search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சுப்பிரமணிய தாசர்
    X
    சுப்பிரமணிய தாசர்

    சென்னை சித்தர்கள்: சுப்பிரமணிய தாசர்-திருவான்மியூர்- 78

    பாடல்களை யார் ஒருவர் மனம் உருகி பாடுகிறார்களோ அவர்களுக்கு முருகப் பெருமான் நிச்சயம் காட்சி கொடுப்பார் என்பது முருக பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.


    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் புகழையும், சிறப்பையும் நாடு முழுக்க பரப்பும் வகையில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எத்தனையோ முருக பக்தர்கள் தோன்றியுள்ளனர். அவர்கள் செய்த சேவையால்தான் காலம்தோறும் கந்தனின் புகழை தமிழக மக்கள் பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

    அந்த வகையில் முருகனின் புகழை பாடி பரவசம் அடைந்த பாம்பன் சுவாமிகள் தனித்துவம் கொண்டவர். 19-ம் நூற்றாண்டில் தோன்றிய முருக பக்தர்களில் இவர் வித்தியாசமானவர். தனது 12-வது வயதிலேயே முருகப்பெருமானை பற்றி பாடல் இயற்றும் திறமையை பெற்றிருந்தார்.

    அருணகிரி நாதரை தனது குருவாக கொண்டு செயல்பட்ட இவர் 1894-ம் ஆண்டு ராமநாதபுரம் அருகில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் 35 நாட்கள் தவம் இருந்து முருக பெருமானின் காட்சியை கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முருகப்பெருமான் மீது 6,666 பாடல்கள் பாடியுள்ளார்.

    இவரது பாடல்களை யார் ஒருவர் மனம் உருகி பாடுகிறார்களோ அவர்களுக்கு முருகப் பெருமான் நிச்சயம் காட்சி கொடுப்பார் என்பது முருக பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். இவரது அழகு தமிழில் மயங்கிய முருகப்பெருமான் பலதடவை கனவில் காட்சி கொடுத்து ஆசீர்வதித்துள்ளார்.

    1923-ம் ஆண்டு சென்னை தம்புச்செட்டி தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, குதிரை வண்டி மோதி கீழே விழுந்தார். அவரது கால் எலும்பு முறிந்து போனது. சென்னை சென்ட்ரல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் கால் எலும்பு ஒன்று சேர்வது கடினம் என்று கூறினார்கள்.

    இதை கேட்டு பாம்பன் சுவாமிகளின் சீடர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக பாம்பன் சுவாமிகளின் பிரதான சீடராக திகழ்ந்த சின்ன சாமி அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. அவர் தனது மனைவி பாப்பாத்தியுடன் மருத்துவ மனையிலேயே தங்கி இருந்து குருநாதர் பாம்பன் சுவாமிகளுக்கு சேவை செய்து வந்தார்.

    அப்போது பாம்பன் சுவாமிகள் தான் இயற்றிய சண்முக கவசத்தை பாடும்படி கூறினார். அதன்படி சின்னசாமி சண்முக கவசத்தை பாடத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் மருத்துவ மனையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் மனம் உருக சண்முக கவசம் பாடினார்.

    சின்னசாமியின் இந்த சேவையை கண்டு முருகப்பெருமான் மனம் இறங்கினார். அன்று இரவே பாம்பன் சுவாமிகளுக்கும், சின்ன சாமிக்கும் முருகப்பெருமான் காட்சியளித்தார். கால் எலும்பு முறிவை 15 நாட்களில் குணப்படுத்துவேன் என்று அசரீரியாக கூறினார். இதைகேட்டதும் பாம்பன் சுவாமிகளும், அவரது பிரதான சீடர் சின்னசாமியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    முருகப்பெருமான், அருளிய படி பாம்பன் சுவாமிகளின் கால் எலும்புகளை சேர்த்து குணப்படுத்தினார். பாம்பன் சுவாமிகளுக்கும், சின்ன சாமிகளுக்கும் முருகப்பெருமான் காட்சி அளித்த அந்த நாள் இன்றும் மயூரவாகன சேவன விழா என்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகளின் ஜீவசமாதி ஆலயத்தில் அவரது குருபூஜையை விட மயூரவாகன சேவன விழா மிக மிக சிறப்பாக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த விழாவை ஆண்டுக்கு ஆண்டு கூடுதல் சிறப்புடன் நடத்த வேண்டும் என்பது பாம்பன் சுவாமிகளின் விருப்பம் ஆகும்.

    பாம்பன் சுவாமிகள் வைகாசி மாதம் பரிபூரணம் அடைந்தார். அவரது பிரதான சீடரான சின்னசாமியும் ஒரு வைகாசி மாதத்தில் தான் ஜீவசமாதி ஆனார். வைகாசி மாதம் முருகப்பெருமானுக்கு மிக மிக உகந்த மாதம் ஆகும். வைகாசியில் தான் முருகனின் அளவு கடந்த ஆசியையும், அருளையும் பெற முடியும்.

    அதேபோன்று முருகனின் அருள்பெற்ற பாம்பன் சுவாமிகள் மற்றும் அவரது சீடர் சின்ன சாமி அருளை வைகாசியில் குருபூஜை மூலம் பெற முடியும். திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகளுக்கு ஜீவசமாதி ஆலயம் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அதே ஆலயத்தில் அவரது பிரதான சீடர் சின்ன சாமிக்கும் ஜீவ சமாதி இருப்பது பலருக்கும் தெரியாத ஒன்றாகும்.

    பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி ஆலயத்துக்கு அடிக்கடி செல்பவர்களுக்கு சுப்பிரமணிய தாசர் என்ற அடியாரின் ஜீவசமாதி இருப்பது தெரிந்து இருக்கும். இந்த சுப்பிரமணிய தாசர் வேறு யாரும் அல்ல. சின்னசாமி தான் சுப்பிரமணிய தாசர் என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு இந்த பெயரை சூட்டியதே பாம்பன் சுவாமிகள் தான்.

    ஆனால் திருவான்மியூர் ஜீவசமாதி ஆலயத்துக்கு செல்பவர்கள் சுப்பிரமணிய தாசர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமலேயே இருக்கிறார்கள். சுப்பிரமணிய தாசர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சின்னசாமி என்ற பெயரில் அவர் ஜோதிடம் தொழில் செய்து வந்தார்.

    சிறு வயதிலேயே முருகப்பெருமான் மீது அளவுகடந்த பக்தி கொண்டிருந்த அவர் பாம்பன் சுவாமிகளிடம் சேர்ந்து முருகனுக்கு சேவையாற்றி வந்தார். அதுவே அவரை நாளடைவில் பாம்பன் சுவாமிகளின் பிரதான சீடராக மாற்றியது. அப்போது பாம்பன் சுவாமிகள் செய்த முதல் வேலையே சின்னசாமி என்ற பெயரை சுப்பிரமணிய தாசர் என்று மாற்றியது தான்.

    முருகப்பெருமானின் பெயரை சூட்டிக் கொள்ளும் போது தாசன் என்பதும் இடம்பெற வேண்டும் என்பது பாம்பன் சுவாமிகளின் விருப்பம் ஆகும். பாம்பன் சுவாமிகளின் இயற்பெயர் அப்பாவு. இதற்கு முருகன் என்று அர்த்தமாகும். முருகன் என்ற பெயரில் நேரடியாக தன்னை யாரும் அழைக்கக்கூடாது என்று பாம்பன் சுவாமிகள் நினைத்ததால் தனது பெயரை குமருகுரு தாசர் என்று மாற்றிக்கொண்டார்.

    சின்னசாமி என்பதும் முருகனை தான் குறிக்கும். எனவே தான் அவர் சின்ன சாமி என்ற பெயரை மாற்றிவிட்டு சுப்பிரமணிய தாசர் என்ற பெயரை சூட்டினார். இதன்மூலம் பாம்பன் சுவாமிகளும், சுப்பிரமணிய தாசரும் மிகச் சிறந்த குரு-சீடராக திகழ்ந்தது உறுதியாகிறது.

    பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதிக்கு செல்லும் போது நுழைவு வாயிலை கடந்ததும் முதன்முதலில் வருவது சுப்பிரமணிய தாசரின் ஜீவசமாதி தான். அவரை வழிபட்ட பிறகே, அவரது குருவான பாம்பன் சுவாமிகளை பக்தர்கள் வழிபட செல்ல வேண்டும் என்பது ஒரு ஐதீகமாகவே கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அதை உறுதிபடுத்துவது போல பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதிக்கு செல்லும் அனைவரும் முதலில் சுப்பிரமணிய தாசரை வணங்கிவிட்டு பிறகு பாம்பன் சுவாமிகள் உறைவிடத்துக்கு செல்கிறார்கள். இந்த ஜீவசமாதி ஆலயத்தில் திருவடி இடமாக சுப்பிரமணியதாசரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. திருவடியை வணங்கினால் தான் முழு உருவை தரிசனம் செய்ய முடியும் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.

    மேலும் அங்கு ஒரே இடத்தில் குருவும், சீடரும் ஐக்கியமாகி இருக்கிறார்கள். ஒரு இடத்தில் ஒரு சித்தர் ஐக்கியமாகி இருந்தாலே அருள் அலைகள் அதிகமாக இருக்கும். ஆனால் இங்கு இரு சித்தபுருஷர்கள் அடங்கியுள்ளனர். இதனால் அதிகளவில் அதிர்வலைகளை உணர முடியும். மனதிற்குள் ஒருவித அமைதி புகுந்துகொள்வதையும் அனுபவிக்க முடியும். அந்த வகையில் பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி ஆலயம் புனிதம் நிறைந்த புண்ணிய பூமியாக கருதப்படுகிறது.

    அதற்கு முக்கிய காரணம் பாம்பன் சுவாமிகள் தனது சீடர் சுப்பிரமணிய தாசரை பக்குவப்படுத்தி வழிநடத்திய விதம் தான். முருகப்பெருமானிடம் தான் எவ்வாறெல்லாம் காட்சிகள் பெற்று அருள் மழையில் நனைந்தாரோ அதே அளவுக்கு தனது சீடனுக்கும் முருகப்பெருமானின் அருள் மழையை பெரும் பாக்கியத்தை பாம்பன் சுவாமிகள் பெற்றுக் கொடுத்தார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை படித்து பார்த்தால் அவர் எந்த அளவுக்கு முருகனின் அருளை பெற சுப்பிரமணியதாசருக்கு உதவினார் என்பது தெள்ளத்தெளிவாக தெரியும்.

    சுப்பிரமணியதாசர் சண்முக கவசம் படிக்கும் போதெல்லாம் அவருக்கு முருகப்பெருமான் 3 வேல்களில் தோன்றி காட்சி கொடுத்த அதிசயம் நடந்தது. சுப்பிரமணிய தாசர் சண்முக கவசம் பாடிய பிறகுதான் பாம்பன் சுவாமிகளின் காலை குணப்படுத்தும் அற்ப்புதத்தை முருகப்பெருமான் நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் குருநாதரின் மொழிக்கு உயிர் கொடுத்தவர் என்ற சிறப்பு சுப்பிரமணிய தாசருக்கு உண்டு.

    அதனால் தான் பாம்பன் சுவாமிகளின் திருவடியாக சுப்பிரமணிய தாசர் திகழ்கிறார் என்று அவரது பக்தர்கள் இன்றும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எனவே பாம்பன் சுவாமிகள் ஆலயத்துக்கு செல்லும் போது சுப்பிரமணிய தாசரின் ஜீவசமாதியிலும் மனம் உருக வழிபட வேண்டும்.

    ஒருவருக்கு முழுமையான ஆத்ம ஞானம் வந்தால் தான் அவரை குருநாதர் என்ற அந்தஸ்தில் வழிபட முடியும். இந்த அந்தஸ்தை இளம் வயதிலேயே பெற்றவர் பாம்பன் சுவாமிகள். ஆனால் சுப்பிரமணிய தாசருக்கு அந்த அந்தஸ்தை பாம்பன் சுவாமிகள் மிக எளிதாக ஏற்படுத்திக்கொடுத்தார்.

    வெளி உலகத்திற்கு தான் அவர்கள் இருவரும் குரு-சீடர்களாக திகழ்ந்தனர். ஆனால் உண்மையில் முருகன் அருளை பெறுவதிலும், பெற்ற அருளை அனுபவிப்பதிலும் அவர்கள் இருவரும் ஒருமித்த மனநிலையுடன், ஒருமித்த எண்ணத்துடனேயே வாழ்ந்தனர்.

    இதன்காரணமாகவே வாழ்நாள் முழுவதும் தனது குருவின் எண்ணங்களுக்கு உயிரூட்டு பவராக சுப்பிரமணியதாசரால் திகழ முடிந்தது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பாம்பன் சுவாமிகள் ஆலயத்தில் அருளை பெறுவதற்கான நுழைவுவாயில் சாவியாகவே அவர் இருந்தார். இப்போதும் இருந்துகொண்டு இருக்கிறார்.

    தனது ஞானம் மூலம் நூற்றுக்கணக்கானவர்களை ஆன்மீக பாதைக்கு திருப்பிய அந்த மகான்-ம் ஆண்டு வைகாசி மாதம் ஆமாவாசை திதி தினத்தன்று பரிபூரணம் அடைந்தார். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் அமாவாசை திதி அன்று மகா குருபூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுப்பிரமணிய தாசரின் 71-வது குருபூஜை ஆகும். நாளை மறுநாள் 30-ந்தேதி சுப்பிரமணிய தாசரின் ஜீவசமாதியில் குருபூஜை நடைபெற உள்ளது. அன்று பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் இசை வழிபாடாக நடைபெறும். அதில் பங்கேற்றால் பாம்பன் சுவாமிகள், சுப்பிரமணிய தாசர் ஆகியோருடைய அருளை மட்டுமின்றி முருகப்பெருமானின் கருணையையும் பெற்று வரலாம்.

    Next Story
    ×