என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  அறிவோம் சிறுநீரகம்
  X
  அறிவோம் சிறுநீரகம்

  அறிவோம் சிறுநீரகம்: கர்ப்ப காலமும்... சிறு நீரக சிக்கல்களும்- 10

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தலைவலி, வலிப்பு, நுரையீரல், கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகளை கூட பாதிக்க வைக்கும். இதை டாக்சிமீயா என்போம்.


  பெண்கள் கருத்தரித்தது முதல் குழந்தையை வயிற்றில் சுமக்கும் காலத்தை 3, 6, 9 என்று மூன்று நிலைகளாக பிரிக்கிறோம். இதில் 6-வது மாதத்தில் இருந்து 9-வது மாதம் வரை கால்களில் வீக்கம் ஏற்படலாம்.

  இது சாதாரண வீக்கமாக இருந்தால் பிரசவத்திற்கு பிறகு போய்விடும். அதேநேரம் சிறுநீரகத்தில் இருந்து புரதம் கழிதல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருக்கும் நிலையில் இந்த மாதிரி வீக்கம் ஏற்பட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

  தலைவலி, வலிப்பு, நுரையீரல், கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகளை கூட பாதிக்க வைக்கும். இதை டாக்சிமீயா என்போம்.

  இந்த மாதிரி பிரச்சினைகள் மிக குறைந்த வயதான பெண்கள் கருவுற்றால் அவர்களுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். அதேபோல் காலம் தாழ்த்தி திருமணங்கள் செய்து கொள்ளும் பெண்களுக்கும் வரும். முக்கியமாக தலைபிரசவத்தில் மட்டும்தான் இந்த பிரச்சினைகள் உருவாகும். தொடர்ந்து வரும் கர்ப்பங்களில் இந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு.

  கர்ப்ப காலத்தில் நுண் கிருமி தாக்குதல் வரலாம். சிறுநீரகங்கள் தற்காலிகமாக செயலிழக்கலாம் என்று பயமுறுத்துகிறார்களே என்றெல்லாம் நினைக்க தோன்றலாம். நாம் இப்போதுதான் மகப்பேறு என்று பிரசவத்தை ஒரு அழகிய சொல்லாக சொல்கிறோம்.

  ஆனால் அந்த காலத்தில் பிரசவம் என்பதை ‘பிர’ ‘சவம்’ என்றுதான் வைத்தார்கள். ஏனென்றால் பிரசவம் என்பது மறு பிறவி என்பதை போலத்தான். பிரசவத்திற்கு உள்ளே செல்லும் பெண்மணி வலியாலும், பயத்தாலும் அழுதபடியேதான் செல்வார். திரும்பி வரும் போது எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலைதான் ஒரு காலத்தில் இருந்தது.

  கர்ப்பம் தரித்தால் மட்டும் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் பிரசவத்திற்கு பிறகு சீராகிவிடும். கர்ப்ப காலத்தில் இந்த மாதிரி உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினைகள் உருவாவதற்கு ஐந்து காரணங்கள் உண்டு.

  • ஒன்று திருமணத்திற்கு முன்பே உயர் ரத்த அழுத்தம் இருந்திருக்கும். ஆனால் அதை கவனித்திருக்க மாட்டார்கள். கண்டுபிடித்தும் இருக்க மாட்டார்கள். திருமணத்திற்கு பிறகு கருவுற்றதும் பரிசோதனை செய்யும் போது உயர் ரத்த அழுத்தம் இருப்பதை கண்டுபிடித்து இருப்பார்கள்.

  • அந்த பெண்கள் சிறு குழந்தையாக இருந்த போதே சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் அதாவது அலர்சி போன்ற நோய்கள் இருந்திருக்கலாம். அது தெரியாமலும் இருந்திருக்கலாம். அல்லது அது குணமாகியும் போயிருக்கலாம். மீண்டும் அதன் விளைவாக இந்த பிரச்சினைகள் உருவாகவும் வாய்ப்பு உண்டு.

  • உயர் ரத்த அழுத்தம், புரதம் கழிதல் ஆகியவற்றுடன் இணைந்து சிறுநீரக பிரச்சினைகள் உருவாகலாம். கடைசி மூன்று மாதத்தில் வரும் ரத்த அழுத்தம் பிரசவத்திற்கு பிறகு சீராகி விடும்.

  எனவேதான் நவீன மருத்துவத்தில் ஒரு பெண் கர்ப்பம் தரித்ததை உறுதி செய்ததும் மாதந்தோறும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்கின்றனர். அப்போது ரத்த அழுத்தம் சிறுநீர் தொற்று, வயிற்றில் வளரும் கருவின் நிலை ஆகியவற்றை சோதித்து பார்த்து கொள்ள வேண்டும்.

  கால் வீக்கம் வந்ததும் கால் வீக்கம்தானே இது கர்ப்பிணியாக இருக்கும் போது வருவதுதான், ஒன்றும் செய்யாது என்று சாதாரணமாக நினைத்து விடவும் கூடாது. மருத்துவத்தில் இப்போது எவ்வளவோ வசதிகள் வந்து விட்டன. வீட்டிலேயே ரத்த அழுத்தம் பார்ப்பதற்கான இயந்திரத்தை வாங்கி வைத்து கொள்ளலாம்.

  அதேபோல் சிறுநீர் பரிசோதனைக்கான எளிய முறை வந்திருக்கிறது. அதாவது சிறுநீர் பரிசோதனை ஸ்டிப் மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி சிறுநீர் சோதனையை செய்து கொள்ளலாம்.

  பொதுவாக இந்த கால பெண்கள் கர்ப்பம் அடைந்ததும் உடலில் ஏற்படும் மாற்றங்களை பார்த்து கொஞ்சம் வயதானவர்கள் நாங்கள் எல்லாம் குழந்தை பெற்றெடுக்கவில்லையா? இந்த காலத்தில் இப்படித்தான் இருக்கும். எல்லாம் பார்த்து கொள்ளலாம் என்று சொல்வதுண்டு. அப்படி அஜாக்கிரதையாக இருப்பது ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.

  பிரசவத்தை ஆஸ்பத்திரிகளில் பார்ப்பதே தாய்க்கும், குழந்தைக்கும் பாதுகாப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிராமங்களில் இன்னமும் அனுபவம் வாய்ந்ததாதியர்கள் வீடுகளிலேயே பிரசவம் பார்க்கும் வழக்கம் இருக்கத்தான் செய்கிறது. அனுபவம் மிக்கவர்களாக இருந்தால் சிக்கல்கள் வராமல் இருக்கலாம்.

  அந்த காலத்தில் குழந்தை வயிற்றுக்கு உள்ளேயே இறந்து போதல், இதன் காரணமாக தாயும் மரணமடைதல், குழந்தை இறந்து பிறத்தல் போன்ற பிரச்சினைகள் இருந்தது. ஆனால் தற்காலத்தில் பேறு காலத்தில் தாய் மரணமடைதல், இளம் சிசு மரண விகிதம் மிகவும் குறைந்து இருக்கிறது. இதற்கு காரணம் பெரும்பாலான பிரசவங்கள் ஆஸ்பத்திரிகளில்தான் நடைபெறுகிறது. இந்த விழிப்புணர்வுதான் அந்த மரண விகிதங்களை குறைத்து உள்ளது.

  இன்றும் சில வட மாநிலங்களில் சிசு மரணமும், தாய் மரணமும் அதிகமாக இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த கட்டத்தையெல்லாம் நாம் தாண்டிவிட்டோம்.

  கர்ப்பிணிகளுக்கு சிறுநீர் தொற்று அதிகமாக ஏற்படும். அதற்கு முக்கிய காரணம் சிறுநீர் பாதையும், பிறப்பு உறுப்பும் அருகருகே இயற்கையாகவே அமைந்திருப்பதுதான். எனவேதான் எளிதில் தொற்று ஏற்படுகிறது. மேலும் கரு வளர வளர கர்ப்பப்பை விரிவடையும். அதன் காரணமாக சிறுநீர் செல்லும் பாதையை அது அழுத்தும். இதனால் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும்போல் தோன்றும்.

  சிலருக்கு அறிகுறி எதுவும் இல்லாமல் கூட தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. எனவே சரியான சோதனைகள் அவசியம். இல்லாவிட்டால் அந்த தொற்றுக்கள் மூலம் ஏற்படும் பாதிப்பு ரத்தத்தில் கலந்து செப்டிசீமியா வரும். இதன்மூலம் பல உறுப்புகள் சேதமடைந்து ஆபத்தில் கொண்டுபோய் விடும். குழந்தை கலைந்து போகும் சூழ்நிலை கூட ஏற்படும். முக்கியமாக ரகசியமாக செய்ய வேண்டும் என்பதற்காக சுகாதாரமற்ற சூழ்நிலையில் முறையற்ற முறையில், தகுதி பெறாத மருத்துவர்கள், செவிலியர்கள் மூலம் கருக்கலைப்பு செய்வதால் ரத்த போக்கு ஏற்பட்டு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும்.

  இப்போது கருக்கலைப்பு என்பது பெண்ணின் உரிமை ஆகி விட்டது. அப்படி இருந்தும் தவறு செய்து குழந்தை உருவாகி விட்டதே? வெளி உலகிற்கு தெரியாமல் கலைத்து விட வேண்டும் என்று இந்த மாதிரி தகுதியற்ற இடங்களில் சென்று கருக்கலைப்பு செய்கிறார்கள். இதனால் சிறுநீரக செயலிழப்பு மட்டுமல்ல. அதிக ரத்த போக்கு காரணமாக மிக மோசமான சூழ்நிலை ஏற்படும். எனவே இந்த மாதிரி சூழ்நிலைகளை சந்திக்க நேர்ந்தால் எந்த தயக்கமும் இல்லாமல் ஆஸ்பத்திரிகளில் சென்று கருக்கலைப்பு செய்வது நல்லது. அதுதான் அவர்களது உயிருக்கும் பாதுகாப்பு.

  சிலர் வீடுகளிலேயே பிரசவம் பார்ப்பார்கள். பிரசவிக்கும் நேரத்தில் பனிக்குடம் உடைந்து செப்டிக் ஆகி சிக்கல் ஏற்பட்டதும் அவசர அவசரமாக தாயையும், சேயையும் தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுவார்கள். அந்த நேர விரையம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

  25, 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்படிப்பட்ட சம்பவங்கள் பல நடந்தது உண்டு. மருத்துவ வசதிகள் வளர்ந்துவிட்ட காரணத்திலும், விழிப்புணர்வு அடைந்து விட்ட நிலையிலும் கூட இன்றும் யூடியூப்பை பார்த்து வீட்டில் வைத்தே பிரசவம் பார்க்கும் அளவிற்கு சிலர் செல்கிறார்கள். அவ்வாறு பிரசவம் பார்க்கும் போது நச்சு கொடியை முறையாக அகற்ற முடியாமல் போகலாம். பொதுவாகவே பிரசவ நேரத்தில் ரத்த கசிவு ஏற்படுவது உண்டு. ஆனால் பயிற்சி பெறாதவர்கள் பிரசவம் பார்க்கும் போது ரத்த கசிவை தடுக்கும் வசதி இருக்காது. அவர்களால் தடுக்கவும் முடியாது. இதனால் ஆபத்து அதிகம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

  கர்ப்பிணியாக இருக்கும் போது உயர் ரத்த அழுத்தம், புரதம் கழிதல், கால்கள் வீக்கம் ஆகியவை சேர்ந்து இருப்பதுதான் ஆபத்தானது. இதைதான் டாக்சிமீயா என்கிறோம். இதுவும் சிறுநீரகத்தில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவை பொறுத்தே உருவாகிறது. இது ரத்தத்தில் கலந்து பின்னர் இதயம், மூளை, கல்லீரல் போன்ற உறுப்புகளையும் பாதிப்படைய வைக்கும்.

  ரத்த அழுத்தத்தை பொறுத்தவரை 120/80 இருக்க வேண்டும். இதற்கு அதிகமாக இருந்தால் கவனிக்க வேண்டும். பொதுவாக கருத்தரித்த மூன்று மாதங்களுக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருக்கும். அதன் பிறகு ரத்த அழுத்தம் கூடும்.

  நிஜத்தில் உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்குகிற உறுப்பு சிறுநீரகம்தான், உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பு இதயம், மூளை மற்றும் ரத்த நாளங்களில் உணரப்படுகிறது.

  எனவேதான், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்குச் சிறுநீரக வியாதிகளும் சிறுநீரக வியாதி இருப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தமும் வருவதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகம் ரத்தக் குழாயில் கொழுப்பு அடைப்பதாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அந்த அடைப்பில் இருபது சதவிகிதத்தைக் கொழுப்பு ஏற்படுத்தினால், எண்பது சதவிகிதத்தைச் சிறுநீரகத்தில் அதிகளவில் சுரக்கிற ரெனின் ஆஞ்சியோடென்சின்தான் ஏற்படுகிறது. 

  நில்... கவனி... செல்... என்பது போக்கு வரத்துக்கான விதிமுறை மட்டுமல்ல. பொதுவாக நாம் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கும் அதுவே முக்கியமான விதிமுறை யாகும். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இதய கோளாறு இருப்பவர்கள், சிறுநீரக பாதிப்பு உடையவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதும், குழந்தை பெற்றுக் கொள்வதும் சவாலான விசயம். இப்படிப்பட்டவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்வார்கள்.

  ஆனால் இப்போது நவீன மருத்துவ வசதிகள் அவற்றையெல்லாம் முறியடித்து விட்டன. இதய கோளாறு, சிறுநீரக கோளாறு எதுவாக இருந்தாலும் சரி. ஏன் மாற்று சிறுநீரகம் வைத்தவர்களும் கூட குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையை அடைந்து விட்டோம். முக்கியமாக கருத்தரித்த பெண்கள் இருக்கும் வீடுகளில் சில அடிப்படை சோதனைகளை அவர்களே செய்து கொள்ள முடியும்.

  ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி வாங்கி வைத்து கொள்ள வேண்டும். அடிக்கடி ரத்த அழுத்தத்தை சோதித்து கொள்ளலாம். சிறுநீர் பரிசோதனை செய்வதற்கான ஸ்டிப் வந்துள்ளது. அவற்றை வீட்டில் வாங்கி வைத்து கொள்ளலாம். அதன் மூலம் அவ்வப்போது சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ள முடியும். அதேபோல் எடை பார்க்கும் எந்திரத்தையும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். வாரந்தோறும் எடையை பார்த்து கொள்ளலாம். எடை மிகவும் அதிகமானால் உடலில் தண்ணீர் சேருகிறது என்பது அர்த்தம். அளவுக்கு அதிகமாக தண்ணீர் சேர்ந்தால் அதுவும் ஆபத்தில் கொண்டு போய் விடும்.

  பிரசவத்திற்கு ஆஸ்பத்திரிக்கு சென்றால் மட்டும் போதாது. அதற்கு முன்பு அந்த ஆஸ்பத்திரிகளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். வீட்டுஅருகில் உள்ள ஆஸ்பத்திரியில் பார்த்து கொள்ளலாம். அப்போதுதான் வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு போக முடியும். துணிமணிகளை எடுத்து செல்ல முடியும் என்ற எண்ணம் சிலரிடம் இருக்கும். அது முக்கியமல்ல. சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிகளில் நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கு உள்ளதா? அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இருக்கிறார்களா? மயக்கவியல் மருத்துவர்கள் இருக்கிறார்களா? பிறக்கும் குழந்தைக்கு ஏதாவது சிக்கல் நேர்ந்தால் அதை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கு இங்குபேட்டர் வசதிகள் உள்ளனவா? ரத்தம் செலுத்தும் வசதிகள், ரத்த சேமிப்பு வசதிகள் இருக்கிறதா என்பதையெல்லாம் அறிந்து கொண்டுதான் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் சில சிக்கல்கள் உருவாக வாய்ப்பு உண்டு.

  பிரசவம் நடைபெற்றதும் குழந்தைக்கு சிக்கல் இருந்தால் குறிப்பிட்ட ஆஸ்பத்திரியில் வசதி இல்லாவிட்டால் நகரத்தில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு குழந்தையை கொண்டு போங்கள் என்று விரைவுபடுத்துவார்கள். இப்போது இருக்கும் போக்குவரத்து நெரிசலில் குழந்தையை ஆஸ்பத்திரிக்குள் கொண்டு செல்வதற்குள் சிக்கல்கள் பெரிதாகிவிடவும் வாய்ப்பு உள்ளது. எனவேதான் எல்லா வசதிகளும் நிறைந்த ஆஸ்பத்திரிகளாக பார்த்து பிரசவத்திற்கு அனுமதிக்க வேண்டும்.

  Next Story
  ×