search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கவிஞர் இரவிபாரதி
    X
    கவிஞர் இரவிபாரதி

    குழந்தை வளர்ப்பு பற்றி கண்ணதாசன் கவிதை- 24

    “தைப்பிறந்தால் வழி பிறக்கும்” படத்திற்காக நாமக்கல் முத்துச்சாமி என்ற கவிஞர் எழுதிய வரிகளையும் பொருத்தமாக இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.


    குழந்தைகள் என்றால் கொள்ளை அன்பு கண்ணதாசனுக்கு. குழந்தைகளோடு கொஞ்சி விளையாடுவது கவிஞருக்குப் பிடித்தமான ஒன்று. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எங்களோடு பேசி, விளையாடி மகிழ்ந்திடுவார் “அப்பா” என்று காந்தி கண்ணதாசனும், அண்ணாத்துரை கண்ணதாசனும் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன். குழந்தைகள் என்ன கேட்டாலும் அதை மறுக்காமல் உடனே வாங்கிக் கொடுத்து விடுகிற பாசத்திற்குச் சொந்தக்காரர் கண்ணதாசன்.

    படத்தின் சூழ்நிலைக்கேற்றவாறு “குழந்தையும் தெய்வமும்” என்ற படத்திற்காக ஒரு பாட்டினை கண்ணதாசன் எழுதினார். அந்தப் பாட்டு, பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது.

    குழந்தையும் தெய்வமும்
    குணத்தால் ஒன்று
    குற்றங்களை மறந்து விடும்
    மனத்தால் ஒன்று...
    பிறந்து வந்த போது நெஞ்சம்
    திறந்திருந்தது... அந்தப்
    பிள்ளையோடு தெய்வம் வந்து
    குடியிருந்தது...
    கள்ளமிலா உள்ளத்தினால்
    பிள்ளைகளெல்லாம்-என்றும்
    கண்ணெதிரே காணுகின்ற
    தெய்வங்களானார்...

    என்ற வைர வரிகள் இடம் பெற்று, கேட்போர் இதயங்களை எல்லாம் கிறு கிறுக்க வைத்தது.

    ஆக, சூதுவாது ஏதும் அறியாப் பிள்ளைச் செல்வங்களை கண்ணதாசன் தெய்வங்களாகவேப் பார்த்திருப்பது... திரைப்படப் பாட்டில் மட்டுமல்ல. கவிதையிலும் அந்தக் கருத்தினையே எதிரொலிக்கிறார்.

    “குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பிலே
    “பிள்ளைச் செல்வங்கள்-அவை
    பேசும் தெய்வங்கள்...
    உள்ளம் வெள்ளை... உலவும் முல்லை
    கொஞ்சும் கிள்ளை...
    வஞ்சம் இல்லை....!

    என்று தொடங்குகிறது அந்த கவிதை. இதே போன்று “நெஞ்சில் ஓர் ஆலயம்” என்ற படத்திலே வரும் “முத்தான முத்தல்லவோ” பாட்டிலே

    “வாழாத மனிதரையும்
    வாழ வைக்கும் சேயல்லவோ
    பேசாத தெய்வத்தையும்
    பேச வைக்கும் தாயல்லவோ”

    என்ற அற்புதமான வரிகளையும் எழுதி, குழந்தையின் தெய்வீக சக்தியையும், ஆற்றலையும் வெளிப்படுத்தி இருக்கிறார் கண்ணதாசன்.

    இப்போதெல்லாம் பெண்கள் பிறந்த பிள்ளைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவது அரிதாகி விட்டது. தாய்ப்பாலில் இருக்கும் சத்து வேறு எதிலும் இல்லை என்பதையும், பிள்ளைகளைத் தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்பதையும், காலம் அறிந்து உணவு கொடுத்து மிகக் கவனமாயிருந்து பிள்ளைகளை காக்க வேண்டும் என்பதையும், பயந்து பயந்து பிள்ளைகளை வீட்டுக்குள்ளே பூட்டி வைத்து விடக்கூடாது என்பதையும் அன்பைக் கொடுத்து பண்பை ஊட்டி வளர்க்க வேண்டுமென்பதையும் குழந்தை வளர்ப்பு கவிதையில் தெளிவாக எடுத்துரைக்கிறார் கண்ணதாசன்.

    “தாயின் பாலைத் தந்து வளர்த்தால்
    தங்கம் போல் வளரும்
    தழுவும் போதே தட்டி வளர்த்தால்
    தன்னை உணர்ந்து விடும்
    நோயில்லாமல் காத்து வளர்த்தால்
    நூறு வயது வரும்...
    நோக்கம் ஒன்றைச் சொல்லி வளர்த்தால்
    பாரில் உயர்ந்து விடும்.
    காலம் அறிந்து உணவு கொடுத்தால்
    கவலை பறந்து விடும்
    கல்விக் கடலில் மூழ்கிட வைத்தால்
    காலத்தை வென்று விடும்
    பாலைப்போன்ற பிள்ளை மனதில்
    எதுவும் பதிந்து விடும் பயந்து
    பயந்து வீட்டுக்குள் வைத்தால்
    பயனின்றி மாறி விடும்
    அன்பை அதிகம் காட்டி வளர்த்தால்
    அதுவும் அன்பாகும்
    ஐந்து வயதில் கற்பவை எல்லாம்
    ஆயுள் வரை தொடரும்
    பண்பாடு உள்ள பிள்ளைகளைத் தான்
    பாரதம் வேண்டுவது
    பாரத நாட்டுத் தாய்மார்க் கெல்லாம்
    வெறென்ன கூறுவது?”

    என்று தெள்ளத் தெளிவாக எளிய தமிழ்நடையில் எடுத்துரைக்கிறார் கண்ணதாசன். நாளைய உலகம் இருக்கப் போகிறது. எனவே பிள்ளைச் செல்வங்களைக் காத்து வளர்ப்பது. நமது நாட்டைக் காத்து வளர்ப்பது போல என்கிறார் கண்ணதாசன்.

    “சாந்தி நிலையம்” என்ற படத்திலே வருகிற
    பாட்டிலே கூட...
    செல்வங்களே...
    தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே...
    சிறிய வயதில் அறிவை வளர்த்து
    உலகை வெல்லுங்களே...-என்று எழுதியிருக்கிறார் கண்ணதாசன்.
    பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா-அதைப்
    பேணி வளர்க்க வேணும் தெரியுமா...?

    என்ற பாட்டினை “தைப்பிறந்தால் வழி பிறக்கும்” படத்திற்காக நாமக்கல் முத்துச்சாமி என்ற கவிஞர் எழுதிய வரிகளையும் பொருத்தமாக இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

    இந்தப் பாட்டிலேதான் பிள்ளைச் செல்வங்களின் பெருமையினை...

    அழுதால் அரும்புதிரும்
    அண்ணாந்தால் பொன்னுதிரும்
    சிரிச்சால் முத்துதிரும்-வாய்
    திறந்தால் தேன்சிதறும்.... என்று வைர வரிகளால் வர்ணித்திருக்கிறார் கவிஞர் முத்துச்சாமி.

    எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
    மண்ணில் பிறக்கையிலே-அவர்
    நல்லவாராவதும் தீயவராவதும்
    அன்னை வளர்ப்பதிலே

    என்ற முத்தான வரிகளை “நீதிக்குத் தலைவணங்கு” படத்திற்காக புலவர் புலமைப்பித்தனின் பாட்டையும், நமது கவிஞர் கண்ணதாசனின் கவிதையோடு பொருத்திப் பார்க்கிறேன். பிள்ளைச் செல்வங்களைப் பற்றி எழுதும் போது எல்லாக் கவிஞர்களும் ஒரே திசையில்தான் பயணிக்கிறார்கள்.

    பிள்ளைச் செல்வங்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது....

    “குழந்தை வளர்ப்புக்” கவிதையில், பல்வேறு கருத்துக்களை முன் வைத்து நமது சிந்தனையைத் தூண்டுகிறார் கண்ணதாசன்.

    பெற்றோர்கள் நமது பிள்ளையை பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி வைத்து விட்டோம் என்ற நிம்மதிப் பெருமூச்சோடு நின்று விடுகிறார்கள். அது போதவே போதாது தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கல்வியின் பெருமை என்னவென்று பிள்ளைகளுக்கு படிப்படியாகப் புரிய வைக்கணும். மலை வாழைப்பழத்தை பிட்டுப்பிட்டு குழந்தைகளுக்கு ஊட்டுவதுப் போல் ஊட்ட வேண்டும் என்று பாவேந்தர் பாரதிதாசன் சொன்னது போல செய்ய வேண்டும்.

    விலை போட்டு வாங்கவா முடியும்- கல்வி
    வேளை தோறும் கற்று வருவதால் படியும்
    கடிகாரம் ஓடுமுன் ஓடு... எனது
    கண்ணே... அண்டை வீட்டுப் பெண்களோடு...

    இதுவும் பாவேந்தரின் வைர வரிகள்தான். நமது கவியரசர் கண்ணதாசன் எல்லாக் கவிஞர்களோடும் பழகியவர் மட்டுமல்ல. அவர்களது கவிதைகளைப் பாராட்டி மகிழ்பவரும் ஆவார். நல்ல கருத்துக்கள் எங்கே இருந்து வந்தாலும் அவற்றைப் பயன்படுத்த தயங்க மாட்டார். தவற மாட்டார். பரந்த மனத்திற்கு சொந்தக்காரர்.

    இப்பொழுதெல்லாம் அப்பாக்கள் பிள்ளையைப் போய் மது வாங்கி வரச் சொல்லும் மிகப்பெரிய கொடுைம பல வீடுகளில் நடக்கிறது. அதனுடைய விளைவுகளைப் பற்றி அப்பாக்கள் சிந்திப்பதே இல்லை. இந்த அநியாயம் மெல்ல மெல்ல வளர்ந்து பிள்ளைகளை சாராயக் கடையிலே கொண்டு போய் நிறுத்தி விடுகிறது. கண்டிக்க வேண்டிய அப்பாவே குடிக்கும் போது... நாமும் குடித்துப் பார்ப்போமே என்றெண்ணி பயம் போய் விடுகிறது.

    மாணவர்கள் வகுப்பறையிலே மதுக்குடிக்கிற காட்சிகள் அண்மையில் ஊடகங்களில் வெளிவந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் தமிழகமே உறைந்து போய் விட்டது. போதாக்குறைக்கு இளம் மாணவிகள் மதுக் குடிக்கும் காட்சிகளும் ஊடகங்களில் வெளிவந்த போது பூமியே வெடித்து பிளந்தது போல் இருந்தது. நமக்கே இத்தனை அதிர்ச்சியாக இருக்கும் போது பெற்றோர்களுக்கு எப்படி மனம் கொதித்திருக்கும்?

    எதிர்காலத்தில் இப்படியெல்லாம் தீமைகள் எல்லாம் திரண்டு வரக்கூடும் என்று கண்ணதாசன் சிந்தித்திருக்க கூடும் என்றுதான் நினைக்கிறேன். துயரங்கள் அப்படி எல்லாம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே கீழ்க்காணும் இந்தக் கவிதையினை கவிஞர் எழுதி இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

    “பெற்றால் மட்டும் போதாதம்மா-நன்றாய்ப்
    பிள்ளை வளர்க்கத் தெரியணும்
    கற்றால் மட்டும் போதாதம்மா-நற்
    கல்வியின் பெருமை அறியணும்...
    எத்தனை பிள்ளை நாட்டில் பிறந்தது
    எல்லாம் “காந்தி” இல்லை
    எந்தப் பிள்ளையும் தவறாய் வளர்ந்தால்
    என்றும் சாந்தி இல்லை
    குழந்தை முன்னே தகப்பன் குடித்தால்
    குடிக்கப் பழகி விடும்
    கோபத்தாலே வார்த்தைகள் சொன்னால்
    குழந்தையும் கற்று விடும்
    சேரும் குழந்தை சிறப்பினைப் பார்த்து
    சேர்ந்திட வைக்க வேணும்
    தினமும் காலையில் குளித்திட வைத்து
    தெய்வத்தை வணங்க வேணும்...
    செல்லம் கொடுத்து வளர்ப்பத னாலே
    தீமையும் வருவதுண்டு
    தினமும் பிள்ளையை அடிப்பதனாலே
    சொரணையும் போவதுண்டு...
    தங்கப் பிள்ளைகள் வளரும் முறைகள்
    தாயார் கைகளிலே
    தட்டுக் கெட்டு போகாதிருக்கணும்
    தந்தை கவனிப்பினிலே
    தண்டவாளம் சரியா திருந்தால்
    வண்டிக்கு ஆபத்து இல்லை
    தாயும் தந்தையும் சரியாய் வளர்த்தால்
    சேய்க்கொரு ஆபத்தில்லை...”

    “குழந்தை வளர்ப்பு” பற்றி இதை விடச் சிறப்பாய் எவரால் எழுதிட இயலும்? என்று பாராட்டும் வகையில் இந்தக் கவிதையை வடித்திருக்கிறார் கண்ணதாசன்.

    அடுத்த வாரம் சந்திப்போம்

    Next Story
    ×