search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கருணை தெய்வம் காஞ்சி மகான்
    X
    கருணை தெய்வம் காஞ்சி மகான்

    கருணை தெய்வம் காஞ்சி மகான்: ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்- 27

    கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.


    டாக்டர் சவுந்தர்ராஜனின் குடும்பமே பரம்பரை பரம்பரையாக மகா பெரியவாளின் அத்யந்த பக்தர்கள்.

    மிக உயர்ந்த படிப்பு படித்து முடித்தார் சவுந்தர்ராஜன். பலரும் பாராட்டும் வண்ணம் உயர் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பலரும் அவரது கல்வித் திறனைப் போற்றினார்கள்.

    தான் படித்த படிப்புக்கு ஏற்ற உத்தியோகம் வெளிநாட்டில்தான் கிடைக்கும் என்று நினைத்தார். அதற்கேற்றபடி இவருக்கு எண்ணற்ற அழைப்புகள் அயல் தேசங்களில் இருந்து வந்தன.

    அமெரிக்காவில் பேராசிரியராகப் பணிபுரிய அழைப்பு வந்தது. தவிர, ஜெர்மன் நாட்டில் பகுதி நேரப் பேராசிரியராகப் பணி புரிய விசே‌ஷ அழைப்பு... இப்படி இவரது கல்வித் திறனைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாகப் பல கடிதங்கள்.

    ‘எந்த அழைப்பை ஏற்றுக் கொள்வது... எது நமது படிப்புக்கு உகந்த உத்தியோகம்?’ என்பதைத் துறை ரீதியாக அவர் முடிவு செய்யலாம். ஆனால், பாரத தேசத்தை விட்டு வெளிநாட்டுக்குச் செல்லலாமா, கூடாதா என்று அவருக்குள் ஒரு குழப்பம்.

    பொருள் தேட... கற்ற கல்விக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்றால், வெளிநாடு செல்ல வேண்டும். ஆனால், கடல் கடந்து செல்வதை நமது சாஸ்திரம் அனுமதிக்காது என்பதையும் சவுந்தர்ராஜன் நன்றாகவே அறிவார்.

    முடிவெடுக்க முடியாத சந்தர்ப்பங்களில் பெரியவாளின் தீர்ப்புக்கு விட்டு விடுவது பல குடும்பங்களின் வழக்கம். அந்த வேளையில் மகான் என்ன தீர்ப்பு சொல்கிறாரோ, அதற்கு அப்படியே கட்டுப்படுவார்கள். அதன்படி, காஞ்சி மகானைத் தரிசித்து, அவரிடம் இருந்து இதற்கான பதிலைப் பெறலாம் என்று தீர்மானித்தார். காஞ்சிக்கு வந்தார்.

    தனக்கு வந்த அழைப்புக் கடிதங்களை மகா பெரியவாளுக்கு முன்னால் வைத்தார் சவுந்தர்ராஜன்.

    காருண்யமூர்த்தியை வணங்கி விட்டு, கைகளைக் கூப்பியபடி சற்றுத் தள்ளி நின்றார்.

    பி. சுவாமிநாதன்

    சவுந்தர்ராஜனை ஒரு சில விநாடிகளுக்கு உற்றுப் பார்த்து விட்டு, அந்தக் கடிதங்களை ‘இவை எல்லாம் வேண்டவே வேண்டாம்’ என்பது போல் ஒரு ஓரமாக நகர்த்தி வைத்தார் பெரியவா.

    அப்படியானால், ‘உனக்கு வெளிநாட்டுப் பயணம் தேவை இல்லை’ என்று பொருள். பெரியவாளின் திருமுகத்தையே கைகளைக் கூப்பிய வண்ணம் பயபக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் சவுந்தர்ராஜன்.

    ‘வெளிநாடுகளில் உனக்கு என்னென்ன மரியாதை, பொருள் கிடைக்குமோ எல்லாமும் உனக்கு இங்கேயே கிடைக்கும். நீ இந்த தேசத்தை விட்டு எங்கும் போக வேண்டாம்’ என்று அவருக்குச் சொன்னார் பெரியவா.

    ஆக, வெளிநாடு சென்று பணி புரிவதற்கு சவுந்தர்ராஜனுக்குப் பெரியவா அனுமதி தரவில்லை.

    மகானின் உத்தரவை தனக்கான ஆசிர்வாதமாக அப்படியே ஏற்றுக் கொண்டார் சவுந்தர்ராஜன்.

    இவர் கற்றிருக்கிற சமஸ்கிருதம் மற்றுமுள்ள கல்வித் திறன்கள், நம் தேசத்தில் புகழப்படுகிற அளவுக்குப் பரவ வேண்டும் என்று பெரியவா நினைத்தார்.

    பெரியவாளின் ஆசிப்படி, அதற்கேற்ற ஓர் உச்சத்தையும் தன் வாழ்க்கையில் தொட்டார் சவுந்தர்ராஜன்.

    சாஸ்திரம் விதித்திருக்கின்ற கட்டுப்பாடுகளைத் தன் கடைசி தினம் வரை மீறவில்லை.

    இறுதி மூச்சு உள்ள வரை இவர் பஞ்சக்கச்சம் அணிந்தவாறே காணப்பட்டார். இவரது மனைவியும் மடிசார் அணிந்தே காணப்படுவார். இருவரும் இப்போது உயிருடன் இல்லை. இவர்களுக்கு வாரிசுகளும் இல்லை என்பது சோகம்.

    பணி புரிந்த காலத்தில் வேதியியல் துறையில் வல்லுநராக விளங்கினாலும், சமஸ்கிருதத்தின் மீது அபார பற்று கொண்டவர். வேதங்களின் மீது பக்தி கொண்டவர். எனவே, அவற்றை எல்லாம் ஆராய்வதிலும் தன் காலத்தை செலவிட்டார்.

    தன்னுடைய வருமானத்தின் பெரும் பகுதியைத் தான் முன்னின்று நடத்தி வரும் பல தர்ம ஸ்தாபனங்களுக்கு செலவிட்டார்.

    மகா பெரியவா கட்டளைப்படி தன் கடைசி காலத்தை காஞ்சியிலேயே கழித்தார். பெரியவாளின் அபிமானத்தை அபரிமிதமாகப் பெற்றவராக இருந்தார்.

    மகான் இட்ட சில எழுத்துப் பணிகளை இன்முகத்துடன் பூர்த்தி செய்தார். பெரியவா இவருக்குக் கொடுத்த எழுத்துப் பணிகள் எல்லாமே கடினமானவை. ஆனால், காலாகாலத்துக்கும் சவுந்தர்ராஜனின் பெயரை நிலைக்க வைத்திருக்கக் கூடியவை.

    ‘மூக பஞ்சசதி’க்கு ஒரு பாஷ்யம் (விளக்கவுரை) தமிழில் எழுதினார். சாதாரணமானவர்களுக்கும் இது போய்ச் சேர வேண்டும் என்கிற பெரியவாளின் விருப்பத்துக்கிணங்க பல காலம் உழைத்து இந்த நூலை 2014 டிசம்பர் மாதம் 7-ந் தேதி சென்னையில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மகாரண்யம் ஸ்ரீமுரளிதர சுவாமிகளும், முல்லைவாசல் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரியும் கலந்து கொண்டனர் (புத்தக வெளியீட்டுக்குப் பிறகு பெரியவாளின் திருவடிகளை அடைந்தார் டாக்டர் சவுந்தர்ராஜன்).

    இந்த மூக பஞ்சசதிக்கு உண்டான தமிழ் விளக்க உரையை எழுதி முடிப்பதற்குள் டாக்டர் சவுந்தர்ராஜன் பட்டபாடு சொல்லி மாளாது. இது தொடர்பான தகவல்களை சேகரிக்க பல இடங்களுக்கும் இவரை அனுப்பினார் மகா பெரியவா.

    மைசூர் பல்கலைக்கழகம், பெங்களூர் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் உள்ளிட்ட பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து தகவல்கள் சேகரித்து இந்த பாஷ்ய நூலைப் பூர்த்தி செய்தார்.

    தான் கஷ்டப்பட்டு, தூசி தட்டிச் சேகரித்துக் கொண்டு வந்த ஒவ்வொரு சுவடியையும், தகவல்களையும் மகா பெரியவாளிடம் கொண்டு வந்து காண்பிப்பார். பகல் வேளை சூரிய பகவானின் உதவியுடன் அதைப் படித்துப்பார்ப்பார். இருள் வேளை என்றால், ஒரு டார்ச் லைட்டை அடித்து அதை முழுவதுமாகப் படித்துப் பார்ப்பார் பெரியவா. இப்படி இந்த மூக பஞ்சசதி நூலின் முழுமைக்குப் பெரியவாளும் அந்த நாளில் பாடுபட்டிருக்கிறார். என்னே ஒரு அர்ப்பணிப்பு அந்த மகானிடம்!

    காஞ்சியில் இருக்கும்போது ஒரு முறை மகா பெரியவா காமாட்சி அன்னையைத் தரிசித்து கோயிலை விட்டு வெளியே வந்தார்.

    ஆலயத்தைச் சுற்றி இருக்கும் வீதிகளை ஒரு வலம் வர வேண்டும் என்பதற்காக கால்களில் பாதுகைகளோடு நடக்க ஆரம்பித்தார் பெரியவா.

    பெரியவா அன்றைய தினம் அணிந்திருந்த பாதுகைகளில் ஒரு குமிழ் காணப்பட்டது. அதாவது, பாதுகைகளை அணிந்து கொண்டால், கால்கட்டை விரலுக்கும் அதன் அடுத்த விரலுக்கும் இடையே இந்தக் குமிழ் பாகமானது இயல்பாக வரும். அப்படி இந்தப் பாதுகைகளை அணிந்து வலம் வருகிறபோது திடீரென பெரியவாளின் ஒரு கால் விரலில் லேசாக ரத்தம் கசிந்தது.

    காரணம் அந்தக் குமிழில் இருந்த உலோகத் தகட்டில் ஏதோ விரிசல் வந்து விட்டது போலிருக்கிறது. அந்தத் தகடு தன் வேலையைக் காண்பித்து விட்டது. காலில் அது கிழித்து ரத்தம் வந்தது.

    ஆனாலும், பெரியவா இதைப் பொருட்படுத்தாமல் தன் வலம் வருவதை நிறைவு செய்தார். அன்றைய தினம் பெரியவாளுடன் இருந்தார் சவுந்தர்ராஜன்.

    பெரியவா காலில் ரத்தம் வருகிறதைப் பார்த்தவுடன் ஒரு சங்கல்பம் எடுத்துக் கொண்டார். என்ன தெரியுமா? வசதியான ஒரு ஜோடி மரப் பாதுகைகளைத் தயார் செய்து பெரியவாளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று.

    தான் உத்தியோகம் செய்யும் பெங்களூருக்கு அன்றைய தினமே புறப்பட்டுச் சென்றார். அங்கே இருக்கிற ஒர்க் ஷாப்பில் மர வேலைகள் நடக்கும் ஒரு பிரிவும் உண்டு. அந்த இடத்துக்குச் சென்றார். அங்கே ஒரு பணியாளர். பெயர் வேலன்.

    இந்த வேலனிடம் பிரத்தியேகமாக ஒரு பாதுகை தயார் செய்யச் சொன்னார் சவுந்தர்ராஜன். தான் செய்யப் போகிற இந்தப் பாதுகைகள் மகா பெரியவாளின் திருப்பாதங்களை அலங்கரிக்கப் போகிறது என்பது தெரிந்த வேலனுக்கு சந்தோ‌ஷமான சந்தோ‌ஷம்.

    தினமும் காலையில் குளித்து முடித்து விட்டு, மிகுந்த ஆச்சாரத்துடன் பாதுகைப்பணிகளை மேற் கொள்வார் வேலன்.

    பாதுகைகள் தயாராகும் போது தினமும் ஒரு முறை அங்கே போய், அந்தப் பணிகளைப் பார்த்து விட்டு வருவதைத் தன் வழக்கமாகக் கொண்டிருந்தார் சவுந்தர ராஜன்.

    ஒரு சில தினங்களில் பாதுகைகள் தயாராகி விட்டன. அவற்றை சவுந்தர்ராஜனிடம் பயபக்தியோடு கொடுத்தார் வேலன்.

    தயார் செய்து முடித்த இந்தப் பாதுகைகளை பெரியவா திருநாமத்தை மனதுக்குள் ஜபித்துக் கொண்டே ஒரு பட்டுத் துணியில் வைத்து மூடினார். பின், இதை எடுத்துக் கொண்டு பெங்களூரில் இருந்து காஞ்சிபுரம் புறப்பட்டார் சவுந்தரராஜன்.

    எத்தனை சிரத்தையுடன் ஒரு ஜோடி பாதுகைகளைத் தயார் செய்து, அதைப் பெரியவாளுக்கு அர்ப்பணிக்க எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார், பார்த்தீர்களா?

    (தொடரும்)

    swami1964@gmail.com

    Next Story
    ×