search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பி. சுவாமிநாதன்
    X
    பி. சுவாமிநாதன்

    கருணை தெய்வம் காஞ்சி மகான்-41

    கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

    தாதர் ரெயில் குல்பர்கா ஸ்டேஷனை அடைந்ததுமே, தியாகராஜன் முகத்தில் ஒரு பரவசம்.

    ‘எப்படியும் மகா பெரியவாளை இன்னும் ஒரு சில மணி நேரங்களில் தரிசிக்கப் போகிறோம்’ என்கிற ஆனந்தம்தான் அது!

    குல்பர்காவில் மகா பெரியவா எந்தப் பகுதியில் முகாமிட்டிருக்கிறார் என்பது தெரிய வேண்டுமே... பாஷை தெரியாத ஊர் வேறு... யாரிடம் விசாரிக்கலாம் என்று சுற்றும் முற்றும் பார்த்தார்.

    சில அடி தொலைவில் ஸ்டேஷன் மாஸ்டர் அறை தென்பட்டது. ‘அவரிடம் கேட்கலாம்... எப்படியும் தெரிந்திருக்கும்’ என்று அவரது அறையை நோக்கி நடந்தார். உடன் மனைவி ராஜலட்சுமியும், மகன் அருண்குமாரும் சென்றனர்.

    ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குள் நுழைந்ததுமே, புன்னகையுடன் வரவேற்றார் அவர்.

    ‘‘இந்த குல்பர்கால காஞ்சி மகா பெரியவாங்கிற சந்நியாசி எங்கே முகாமிட்டிருக்கிறார்னு தெரியுமா சார்?’’ என்று கேட்டார் தியாகராஜன்.

    ‘மகா பெரியவா’ என்ற பெயரைச் சொன்னதும், ஸ்டேஷன் மாஸ்டர் முகத்தில் அப்படி ஒரு பரவசம்!

    ‘‘அந்த மகானைத் தரிசிக்கவா வந்திருக்கிறீர்கள் தமிழகத்தில் இருந்து...’’ என்று ஆச்சரியப்பட்டவாறு சொன்னார்: இங்கிருந்து அந்த மகான் மகாகாவ் சென்று விட்டார் என்று கேள்விப்பட்டேன். அங்கு செல்வதற்குச் சாலை வசதி சுமாராகத்தான் இருக்கும். வெளியே சென்று விசாரியுங்கள்... பேருந்து இருக்கிறதா என்று சொல்லுவார்கள்.’’

    அவருக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தார்கள் மூவரும். சாலையில் கலந்தார்கள்.

    ஒரு சில தப்படிகள் நடந்ததும், காக்கி பேண்ட் - சட்டை அணிந்த ஒருவன் அவர்களை எதிர்கொண்டான்.

    தானாகவே வலிய முன்வந்து, ‘‘வாருங்கள்... உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று இவர்களைப் பார்த்துக் கேட்டான் பவ்யமாக.

    விவரம் சொன்னார் தியாகராஜன்.

    பிறகு அவர்களை அருகில் இருந்த ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றான். இவர்களை வாசலில் நிறுத்தி விட்டு, அவன் மட்டும் உள்ளே போனான். ஏதோ பேசி விட்டு வெளியே வந்தான். பிறகு, அவன்பாட்டுக்குப் போய் விட்டான்.

    ‘என்னடாது... நம்மிடம் வந்து ஏதோ பேசினான்... கூட்டிக் கொண்டு இந்த வீட்டுக்கு வந்தான். உள்ளே போனான்... ஏதோ பேசினான்... இப்ப அவன்பாட்டுக்கு வெளியே போகிறானே? யார் இவன்? எதற்கு நம்மை இங்கே கூட்டிக் கொண்டு வந்தான்?’ என்று தியாகராஜன் யோசிக்கிறபோது அந்த அதிசயம் நடந்தது.

    ஆம்! இந்த வீட்டுக்குள் நுழைந்து அவன் என்ன சொன்னான் என்பது அடுத்த ஒரு சில நிமிடங்களில் தெரிய வந்தது.

    அந்த வீட்டுக்குள் இருந்து ஒரு பெண்மணி வெளியே வந்தார். வெந்நீர், கொதிக்கக் கொதிக்க ரசம் சாதம் ஆகியவற்றைக் கொண்டு வந்து தந்தாள். மணி மதியம் 12.

    மகா பெரியவா தங்கி இருக்கிற இடத்தை விசாரிக்கிற கவனத்தில் பசி என்பதையே கிட்டத்தட்ட மறந்து விட்டிருந்தார் தியாகராஜன். ஆனால், மணக்க மணக்க ரசம் சாதம் வந்ததைப் பார்த்ததும், மூவருக்கும் பசி உச்சத்துக்குப் போனது.

    உடலும் உள்ளமும் குளிர்ந்தது.

    சாப்பாடு கொடுத்து உபசரித்த அந்தப் பெண்மணி சொன்னாள்: ‘‘மகா பெரியவா மீண்டும் இந்த ஊருக்கு வர்றதுக்கு நாலு நாட்களுக்கு மேல் ஆகும். நீங்கள் அவரை உடனே தரிசிக்க வேண்டும் என்றால், இங்கிருந்து மகாகாவ் சர்க்கிள் என்கிற இடத்துக்கு ஒரு டிராக்டர் புடிச்சுப் போங்கோ. இதோ, வெளியே டிராக்டர் நிக்குது பாருங்க’’ என்று டிராக்டர் நிற்கிற இடத்தைக் காண்பித்தாள். பிறகு, ‘‘மகாகாவ் சர்க்கிளில் இருந்து ஒரு பஸ் நாகுர் என்கிற ஊருக்குப் போகும். அதில் போனால் பெரியவா இருக்கிற இடத்தை அடைந்து விடலாம்.’’

    பெரியவாளை உடனே தரிசிப்பதற்கு நிதானமாக வழி சொன்னாள்.

    ஆச்சரியம் என்ன தெரியுமா? கொடுத்த சாப்பாட்டுக்கு அந்தப் பெண்மணி காசே வாங்கவில்லை.

    ‘அன்னபூரணி’க்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தது தியாகராஜன் குடும்பத்தினர். ஒரு சில அடிகள் நடந்து ஒரு டிராக்டர் பிடித்து மகாகாவ் சர்க்கிள் என்கிற இடத்துக்குப் போயாகி விட்டது.

    பெரியவா தங்கி இருக்கிற இடத்துக்குப் போக வேண்டுமானால் நாகுர் செல்கிற பஸ்சில் பயணிக்க வேண்டும். தியாகராஜனது போதாத வேளை... அந்த பஸ் போயாகி விட்டதாம். மகா பெரியவா தங்கி இருக்கிற ஊருக்குப் போக வேண்டிய கடைசி பஸ் இதுதான். மதியம் இரண்டு மணிக்குப் புறப்பட வேண்டிய அந்தப் பேருந்து சரியான நேரத்தில் புறப்பட்டுப் போய் விட்டது.

    தியாகராஜன் சற்றே கவலையானார். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ‘மகா பெரியவா முகாமிட்டிருக்கிற இடத்தை நடந்தே சென்று விடலாம்’ என்று அங்குள்ள சிலர் சொன்னார்கள். அதன்படி நடந்தே செல்லலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. 25 கி.மீ. தொலைவு என்று சொன்னார்கள்.

    கிராமத்திலேயே பிறந்து - அங்கேயே வாழ்ந்தவர்களுக்கு நடை என்பது ஒன்றும் பெரிய சிரமம் இல்லை. அதுவும் 25 கி.மீ. ஒன்றும் அவ்வளவு தொலைவில்லை அவர்களுக்கு. எனவே, குடும்பத்துடன் கால்நடையாகவே சென்று விடலாம் என்று முடிவெடுத்தார் தியாகராஜன்.

    இவர்களது நல்ல நேரம் பாருங்கள்... பெரியவாளைத் தரிசிப்பதற்காக வந்த இரண்டு வேத வித்யார்த்திகளும் அந்தக் கடைசி பஸ்சைத் தவற விட்டிருக்கிறார்கள். அவர்களும் தியாகராஜன் குடும்பத்தோடு நடக்கத் தொடங்கினார்கள். இருவருமே இள வயதினர்.

    மூவரோடு ஐவரானார்கள். ஒருவருக்கு ஒருவர் விசாரிப்புகளோடு நடை தொடங்கியது.

    சிறிது தொலைவு சென்றதும், இரண்டு கார்கள் வேகமாக இவர்களைக் கடந்து சென்றன.

    கடந்து சென்ற கார்கள், திடீரென்று தங்கள் வேகத்தைக் குறைத்துக் கொண்டன. இரண்டு கார்களும் அப்படியே ரிவர்ஸ் வந்தன.

    தியாகராஜனுக்கும் மற்றவர்களுக்கும் குழப்பம்... ‘போன வேகத்தில் ரிவர்ஸ் எடுத்து நம்மிடம் வருகிறார்களே...’ என்று ஆச்சரியத்துடன் கார்களையே பார்த்தார்கள்.

    ஒரு காரில் முழுக்க ஆட்கள் உட்கார்ந்திருந்தார்கள். அதில் கொஞ்சமும் இடமில்லை. இன்னொரு காரில் இரண்டு பேர் தாராளமாக உட்காரும் அளவுக்கு இடம் இருந்தது.

    இரண்டு பேர் உட்காரும் அளவுக்கு இடம் இருந்த காரில் இருந்து கீழே இறங்கினார் ஒரு அன்பர். புன்னகை முகத்தோடும் பயபக்தியோடும் காணப்பட்டார்.

    அவர் யார் தெரியுமா?
    உங்கள் அனைவருக்குமே தெரிந்தவர். ராஜபாளையம் ‘ராம்கோ’ நிறுவனத்தின் சேர்மன் ராமசுப்ரமண்யராஜா.

    ராமசுப்ரமண்யராஜாவுக்கும், தியாகராஜனுக்கும் ஏற்கனவே அறிமுகம் உண்டு.

    ‘‘நீங்க ராதாகிருஷ்ணனோட சின்ன மாமனார்தானே..?’’ என்று கேட்டார் ராமசுப்ரமண்யராஜா.

    ‘‘ஆமாம்’’ என்ற தியாகராஜனுக்கும் சேர்மனை அடையாளம் தெரிந்து விட்டது. மரியாதை நிமித்தம் அவரை வணங்கினார். தன் குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

    சமூகத்தில் மிகப் பெரிய மனிதர். என்றாலும், ராமசுப்ரமண்யராஜாவிடம் அப்படி ஒரு எளிமை. ‘இந்த சாலையில் யாரோ நடந்து சென்று கொண்டிருக்கிறார்களே... வண்டியில் இரண்டு பேர் உட்காரும் அளவுக்கு இடம் இருக்கிறதே... ஒருவேளை நாம் செல்கிற வழிதான் என்றால், அவர்களையும் ஏற்றிக் கொள்ளலாமே’ என்கிற மனிதாபிமான எண்ணத்துடன் வண்டியை நிறுத்திப் பேசிக் கொண்டிருக்கிறார்.

    ‘‘நீங்கல்லாம் இப்ப எங்கே போய்க்கிட்டிருக்கீங்க?’’ என்று கேட்டார் ராமசுப்ரமண்யராஜா.

    ‘‘காஞ்சி மகா பெரியவாளைத் தரிசிக்கறதுக்காகப் போய்க்கிட்டிருக்கோம்’’ என்றார் தியாகராஜன்.

    ‘‘ஓ... நாங்களும் அங்கேதான் போய்க் கிட்டிருக்கோம். எங்க வண்டில இன்னும் ரெண்டு பேர் உட்காரலாம்’’ என்று அவர்களைக் கூர்ந்து கவனித்தார். ‘‘நீங்க ரெண்டு பேரும் இந்த இடத்துல வயசானவங்களா தெரியறீங்க... நீங்க ரெண்டு பேரும் வண்டில ஏறுங்க’’ என்று தியாகராஜனையும், அவரது மனைவி ராஜலட்சுமியையும் பார்த்துச் சொன்னார் ராமசுப்ரமண்யராஜா.

    அதோடு நிற்கவில்லை. உடன் வந்து கொண்டிருந்த இரண்டு வித்யார்த்திகளையும், அருண் குமாரையும் பார்த்து விட்டு, ‘‘நாங்க அங்கே போய் இறங்கினதும், ஒரு வண்டியை அனுப்பி விடறோம். நீங்க மூணு பேரும் கார்லயே வந்துடலாம்’’ என்றார்.

    தியாகராஜனும் ராஜலட்சுமியும் ஏறிக் கொள்ள... கார்கள் புறப்பட்டன.

    ஆன்மிகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் ராமசுப்ரமண்யராஜா. ஏராளமான ஆலயங்களுக்குத் திருப்பணி செய்த அவர், மகான்களையும் உபசரித்துப் போற்றுவதில் ஆர்வமும் பக்தியும் கொண்டவர். ஒரு மகானைத் தரிசிக்கப் போனால் ஏதேனும் வாங்கிச் செல்ல வேண்டும் என்கிற மரபு உண்டு. அதாவது, மகானுக்குக் காணிக்கை வழங்க வேண்டும். சாதாரண ஆசாமியே தன் சக்திக்குக் காணிக்கை வழங்கினால், ராமசுப்ரமண்யராஜா போன்ற தொழிலதிபர் என்ன காணிக்கை எடுத்துச் சென்றார் தெரியுமா?

    அந்தக் காணிக்கை என்ன என்பதையும் அதை ராமசுப்ரமண்யராஜா சேகரித்த விதத்தையும் கேட்டால், வாய் பிளப்பீர்கள்! ஆம்! பிரமிப்பாக இருக்கும்.  

    (தொடரும்)
    swami1964@gmail.com
    Next Story
    ×