search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    குஷ்பு
    X
    குஷ்பு

    குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும்- குடும்பநாயகியாக குதூகலம்- 32

    நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.


    பாடிப்பறந்த கிளி...  ஜோடிக் கிளியாக மாறியது. ஆம், வாழ்க்கையில் அடுத்தகட்ட பயணத்தை கணவர் சுந்தருடன் தொடங்கி வாழ்க்கை பாடத்தை படிக்க தொடங்கினேன்.

    குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டதும் சுதந்திரம், சந்தோசம் எல்லாமே பறிபோய் விடும் என்றெல்லாம் பலர் பேசுவதை கேட்டிருக்கிறேன்.

    அது உண்மை இல்லை. வாழ்க்கையை ரசிக்க தெரிந்தால் அது ருசிக்கும். இல்லாவிட்டால் கசப்பான அனுபவத்தை தவிர்க்க முடியாது என்பது எனது வாழ்க்கை அனுபவம்.

    குடும்ப வாழ்க்கையும், கூட்டு வாழ்க்கையும் பலமடங்கு சந்தோசத்தைத் தான் எனக்கு தந்தது. இன்றும் தந்து கொண்டிருக்கிறது.

    எனது மாமியாரும், அம்மாவும் ஒரே வீட்டில் என்னோடுதான் இருக்கிறார்கள். மாமியார் மெச்சும் மருமகள் என்பதில் எனக்கு என்றுமே பெருமை.

    குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கும்.

    திருமணத்துக்கு முன்பு வரை இஷ்டம் போல் தூங்குவோம். அம்மா தான் படுக்கையில் இருந்து எழுப்பி காபி தருவார். திருமணத்துக்கு பிறகு நாம் அம்மாவாகி விடுகிறோம்.

    காலையில் எழுந்து காபி போட்டு மனதை கவர்ந்து நம்மோடு கலந்துவிட்ட கணவருக்கும் கொடுத்து அவர் அருகில் அமர்ந்து நாமும் காபி குடிப்பதே ஒரு ‘கிக்’ தான். அந்த காபியே தனி சுவையாக தெரியும்.

    எங்கள் வீட்டில் காலையில் காபிபோட்டு கொடுப்பது, சிற்றுண்டி பரிமாறுவது எல்லாமே நான்தான். அவர் குளிக்க செல்லும் போது டவல் எடுத்து கொடுப்பது எனக்கு பிடிக்கும். அதன்பிறகு அவர் அன்று என்ன டிரஸ் போட வேண்டும் என்பதை நான்தான் தேர்வு செய்து எடுத்து வைப்பேன்.

    நாம் விரும்பிய டிரஸ்சை கணவர் அணிந்து வெளியே கிளம்புவதை பார்க்கும் போது மனதில் அப்படி ஒரு சந்தோசம் வரும் பாருங்க... சான்சே இல்லை.

    குடும்பம் ஆனதும் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடவேண்டும். அதுதான் குடும்ப உறவை பலப்படுத்தும். என் வாழ்க்கையில் பார்த்தீர்கள் என்றால் திருமணத்துக்கு முன்பு இரவு பகல் பாராமல் ஓடி, ஓடி, உழைத்தேன். வருடத்துக்கு பத்து பன்னிரெண்டு படங்கள் வரை பண்ணி இருக்கிறேன்.

    திருமணம் முடிந்ததும் எனது வாழ்க்கை பாதையை நானே தீர்மானித்தேன். முதலில் அதிக படங்களில் நடிப்பதை தவிர்த்தேன். திருமணமான 20 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு ஒரு படம் தான் பண்ணினேன். அதை பற்றி நான் கவலைப்படவில்லை.

    முதல் குழந்தை பிரசவம் முடிந்த பிறகு ஒன்றிரண்டு மாதங்களில் ஆனந்தம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. ஆனால் அதை நான் ஏற்கவில்லை. ஓய்வு நேரங்களில் வந்து நடித்து கொடுத்தால் கூட போதும் என்றார்கள். ஆனால் நான் குழந்தைக்கு அம்மாவாக இருக்க விரும்புகிறேன், 6 மாதம் கழித்து பார்ப்போம் என்றேன்.

    லிங்குசாமி என்னை மனதில் வைத்தே அந்த கதையை எழுதியதாகவும், நான் நடித்தால் தான் சிறப்பாக இருக்கும் என்றும் விரும்பினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

    குடும்பமா? படமா? என்றால் குடும்பமே முக்கியம் என்று கருதியதால் நல்ல வாய்ப்பாக இருந்தும் தவிர்த்துவிட்டேன். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் குடும்பத்தில் சந்தோசத்துக்கும் குறைவிருக்காது. எவ்வளவு பிசியாக இருந்தாலும் வாரத்தில் ஞாயிற்றுக் கிழமைகளை வீட்டில் குடும்பத்தினருடன் தான் கழிப்பேன்.

    விதவிதமாக சமைப்பது, குழந்தைகள், கணவர், அம்மா, மாமியார் என்று எல்லோரும் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடிப்பது, விளையாட்டுவது என்று பொழுது போக்குவதிலேயே டென்சன் எல்லாம் போய்விடும்.

    குடும்பம் என்றால் பிரச்சினைகளும் வரத்தான் செய்யும். அதையும் நாம் நினைத்தால் சமாளிக்க முடியும். ஊடல் ஏற்படாத கணவன்-மனைவி உண்டா? அப்படி இருந்தால் வாழ்க்கை சுவைக்காது.

    எனக்கும் அவருக்கும் இடையே பல தடவை சண்டை வந்திருக்கிறது. சண்டை வந்தால் நான் பேசமாட்டேன். நான் பேசாமல் இருந்தால் அவர் சொல்வார் ‘பேச மாட்டியா, பரவாயில்லை பேசாமல் இரு’ என்று அவர் வேலையை கவனிக்க சென்றுவிடுவார்.

    சண்டை என்பதால் அன்றைய தினம் அவர் டிபன் சாப்பிடாமல் சென்றாலோ... நான் எடுத்து வைக்கும் டிரஸ்சை அணியாமல் சென்றாலோ எனக்கு கடும் கோபம் வரும். அதற்கும் சண்டை போடுவேன்.

    அப்ப, என்ன நடக்கும் யோசித்து பாருங்கள்? சண்டையும், கோபமும் சில மணி நேரங்களில் தீர்ந்துபோகும். நாங்கள் போடும் சண்டையையும், சமாதானத்தையும் பார்த்து குழந்தைகளே கிண்டல் செய்வார்கள்.

    எனது மாமியாருக்கு வெற்றிலை போடும் பழக்கம் உண்டு. அவருக்காகவே வீட்டின் மாடி தோட்டத்தில் வெற்றிலைக்கொடி வளர்க்கிறேன்.

    தனி மனுஷியான குஷ்பு அடுத்தகட்டமாக குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்தது போல், வெள்ளித்திரையில் வலம் வந்து கொண்டிருந்த நான் சின்னத்திரைக்குள் நுழையும் காலமும் வந்தது. அதிலும் எதிர்பாராத திருப்பு முனைகளுடன் வாழ்க்கை நகர்ந்தது.

    அந்த திருப்புமுனை தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    ttk200@gmail.com
    Next Story
    ×