search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    குஷ்பு
    X
    குஷ்பு

    குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும்... கட்சியை விட சுய கவுரவம் பெரிதா?- 43

    நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.


    காங்கிரஸ்... ஒரு காலத்தில் நாடு முழுவதும் எல்லோருக்கும் தெரிந்த ஒரே அரசியல் கட்சி காங்கிரஸ் தான் என்பது மிகை ஆகாது.

    நான் சிறுமியாக இருந்த போதே மும்பையில் காங்கிரஸ் கொடியை கையில் பிடித்தபடி அரசியல் நிகழ்ச்சிகள் நடப்பதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். மாணவ பருவத்தில் காங்கிரசை பற்றி ஓரளவு அறிந்து கொண்டேன். நாட்டுக்காக போராடிய கட்சி நல்ல பல தலைவர்கள் இருந்த கட்சி என்றெல்லாம் அறிந்தேன்.

    அரசியல் மீது ஏற்பட்ட ஆர்வத்தில் தான் தி.மு.கவில் இணைந்து எனது அரசியல் பயணத்தை தொடங்கினேன். சுமார் 10 ஆண்டுகள் அந்த கட்சியில் இருந்து அரசியலை ஓரளவு புரிந்தும் கொண்டேன்.

    தி.மு.கவை விட்டு வெளியேறினாலும் அரசியல் ஆர்வம் மட்டும் என்னை விட்டு வெளியேறவில்லை என்று தான் சொல்லவேண்டும். அதனால் தான் அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் என்னிடம் குறையாமல் இருந்தது.

    ஆர்வம் இருந்தது. ஆனால் எந்த கட்சியில் இணைவது என்று தெரியவில்லை. அப்போது தான் காங்கிரஸ் கட்சியை பற்றி யோசிக்க தொடங்கினேன். நல்ல தலைவர்கள் இருந்த கட்சி என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சியில் சேருவது என்று தீர்மானித்தேன்.

    எனது எண்ணப்படியே காங்கிரசிலும் இணைந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்த காங்கிரஸ் இப்போது இல்லை என்பதை உள்ளே சென்ற பிறகு கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டேன்.

     

    குஷ்பு, சோனியா காந்தி

    அகில இந்திய செய்தி தொடர்பாளர் பதவியை சோனியா காந்தி வழங்கினார். அந்த பதவிக்கு எந்த குறையும் வைக்காமல் மனநிறைவோடு உழைக்கவும் செய்தேன்.

    ஆனால் நான் முதலிலேயே குறிப்பிட்டது போல் காங்கிரஸ் முந்தைய காங்கிரஸ் போல் இல்லை என்பதால் பலர் கட்சியை விட்டு விலகி கொண்டிருந்தார்கள்.

    நான் தாக்கு பிடிக்கலாம் என்று நம்பினேன். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த ‘கை’ என்னையும் கைவிட்டது. காங்கிரசில் இருந்து விலகு வதை தவிர வழிஇல்லை என்ற நிலைமை ஏற்பட்டது.

    அதற்கு காரணம் தலைமையை மட்டும் குறை சொல்ல முடியாது. சோனியா மீதான மரியாதை தனியானது. ஆனால் அரசியல் ரீதியாக அவரால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை.

    ஒரு அரசியல் இயக்கத்திற்கு தகுதியும், திறமையும் வாய்ந்த தலைவர் இருந்தால் தான் கட்சியினருக்கு பயம் இருக்கும். ஆனால் காங்கிரசில் ஆளாளுக்கு முடிவு எடுக்கிறார்கள். 10 தலைவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு முடிவை எடுக்கிறார்கள்.

    அதனால் தான் கட்சி பலவீனம் அடைகிறது. கட்சிக்கு வேலை செய்பவர்களை விட சுற்றி இருக்கும் 10 பேரை சமாளிப்பதே பெரிய வேலை. பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    நான் காங்கிரசில் இருந்து வெளியேற டெல்லி தலைவர்கள் காரணம் அல்ல. தமிழ் நாட்டில் காங்கிரசுக்குள் எத்தனை கோஷ்டிகள்...? என்பதை எல்லோரும் அறிவார்கள்.

    ஒருவரை ஒருவர் ஓரம் கட்டுவது எப்படி? என்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர கட்சி வளர்ப்பில் ஆர்வம் காட்டவில்லை. தலைவர்களை தாஜா செய்தால் தான் பதவி கிடைக்கும் என்ற பரிதாப நிலை. இந்த நிலை எப்போதும் மாறப்போவதும் இல்லை.

    குஷ்புவுக்கு பெயர், புகழ், பணம் அரசியலை வைத்து தான் சம்பாதிக்க வேண்டுமா? ரசிகர்கள் கோவில்கட்டும் அளவுக்கு புகழும் பெற்று விட்டேன். ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட காலத்தையும் சந்தித்தவள் நான். இப்போது தேவையான அளவுக்கு பணமும் சம்பாதித்து விட்டேன்.

    கட்சிக்கூட்டங்களுக்கு நான் பேசுவதற்கு சென்றால் கூட்டம் கூடுகிறது. எனக்கு தான் பத்திரிக்கைகளும் முக்கியத்துவம் தருகின்றன என்ற பொறாமை குணம் அங்கு உருவானது. இதற்கு நான் என்ன செய்வேன்? இந்த ஒரே காரணத்தால் தான் என்னை ஓரம் கட்ட தொடங்கினார்கள்.

    கூட்டங்களுக்கு அழைப்பு கொடுப்பதை கூட தவிர்த்தார்கள். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் தலைவராக இருந்த போது தான் காங்கிரசில் சேர்ந்தேன்.

    அவரை பொறுத்த வரை ஈகோ பார்க்க மாட்டார். பொதுக்கூட்டங்களில் பேசும் போது அவர் முதலில் பேசி விட்டு என்னை கடைசியில் பேச வைப்பார். அப்போது தான் கூட்டம் இருக்கும் என்பார். அதில் எந்த கவுரவமும் பார்க்க மாட்டார்.

    ஒரு முறை ஒரு கூட்டத்துக்கு போகும் போது வேறொரு தலைவர் வந்தார். அவர் முறைப்படி நான் தான் கடைசியில் பேசுவேன் என்றார். ஈ.வி.கே.எஸ். எவ்வளவோ சொல்லி பார்த்தார். அவர் கேட்க வில்லை.

    அவர் சொன்ன படி நான் முதலில் பேசினேன். நான் பேசி முடித்ததும் மொத்த கூட்டமும் கலைந்து சென்று விட்டது.

    இது தான் காங்கிரஸ் கட்சியின் நிலை. யாரை எப்படி பயன்படுத்தி கொள்வது என்று யோசிக்க மாட்டார்கள். தங்கள் கவுரவத்தை மட்டுமே பார்ப்பார்கள்.

    அடிமட்ட தொண்டர்களும், பல நிர்வாகிகளும் என்னிடம் அன்பு காட்டினார்கள். என்னை வைத்து தங்கள் அரசியலை பலப்படுத்தி கொண்டார்கள். ஆனால் உயர்மட்ட தலைவர்கள் தங்களுக்கு பலவீனமாகி விடும் என்ற தவறான எண்ணத்தால் என்னை ஓரம் கட்டினார்கள்.

    அரசியலில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்த என்னால் வேலை செய்யாமல் எத்தனை நாள் இருக்க முடியும்?

    அரசியல் இப்படித்தான்...! இதற்குள் இருந்து போராடி தான் நாம் எதிர்பார்ப்பதை சாதிக்க முடியும் என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை.

    உழைப்புக்கும், திறமைக்கும் ஏற்ற மரியாதை கிடைக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவள் நான்.

    அரசியலுக்கு இழுத்த கழுதை போராட்டம்

    நான் அரசியலுக்கு வராத காலம். ஆனால் பொதுவாக வெளிவரும் கருத்துகளுக்கு என் மனதில் படும் பதிலை எதை பற்றியும் யோசிக்காமல் பட்டென்று சொல்லி விடுவேன்.

    இப்போது நாம் இந்த கட்சியில் இருக்கிறோம். எனவே இதை சொல்லக் கூடாது என்றெல்லாம் நினைப்பதில்லை. என் மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதை உடனே சொல்லிவிடுவேன். இதனால் தான் சில நேரங்களில் சிலரது எதிர்ப்பையும் சந்திக்க வேண்டி வருகிறது.

    அப்படி தான் 2005-ல் நான் அரசியலுக்கு வராத அந்த காலகட்டத்தில் நான் சொன்ன ஒரு கருத்துக்காக என் மீது சிலர் பொங்கி எழுந்து விட்டார்கள். எனக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களையும் நடத்தினார்கள்.

    என் வீட்டுக்கு கழுதையுடன் ஊர்வலமாக வந்து வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். அப்போது நான் வீட்டில் இல்லை. வீட்டில் இருந்த எனது குழந்தைகள் வீட்டிற்கு வெளியே கழுதை, கையில் துடைப்பகட்டையுடன் ஆவேசமாக அர்ச்சனை செய்து கொண்டிருந்தவர்களை பார்த்து பயந்து நடுங்கி இருக்கிறார்கள்.

    நான் வீடு திரும்பியதும் என் குழந்தைகள் ‘அம்மா... ஏம்மா உன்னை இப்படி எல்லாம் திட்டுறாங்க... பயமா இருக்கும்மா’ என்று அழுதார்கள்.

    இந்த சம்பவமும் நான் அரசியலில் ஈடு படுவதற்கு ஒரு காரணமாக இருந்தது.

     ttk200@gmail.com

    Next Story
    ×