search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஜோதிடச்சுடர் எம்.எஸ் இராமலிங்கம்
    X
    ஜோதிடச்சுடர் எம்.எஸ் இராமலிங்கம்

    வீடும் வாழ்வும்: வீட்டுக்கு அருகில் என்ன இருந்தால் நல்லது?- 31

    உங்கள் வீட்டிற்கு எதிரில் சாலையில், திடீரென உங்கள் வீட்டை விட உயரமான பாலங்கள் அமைவதுகூட, உங்களுக்குக் காலப்போக்கில் வாஸ்துபடி சில குறைகள் உண்டாகிறது.


    உங்கள் வீடு இருக்கும் இடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்குள் திசையில் உயரமான மலையோ அல்லது மண்மேடு போன்ற பகுதியோ, அமைவது நன்மையில்லை. இது போல ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களில் உங்கள் வீட்டின் கிழக்குப் பகுதி உயர்ந்து காணப்படுவதும் வாஸ்துபடி அனேகக் குறைகளையே தருகிறது.

    குறிப்பாக இந்த இடங்களில் வசிப்பவர்களுக்கு அதிகமான உடல் சார்ந்த தொல்லைகள் உண்டாகிறது. அதிலும், குறிப்பாக பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பெண் வாரிசுகள் பலம் இழந்து போகிறார்கள்.

    ஆனால் இதுவே உங்கள் மனையின் அல்லது வீட்டின் கிழக்கில் குளம், ஏரி,ஆறு, கடல் அமைவது மிக அதி உத்தமம்.

    உதாரணமாகப் பார்த்தோமானால் சென்னை நகருக்குக் கிழக்கில் கடல் அமைந்துள்ளது. இது சென்னை நகரின் அபார வளர்ச்சிக்கு ஏற்ற வாஸ்து அமைப்பு ஆகும். குறிப்பாக இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு முழுவதும் கிழக்கில் கடலும், மேற்கில் மேற்குக் தொடர்ச்சி மலையும் அமைந்திருப்பது வாஸ்துவின் அடிப்படையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு வளர்ந்த மாநிலமாக இருக்கக் காரணமாகிறது.

    ஆனாலும், தெற்கில் கடல் அமைவது நன்மையில்லை என்றாலும், அதிலும் அங்கு இயற்கையாக அமைந்துள்ள விவேகானந்தர் பாறையும், அரசால் உருவாக்கப்பட்டுள்ள வள்ளுவர் சிலையும் இயல்பாகவே சற்று நிவர்த்தி தருவதாக அமைகிறது.

    ஆகையால் நீங்கள் கட்டும் வீட்டிற்கு கிழக்கில் நீரோட்டம் இருப்பது மிக நன்மை. ஆறு, குளம், ஏரி இருப்பது இந்த இடத்தில் வாழும் மக்களின் தேக சுகம் ஆரோக்கியம் விருத்தி, பிள்ளைகளின் முன்னேற்றம் என பொருளாதாரத்திலும் சிறப்பான நல்ல நிலை உண்டாகுமாம்.

    உங்கள் வீட்டிற்கு எதிரில் சாலையில், திடீரென உங்கள் வீட்டை விட உயரமான பாலங்கள் அமைவதுகூட, உங்களுக்குக் காலப்போக்கில் வாஸ்துபடி சில குறைகள் உண்டாகிறது. இது போன்ற கட்டிடங்களைச் சென்னையிலேயே காணலாம். எனவே கிழக்கு உயரமாக இருப்பது தீமைசெய்கிறது.

    இதுபோல உங்கள் மனைக்கு அல்லது தங்களின் வீட்டுக்கு தெற்கில் உயரமான மலை, குன்றுகள் இருப்பது மிக விசேசமான நன்மைகள் செய்யும். அதிலும் குறிப்பாக தெற்கிலும், தென் மேற்கிலும் மலை அல்லது குன்றுகள் இருப்பது அதி உத்தமமாகிறது.

    இதுபோன்ற இடங்களில் வசிப்பவர்களின் வாழ்க்கை சீரான செழிப்போடு பொருளாதார முன்னேற்றம் அடைகிறது. மேலும் குடும்ப மகிழ்ச்சி, அந்தக் குடும்பத்தின் இளைய வாரிசுகளின் வளர்ச்சி என பல சிறப்புகள் உண்டாகிறது. மட்டுமின்றி அந்தக் குன்றுகளை நோக்கி தெற்கு நோக்கி வீடு அமைவது மிக நன்மை தரும்.

    ஆனால் மாறாக உங்கள் மனையின் அல்லது வீட்டின் தெற்கில் ஆறு அமைவதோ அல்லது அந்த ஏரியாவின் கழிவுநீர் ஓடை அமைவதோ பெரிய தீமைகளைத் தருகிறது. இந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு அடிக்கடி வியாதிகளும் வெட்டிச் செலவுகளும் வீண் விரயங்களும் ஏற்பட்டு மகிழ்ச்சியற்ற குடும்பமாக இருப்பதைக் காணலாம்.

    இதிலும் குறிப்பாக இந்த ஓடையில் ஓடும் தண்ணீரானது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ஓடும்படி இருப்பின் இது அனேகமாக பாதகங்களையே தருகிறது.

    இதுபோலவே வீட்டின் தெற்கில் நீர்த்தேக்கம் அல்லது குளம் இருப்பின் இதுவும் கெடுதல்களைத்தான் தரும். கொஞ்சம் கொஞ்சமாக செல்வம் இழந்து வறுமை வாட்டும் நிலை வந்து விடும். குடும்பத்தில் வளரும் பிள்ளைகள் தன்னிலை இழந்து மிக தவறான பாதைக்குச் சென்று விடுகிறார்கள்.

    இந்த மாதிரி வீடுகளில் உங்கள் வீட்டுக்கு வடக்கு எல்லையில் இடம் இருப்பின் இதில் கிணறு அல்லது நிலத்தடி நீர்த் தொட்டி அமைத்துக் கொண்டால் சற்று நிவர்த்தி உண்டு.

    வீட்டின் தெற்கில் மழைநீர் வடியும் ஓடை இருப்பதும் அந்த நீரானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்வதும் தீமைதான். ஒருவேளை இந்த ஓடையில் அல்லது ஆற்றில் நீரானது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லுமானால் பெரிய பாதகம் இல்லை. குளம்போல் தேங்கி நிற்பதைவிட ஆறுபோல் சென்று கொண்டிருந்தால் பாதகம் குறைவுதான்.

    தெற்கில் மலை இருப்பது நன்மை எனச் சொன்னோம். இதிலும் குறிப்பாக இந்த மலைமேல் கோயில் இருந்து மக்களால் அந்தக் கோயில் தினசரிக் கொண்டாடும் நிலையில் இருப்பின் மிக அதிக சந்தோசமான அமைப்பை இந்த இடங்களில் வாழ்பவர்கள் அனுபவிக்கலாம்.

    தனி வீடாக இருந்தாலும் தென் பகுதி உயரமாக இருக்க வேண்டும் என்ற விதியும் இதைச் சார்ந்து வருவதுதான். எனவே நீங்கள் மனைவாங்கும் போது மனையின் தெற்கில் என்ன உள்ளது எனக் கவனிக்க வேண்டும்.

    இதே போல உங்களின் மனைக்கு அல்லது வீட்டுக்கு மேற்குத் திசையில் இப்படியான மலை, குன்றுகள் அல்லது மண்மேடுகள் இருப்பது மிக விசேசமான நல்ல பலன்களைத் தருகிறது. இதுவும் குறிப்பாக தென்மேற்கில் உயர்வான மலை மற்றும் குன்றுகள் நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது. இப்படியான வீடுகளில் அல்லது விவசாய நிலங்களில் நல்ல செல்வச் செழிப்பு, இறை அருள் நினைத்தபடி நல் வாழ்க்கை என அனேக நன்மைகள் உண்டு.

    இக்குடும்பங்களில் பிள்ளைகள் மற்றும் வாரிசுகள் மிகச் சிறந்த நிலையில் நல்ல முன்னேற்றங்கள் காண்பார்கள். நோயற்ற வாழ்வு நிலையான செல்வம் உண்டாகும். குறிப்பாக செல்வநிலை மட்டுமின்றி அனைவரும் நல்ல அதிகார பலம் பெற்று வாழும் நிலையுண்டாகும். இதுபோன்ற இடங்களில் அமையும் கல்விச் சாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் வந்து செல்வோர்க்கு மிக அற்புதமான நல்ல உணர்வுகளையும் சந்தோ‌ஷத்தையும் உண்டாக்கி வெற்றி தரும்.

    இதுபோல உங்கள் வீட்டுக்கு சரியாக மேற்குப் பகுதியில் இதுபோன்ற மலை குன்றுகள் இருப்பின் இந்த அமைப்பு அந்த வீட்டில் வாழும் ஆண்களுக்கு நல்ல முன்னேற்றம் தருகிறது. பணப்புழக்கம், ஆடம்பரம், கார்வாகன வசதிகள் உண்டாகி மன மகிழ்வு உண்டாகிறது.

    ஆனால் இந்த நிலை, சமயங்களில் பெண்களுக்கு உடல் சார்ந்த தொல்லைகள் உண்டாகக் காரணமாகிறது. இந்த மாதிரியான வீடுகளில் பெண்கள் சந்தோ‌ஷமின்றி வறண்டுபோகும் நிலையுண்டாகிறது.

    இதுபோல வடமேற்குத் திசையில் மலை குன்றுகள் போன்ற அமைப்பு இருப்பது வாஸ்துபடி சில குறைகளையே காட்டுகிறது. குறிப்பாக குடும்ப ஒற்றுமை குறைந்து போவதும் சில குடும்பங்களில் கணவன்-மனைவி பிரிந்து வாழும் நிலையும் உண்டாகிறது. எனவே தென்மேற்கில் மலை மற்றும் உயரமான அமைப்புகள் இருப்பது மிக உத்தமமாகிறது. இதுபோலவே உங்கள் வீட்டின் அல்லது மனையின் மேற்கில் குளம், ஏரி போன்ற அமைப்புகள் இருப்பது தீமையாகவே அமைகிறது.

    குறிப்பாகத் தென்மேற்கில் குளம் இருப்பின் அந்த வீட்டில் வாழ்பவர்கள் செல்வ இழப்பு, உடல் நிலை மற்றும் மனநிலைக் கோளாறு, தரித்திரம் என வேண்டத்தகாத கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.

    தண்ணீர் செல்லும் ஆறு, ஓடையாக இருந்தாலும் மேற்குப்பக்கத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி தண்ணீர் பயணம் செய்யும் எனில் பெரிய வாஸ்து தோ‌ஷம் உண்டாவதில்லை. இதுவே மாறாக தண்ணீரானது வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் எனில் இந்த அமைப்பு வாஸ்து தோ‌ஷத்தை உண்டாக்குகிறது.

    ஒருவேளை உங்கள் இடத்திற்கு நேர் சரியாக மேற்குத் திசையில் குளம், ஏரி இருப்பின் இதுவும் தீமைதான்.

    வடமேற்கில் இருப்பதும் தீமைதான் என்றாலும் வடமேற்கு ஓரளவுக்கு ஏற்புடையதே, வடமேற்கில் உள்ள குளத்தின் நீரானது உங்களது வீட்டின் வடக்குப் பாகம் வழியாகக் கிழக்கு நோக்கிச் செல்லுமாயின் குறையேதும் வராது.

    மேற்கண்ட விதிகள் வீட்டுக்கு மட்டுமல்லாமல் நீங்கள் நடத்தும் தொழிற்சாலை ஆனாலும் விவசாயம் செய்யும் பண்னை நிலம் ஆனாலும் மேற்படி விதிகள் பொருந்தும்.

    நிலத்தின் மேற்குப் பாகத்தில் கிணறு வெட்டி விவசாயம் செய்வதும், தெற்குபாகத்தில் கிணறு வெட்டி விவசாயம் செய்வதும் என்னதான் பாடுபட்டாலும் முடிவு அனைத்தும் வீணாகிப் போவதுதான் என்ற நிலை உண்டாகிவிடும்.

    வீட்டுக்கு அருகில் என்ன இருந்தால் நல்லது



    எனவே மேற்குபாகத்தில் நீர்த் தேக்கம், குளம், ஏரி அமைதல் என்பது மிக மோசமான குறைகளை உண்டாக்கி வாழ்க்கை வீணாகிவிடும்.

    இதேபோல உங்கள் மனைக்கு அல்லது வீட்டுக்கு வடக்குத்திசையில் மலை, குன்றுகள், மண்மேடுகள் அமையக் கூடாது.

    இதிலும் குறிப்பாக வடகிழக்குப் பாகத்தில் மலை இருக்கும் எனில் அந்தக் குடும்பத்தில் இறையருள் இழந்து செல்வ நிலை இழந்து குறிப்பாக அந்த குடும்ப வாரிசுகள் கதியற்று கலங்கிப் போகும். சில குடும்பங்களில் பிள்ளைச் செல்வம் அற்றுப் போவதும் பிள்ளைகள் சரியான வளர்ச்சியின்றி செய்வதறியாது திகைப்பதும் உண்டாகும். இருப்பதிலேயே வடகிழக்குப் பாகத்தில் மலை மண்மேடு அமைவது தான் வாஸ்துபடி மிகக் கொடுமையான குறைகள் எனலாம்.

    இதுபோல வடக்குப் பகுதியில் இது போன்ற அமைப்பும் குறைகளையேத் தருகிறது. பெண்களுக்கு வியாதி, பண நெருக்கடி, குடும்பப் பிரிவு அடிக்கடி தோல்விகளைச் சந்திப்பது, விரக்தி மனப்பான்மைகள் உருவாகும்.

    இது போல நீங்கள் குடியிருக்கும் பகுதிகளில் வடக்குப் பக்கம் குளம், ஏரி போன்ற நீர் நிலைகள் இருப்பின் வாஸ்துபடி அனேக நன்மைகள் உண்டாகும்.

    இந்த நிலையானது வெற்றிகரமான வாழ்வு அமையும். வெளிநாட்டுப் பயணங்கள் உண்டாகும். ஆன்மீக அறிவு கிடைக்கும். அந்த மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். குறிப்பாக பெண்கள் நல்லறிவு பெற்று வீரியத்துடன் வாழ்வார்கள். குடும்பங்கள் வாழையடி வாழையாக சிறந்த வாழ்வு பெறுவார்கள்.

    இதுபோன்ற இடங்களில் கல்விச் சாலைகள் அமைவது மிகச் சிறப்பு தரும். புகழ்பெற்ற மனிதர்கள் வாழும் நிலை உண்டாகும். ஆன்மீகவாதிகள் பொதுமக்களோடு தொடர்பு கொண்டவர்கள் என அனேக நன்மைகள் உண்டாகும்.

    இப்படி வடக்குப் பக்கத்தில் குளம், ஏரி அமைந்து அந்த நீரானது மேற்கில் இருந்து கிழக்குநோக்கிப் பயணிக்கும் எனில் மிக அதிக நன்மைகள் தருகிறது. மாறாக அந்த நீரானது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்லுமாயின் இந்த நிலை நன்மை தருவதில்லை.

    வடபாகம் எப்போதும் தாழ்ந்த நிலையில் தான் இருக்க வேண்டும். ஆகையால் வடக்குப் பக்கம் குளம், ஏரி ஏற்புடையது. ஆனால் வடமேற்கில் இப்படியாக குளம் ஏரி அமைவது நல்லதல்ல. இது அங்கு வாழும் ஆண்களுக்கு உடல், மனம் சார்ந்த சிக்கல்களை உண்டாக்குகிறது. இது போல வடமேற்கில் இருக்கும் நீரானது கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி செல்லும் நிலை நல்லது. மாறாக நீரானது தெற்கு நோக்கிச் செல்லும் நிலை வாஸ்துபடி தோ‌ஷமாகிறது.

    இது போல உங்கள் வீட்டின் நேர் வடக்குத் திசையில் உங்கள் வீட்டை விட உயரமான கோயில் கோபுரங்கள் இருப்பதும் வாஸ்து தோ‌ஷம்தான்.

    உங்கள் வீட்டின் வடக்குப் பக்கம் உயர்ந்த பாலங்கள் இருப்பதும் கூட குறைபாடுகளையே தருகிறது. இந்த அமைப்பு பெண்களுக்கு மாறி மாறி வியாதிகள் உண்டாகி குடும்பம் அவஸ்தைப்படுகிறது.

    இவ்வாறு அமையப்பட்ட அரசு கட்டிடங்கள் கூட காலப்போக்கில் இருள் அடைந்து போவதைக் காணமுடிகிறது. நீங்கள் கட்டும் வீட்டில் கூட வடக்குப் பகுதி உயர்ந்து இருத்தல் ஆகாது.

    வடக்குப் பகுதியில் வடகிழக்குப் பகுதியில் தண்ணீர் புழக்கம் இருக்கும்படியான அமைப்புகள் இருந்துவிட்டால் அந்த இடமானது சுபிட்சம் பெற்று அந்த இடங்களில் வாழும் மக்களும் ஏற்றம் பெறுகிறார்கள் என்பது தான் உண்மை.

    தொடர்புக்கு: msramalingamastrologer@gmail.com

    Next Story
    ×