரம் தொடங்கினால் வெற்றி என்ற நம்பிக்கையுடன் இங்கு பிரசாரத்தை தொடங்குகிறார்கள்.

    தொழிற்சாலைகள் நிரம்பிய தொகுதியாக கும்மிடிப்பூண்டி தொகுதி இருந்தாலும் நெல், நிலக்கடலை, தர்பூசணி, காய்கறி பயிரிடுதல் பிரதான தொழில். அதே போல சுமார் 12 கடற்கரையோர கிராமங்களில் மீன்பிடி தொழிலும் பிரதானமாக நடைபெறுகிறது.

    1957 கமலா அம்புஜம்மாள் (காங்கிரஸ்)
    1962 ராகவ ரெட்டி (சுதந்திரா கட்சி)
    1967 வேழவேந்தன் (தி.மு.க.)
    1971 வேழவேந்தன் (தி.மு.க.)
    1977 ஆர்.எஸ்.முனிரத்தினம் (அ.தி.மு.க.)
    1980 -ஆர்.எஸ்.முனிரத்தினம் (அ.தி.மு.க.)
    1984 ஆர்.எஸ்.முனிரத்தினம் (அ.தி.மு.க.)
    1989 கி.வேணு (தி.மு.க.)
    1991- சக்குபாய் (அ.தி.மு.க.)
    1996 கி.வேணு (தி.மு.க.)
    2001 -கே.சுதர்சனம் (அ.தி.மு.க.)
    2006 கே.எஸ்.விஜயகுமார் (அ.தி.மு.க.)
    2011 சி.எச்.சேகர் (தே.மு.தி.க.)
    2016 கே.எஸ்.விஜயகுமார் (அ.தி.மு.க.)
    Next Story
    ×