search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கழிவறை,குளியலறை வாஸ்து
    X
    கழிவறை,குளியலறை வாஸ்து

    வீடும் வாழ்வும்: கழிவறை,குளியலறை வாஸ்து- 25

    தென் மேற்கு மூலையும் வடகிழக்கு மூலையும் எவ்வளவுக்குச் சரியாக வாஸ்துபடி அமைகிறதோ அந்த அளவுக்கு அந்தக் குடும்பத்தினர் சீறும் சிறப்புமாக வாழ்வார்கள்.


    மனிதன் வாழ்வானது நாகரீகத்தின் அடிப்படையில் மாற்றங்களைக் காணும் போது அந்த மாற்றங்கள் சுகாதார அடிப்படையிலும் அமைய வேண்டும்.

    பொதுவாக கிழக்கு நோக்கிய வீடாக, அது தனி வீடானாலும் சரி, அடுக்குமாடி குடியிருப்பு ஆனாலும் சரி, இந்த வீட்டில் கழிவறையானது வீட்டின் கிழக்கு மற்றும் வடக்கு சுவரை ஒட்டி வருவது நன்மை தராது. மாறாக மேற்குமற்றும் தெற்கு சுவர் சார்ந்துதான் கழிப்பறையை அமைக்க வேண்டும்.

    ஆனால் தெற்கும், மேற்கும் சந்திக்கும் தென்மேற்கு மூலையில் வீட்டின் உள்ளேயானாலும், வீட்டிற்கு வெளியேயானாலும், இந்தக் கழிவறையை அமைக்கக் கூடாது. குறிப்பாக வீட்டின் மேற்குப் பகுதியாக இருக்கும் இடத்தில் கழிவறையை அமைக்கலாம்.

    அதாவது தென்மேற்கில் படுக்கை அறை அமைத்து, அந்தப் படுக்கை அறையின் வடபாகத்தில், கிழக்கு மேற்காக கழிவறை அமைத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட இந்த கழிவறையின் உள்ளே, வடமேற்கு மூலையில் தெற்கு நோக்கி அமரும்படி கழிவு அறைக்காக உபகரணத்தை அமைக்கலாம்.

    மேலும் இந்தக் கழிவு அறையின் வடக்குச் சுவரின் மையப் பகுதியில், நீங்கள் வடக்கு நோக்கி நின்று குளிக்கும்படியாக சவர் பைப் வைத்துக் கொள்ளலாம்.

    இந்த கழிவறையின் வடகிழக்கில் கிழக்குச்சுவரையும், வடக்குச்சுவரையும் இணைத்து வாஷ்பேசின் வைத்துக்கொள்ள வேண்டும்.

    குறிப்பிட்ட இந்தக் கழிவறையானது அந்தப் படுக்கை அறையின், தரைத்தளத்தை விட சற்று உயரம் குறைவான அமைப்பில் தரைத்தளத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்தக் கழிவறைக்குச் செல்ல வாசலை தெற்குச் சுவரில் கிழக்கு ஓரமாக அமைக்க வேண்டும்.

    இந்தக் கழிவறைக்கான ஜன்னலை மேற்குச் சுவரில் அமைக்கலாம், கழிவறையின் தண்ணீர் வெளியேறும் பைப்களை மேற்குச் சுவரில்தான் பொருத்த வேண்டும்.

    ஜோதிடச்சுடர் எம்.எஸ் இராமலிங்கம்

    மேலே சொன்ன இப்படியான அமைப்பில் உங்கள் வீட்டில் கழிவறை இருந்தால் நிச்சயம் அந்த வீட்டில் வசிக்கும் உங்களுக்கு நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் உண்டாகும்.

    தென் மேற்கு மூலையும் வடகிழக்கு மூலையும் எவ்வளவுக்குச் சரியாக வாஸ்துபடி அமைகிறதோ அந்த அளவுக்கு அந்தக் குடும்பத்தினர் சீறும் சிறப்புமாக வாழ்வார்கள்.

    வடமேற்கு மூலையிலும் கழிவறை வரலாம். ஆனால் இப்படி வடமேற்கில் வரும் கழிவறை வடக்குச் சுவரில் ஒட்டாமல் இருப்பது அதி உத்தமம்.

    அதாவது வாஸ்துவின்படி ஒரு குறிப்பிட்ட வீட்டில் வடமேற்கில் படுக்கை அறை அமையலாம். தென்மேற்கும், வடமேற்கும் படுக்கை அறை அமைத்துக் கொள்ள நல்ல இடங்களாகும். இதனடிப்படையில் வடமேற்கில் படுக்கை அறை அமையலாம். ஆனால் இதன் உள்ளே கழிவறை மற்றும் குளியல் அறை எந்தப் பக்கம் அமைய வேண்டுமெனில், இந்தக் குறிப்பிட்ட படுக்கை அறையின் தென்பகுதியில், கிழக்கு மேற்காக அமைவது சிறப்பு.

    வடமேற்கு மூலையில் அமைய உள்ள படுக்கை அறையில் அறையின் தென்பாகத்தில் குளியல் அறை மற்றும் கழிவறை அமைத்துக்கொள்ளலாம். இந்தக் கழிவறைக்குச் செல்வதற்கு, வடகிழக்கில் வடக்கு நோக்கி வாசல் வைத்துக் கொள்ளவேண்டும்.

    அறையின் உள்பகுதியில் வடமேற்கு மூலையில் தெற்கு நோக்கி அமரும்படி கழிவறை உபகரணத்தைப் பொறுத்திக் கொள்ள வேண்டும். இந்தக் குறிப்பிட்ட அறையில் தெற்கு நோக்கி நின்று குளிப்பதற்கு இடம் வசதியாக இருந்தாலும் முடிந்தவரை வடக்குச் சுவரில் சவர் மாட்டிக்கொண்டு வடக்கு நோக்கி அமர்ந்து அல்லது வடக்கு நோக்கி நின்று குளிக்கவேண்டும்.

    இல்லையெனில், இடம் இருக்கும் பட்சத்தில் கிழக்குச் சுவரில் சவர் பொருத்திக்கொண்டு, நீங்கள் கிழக்கு நோக்கி நின்று குளிக்க வேண்டும்.

    இந்தக் குறிப்பிட்ட கழிவறையின் தரைத்தளமானது தாழ்ந்து இருத்தல் கூடாது. முடிந்தால் படுக்கை அறையின் தரைத்தளத்தோடு சமமாக இருப்பது நன்மை தரும். இந்த அறையில் பயன்படுத்தப்படும் நீரானது, மேற்குச் சுவர் வழியாக வெளியே கொண்டு செல்லப்பட வேண்டும்.

    இப்படியான முறைகளில் வீட்டில் அமையும் கழிவறையானது அங்கு வாழும் மக்களுக்கு சுகபோகத்தையும், வளர்ச்சிகரமான வாழ்வையும் சகல பாக்யங்களையும் வழங்கும்.

    இதற்குமாறாக, வடமேற்கில் அமைகிற படுக்கை அறையில் கழிவறையானது, அறையின் கிழக்குப் பாகத்தில் வடக்கு தெற்காக அமைவது மிக துரதிஷ்டமாகும். இந்த அமைப்பு வீட்டில் வளரும் பிள்ளைகளுக்கு கெடுதல்களும், கல்வித் தொல்லைகளும், உடல் நலக்கேடுகளும், மன நலபாதிப்பும், குனநலன்களில் பெறும் குறைபாடும் ஏற்பட்டு சகல கெடுதல்களும் உண்டாகும்.

    வடமேற்கு மூலை படுக்கை அறையின் கிழக்குப் பாகத்தில் மற்றும் வடக்குப் பாகத்தில் கழிவறை அமைப்பதைக் கைவிடுவது உத்தமம். அறையின் மேற்கிலும், தெற்கிலும் அமைவது சிறப்பு, என்றாலும் தென் பகுதியில் அமைவது மிக உத்தமம்.

    சிலர் வீட்டுக்கு வெளியே மாடிப்படிக்கட்டுகளை வடமேற்கில் அமைத்து அந்தப் படிக்கட்டுகளுக்குக் கீழே கழிவறை அமைத்துக் கொள்கிறார்கள். இந்தக் கழிவறையானது தாய்ச்சுவரைத் தொடாமல் இருப்பது நன்று. முடிந்தமட்டும், வீட்டுக்கும், கழிவறைக்கும் இடையே நான்கு அடிகள் இடைவெளிவிட்டு வீட்டுக்கு வடக்கில், மேற்கில் கழிவறை அமைக்கலாம். வடக்கில் எனில் வீட்டின் மைய வட பகுதிக்குச் செல்லக் கூடாது.

    சிலர் வடகிழக்கிலும், வடமேற்கிலும் படுக்கை அறை அமைத்து இரண்டுக்கும் நடுப்பாகமாகிய நேர் வடக்கில், தெற்கு வடக்காக கழிவறை அமைத்துக் கொள்வதுண்டு. இது தனி வீடாக இருந்தாலும், அடுக்குமாடிக் குடியிருப்பானாலும் சிறப்பு அல்ல. இப்படியாக உள்ள கழிவறையை முடிந்தமட்டும் குளியல் அறையாகப் பயன்படுத்தலாம்.

    கிழக்குச் சுவரில் ‘‘சவர்’’எனும் குளியல் பைப் பொருத்திக் கொண்டு கிழக்கு நோக்கி அமரும்படி அல்லது நின்று கொண்டு குளிக்கலாம். இதே அறையில் வடகிழக்கு மூலையில் முகம் கழுவ வாஷ்பேசன் அமைத்துக்கொள்ளலாம். இந்த அறையின் கிழக்குச் சுவரில் முகம் பார்க்கும் கண்ணாடி மாட்டிக் கொள்ளலாம்.

    இந்தக் கழிவறையின் வாசலானது தெற்குச் சுவரில், கிழக்கு ஓரமாக அமைத்து கொள்ளலாம். இந்த மாதிரியான அமைப்புகள் ஓரளவு நன்மைகள் செய்யும். குடும்ப உறுப்பினர்களுக்குப் பெறும் தொல்லைகள் வராது.

    வடகிழக்கு மூலையில் கழிவறை அமைப்பது என்பது கூடவே கூடாது. ஏனெனில் வாஸ்து சாஸ்திர விதிகளின்படி, வடகிழக்கில் பூஜை அறை அமைப்பது மிக விசே‌ஷமாகும். எனவே பூஜை அறைக்கும் கழிவறைக்கும் உள்ள வித்தியாசம் புரியாதவர்களே நாம் எதிர்பாராத விதமாக சில வீடுகளில் விபரம் தெரியாமல் வடகிழக்கில் கழிவறை அமைத்து விடுகிறார்கள். இதனுடைய பலனாக இந்தக் குடும்பங்களில் ஆண்வாரிசுகள் இல்லாத நிலையும், ரசித்துக் கட்டிய இந்த வீட்டில், உரிமையாளர் வாழமுடியாத நிலையும் திருமணமான வீட்டின் இளம்வாரிசுகள் ஒற்றுமை குலைந்து பிரிய வேண்டிய கட்டாயமும் ஏற்படும். குடும்பமும் சிதிலமடைகிறது.

    எந்தப் பக்கம் தலைவாசல் வைத்த வீடாக இருந்தாலும், வடகிழக்கில் கழிவறை அமைத்தல் கூடாது.

    சிலர் குளியல் அறை துணி துவைக்கும் அறை என வடகிழக்கில் வீட்டின் தாய்ச்சுவரோடு ஒட்டாமல் சற்று இடைவெளி விட்டு கட்டிக் கொள்கிறார்கள். இதுவும் தவறாகவே முடியும். மேலும் வடகிழக்கில் நீரோட்டம் இருக்கலாமென எண்ணி வடகிழக்கு மூலையில் ஓரமாக நீச்சல் குளம் அமைக்கிறார்கள். இதுகூட வாஸ்து முறைகளின் படி குறைவாகவேக் கருதப்படுகிறது. நீச்சல் குளமானது, கிழக்கிலும், வடக்கிலும் அமைப்பது நல்லது. இதைவிடுத்து வடக்கும் கிழக்கும் இணைகிற இடத்தில் நீச்சல்குளம் அமைக்கக் கூடாது.

    இதேபோல தென்கிழக்கில் சமையல் அறையும், வடகிழக்கில் படுக்கை அறையும் அமைத்து, அந்தப் படுக்கை அறைக்குத் தென்பாகத்தில், சமையல் அறைக்கு வடபாகத்தில், கிழக்கு மேற்காகக் கழிவறை அமைந்தால், இது ஓரளவுக்குத் தோசமில்லைதான். அதாவது, அந்த மொத்த வீட்டின் வடக்கு, தெற்குபாகத்தின் மையப் பகுதிக்கு தென்பாகத்தில் இந்தக் கழிவறை அமையலாம்.

    இவ்வாறு அமையும் கழிவறைக்கு கழிவறையின் வடகிழக்கில் வடக்குநோக்கி வாசல் அமைக்க வேண்டும். கழிவறையின் உள்பாகத்தில் வடமேற்கில் தெற்கு நோக்கி அமரும்படி கழிவறை உபகரணத்தை அமைத்துக் கொள்ளவேண்டும். மேலும் இந்த அறையில் வடக்குச் சுவரில், வடக்கு நோக்கி நின்று குளிக்கும்படி ‘சவர்’ அமைத்துக் கொள்ளவேண்டும்.

    அதே வடக்குச் சுவரில் முகம் கழுவ வாஷ்பேசின் அமைக்க வேண்டும். இல்லையெனில், கிழக்குச் சுவரில் வாஷ்பேசினும் அதற்கான முகம் காட்டும் கண்ணாடியையும் மாட்டிக் கொள்ளவேண்டும்.

    குறிப்பாக தரைத்தளமான சமையல் அறை உள்ள இடத்தை விட சற்று பள்ளமாகவும், வடகிழக்கு படுக்கை அறை அல்லது ஓய்வு அறையை விட சற்று உயரமாகவும் அமைத்துக்கொள்ள வேண்டும்.

    ஒருவேளை மற்ற அறைகளில் அதாவது, தென்மேற்கு மற்றும் மேற்கு அறைகளில் கழிவறை இருக்குமானால் இந்த கிழக்கில் உள்ள அறையை கழிவறையாகப் பயன்படுத்தாமல் குளியல் அறையாக மட்டும் பயன்படுத்துவது நல்லது.

    இவ்வாறு பயன்படுத்துகிறபோது இந்த இல்லத்தில் இந்திர பலம் உண்டாகி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உற்சாகமாக வாழும் நிலை உண்டாகும். அழகு லட்சணங்களோடு கூடிய கவர்ச்சிகரமான வாழ்க்கை அமையும். இளம்பிள்ளைகளின் வாழ்க்கை மிகச் சிறப்பு பெறும்.

    ஒருவேளை வீட்டின் வெளியே வீட்டுக்கு கிழக்குப் பாகத்தில் வீட்டை ஒட்டாமல் கழிவறை அமையுமானால் நல்லது தான். என்றாலும் உங்களின் கிழக்கு காம்பவுண்ட் சுவரில் ஒட்டாமல் இந்தக் கழிவறை அமைய வேண்டும்.

    இதேபோல் தென்கிழக்கில் சமையல் அறையும், தென்மேற்கில் படுக்கை அறையும் அமைந்து இந்த இரண்டுக்கும் இடைபாகமாகிய தெற்கில், தேன்மேற்குப் படுக்கை அறைக்கும் கிழக்கு பாகத்தில் தெற்கு வடக்காகக் கழிவறை அமையுமெனில் இது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றே.

    இந்த அமைப்பானது மொத்த வீட்டின் தெற்கு மையப் பாகத்தில் வருமானால் பரவாயில்லை. மாறாக மொத்த வீட்டின் தென்மேற்கில் வருமானால் சில தொல்லைகள் வரும்.

    இல்லையெனில் குறிப்பிட்ட தென்மேற்கு படுக்கை அறையை அந்த வீட்டின் வயது முதிர்ந்தவர்கள் பயன்படுத்தினால் தொல்லைகள் அதிகம் இராது. இளம் வயதினர் பயன்படுத்தினால், விபத்து உடல்கோளாறு, மனக்கோளாறு உண்டாகும். குடும்பத்திற்கு அவப்பெயர் உண்டாகக் காரணமாகும். அனைத்தும் கவனத்தில் கொள்ள வேண்டியது.

    Next Story
    ×