என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
X
ஆத்ம ஞானம் மேம்படுத்தும் பாபா காட்டிய பாதை: கர்மாவை விரட்டலாம் -21
Byமாலை மலர்13 Jan 2022 4:42 PM IST (Updated: 13 Jan 2022 4:42 PM IST)
மனிதனின் உடலும், உயிரும் அவனது முன்வினைக்கு ஏற்பவே இருக்கும். ஒருவரது கர்மாவுக்கு ஏற்ப அவர்களுக்கு இன்பம், துன்பம் உண்டாகும். இந்த கர்மாவை 3 வகையாக சொல்லலாம்.
சீரடி சாய்பாபா ஒன்றை சொல்கிறார் என்றால் அதில் எத்தனையோ விஷயங்கள் அடங்கியிருக்கும். அதுபோல அவர் ஏதாவது ஒரு செயலை செய்தால் அது மிகப்பெரிய தத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் பின்னணி கொண்டதாக இருக்கும்.
சாய்பாபாவை அருகில் இருந்து பார்த்த பக்தர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே பாபாவின் இந்த அற்புதங்கள் தெரிந்து இருந்தது. சில சமயங்களில் பாபாவின் செயல்கள் அவர்களுக்கும் கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு காணப்பட்டது. ஆனால் அந்த செயல்களுக்கு விரைவில் விடை கிடைக்கும் போது பாபா காட்டும் பாதையை நினைத்து ஆச்சரியத்தில் மூழ்கிப்போவார்கள்.
ஒருதடவை சீரடிக்கு வந்த பல்ராம் என்ற வியாபாரியிடம் சாய்பாபா 9 லட்டுகளை எடுத்துக்கொடுத்து, ‘உன் வியாபாரம் முடிந்து போனது. இந்த 9 லட்டுகளையும் வீட்டுக்கு எடுத்துச்சென்று அனைவருக்கும் பகிர்ந்து கொடு’ என்றார். எதற்காக பாபா அவருக்கு 9 லட்டு கொடுத்தார்? வியாபாரம் முடிந்து விட்டது என்று சொன்னாரே அதற்கு என்ன அர்த்தம்? என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர். யாருக்கும் விடை தெரியவில்லை.
வியாபாரி பல்ராம் 60 வயதை கடந்தவர். அவர் 15 நாட்களில் இறந்துவிடுவார் என்று ஜோதிடர் எச்சரித்து இருந்தார். பல்ராமின் ஜாதகத்தை ஆய்வு செய்த அவர், ‘திசை நடப்பு சரியாக இல்லை. 15 நாட்கள் கழித்து பார்க்கலாம்’ என்றார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பல்ராம் இதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? நான் என்ன செய்ய வேண்டும் என்று பயந்தபடியே ஜோதிடரிடம் கேட்டார்.
அதற்கு ஜோதிடர், ‘கோவில் குளம் என்று போயிட்டு வாருங்கள்’ என்றார். அந்த நிமிடமே பல்ராமின் மனதுக்குள் சீரடிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. சீரடியில் சாய்பாபாவை பார்த்து ஆசி பெற்றால் போதும் என்று நினைத்தார்.
அடுத்த நாளே அவர் சீரடிக்கு புறப்பட்டு விட்டார். சீரடியில் சாய்பாபாவை பார்த்ததும் கதறி கதறி அழுதார். ‘எனக்கு கிரகம் சரியில்லையாம். செத்து விடுவேன் என்று ஜோதிடர் சொல்கிறார். எனக்கு ஏதாவது கர்மவினை இருக்கிறதா? அந்த கர்மாவை விரட்ட ஏதேனும் வழிவகை உண்டா?’ என்று பரிதாபமாக கேட்டார்.
அந்த சமயத்தில் துவாரகமாயி மசூதியில் நூற்றுக்கணக்கானோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளட்டும் என்ற வகையில் பாபா புதிய உபதேசம் ஒன்றை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
‘மனிதனின் உடலும், உயிரும் அவனது முன்வினைக்கு ஏற்பவே இருக்கும். ஒருவரது கர்மாவுக்கு ஏற்ப அவர்களுக்கு இன்பம், துன்பம் உண்டாகும். இந்த கர்மாவை 3 வகையாக சொல்லலாம். ஒன்று சஞ்சீத கர்மா, இரண்டாவது பிராராப்த கர்மா, மூன்றாவது ஆகாமிய கர்மா.
இந்த மூன்று கர்மாக்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டது. ஒருவர் தனது ஒவ்வொரு பிறவியிலும் என்னென்ன நல்லது செய்கிறாரோ, கெட்டது செய்கிறாரோ அவை அனைத்திற்கும் சஞ்சீத கர்மா என்று பெயர். இந்த நல்லது கெட்டதுகளுக்கு ஏற்ப தான் ஒருவருக்கு ஒவ்வொரு பிறவியிலும் பலாபலன்கள் கிடைக்கும். இதை பிராராப்த கர்மா என்று சொல்வார்கள்.
இப்போது நாம் வாழும் காலத்தில் எவ்வளவு நல்லது கெட்டது செய்கிறோமோ அது மூன்றாவது வகையான ஆகாமிய கர்மா என்று அழைக்கப்படும். இந்த கர்மா வினைகள் ஒவ்வொரு பிறவியிலும் நம்மை தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கும். இந்த கர்மா வினைகளுக்கான பலாபலன்களை கொஞ்சமும் குறைவில்லாமல் அல்லது அதிகப்படுத்தாமல் நமக்கு தருவது நவகிரகங்கள்.
எனவே கர்மாவின் தாக்கத்தில் இருந்து யாருமே தப்ப முடியாது. ஒவ்வொருவரும் பிறவி கர்மாவை நிச்சயம் அனுபவித்தே தீர வேண்டும்.
இவ்வாறு கூறி விட்டு சாய்பாபா 9 லட்டுகளை எடுத்து பல்ராமிடம் கொடுத்தார். அவற்றை வாங்கிச்சென்ற பல்ராமுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அவரது கடையில் வழக்கத்தை விட அதிக விற்பனை உண்டானது. இதனால் பல்ராம் செல்வ செழிப்பு மிக்கவராக மாறினார்.
ஆனால் வசதி வாய்ப்பு வந்துவிட்டது என்பதற்காக அவர் பாபாவை ஒரு நாளும் மறந்துவிடவில்லை. தினமும் பாபா படத்திற்கு மாலைகள் அணிவித்து நைய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்வதை கடமையாக கொண்டு இருந்தார். அவர் ஜாதக கணிப்பை மீறி உயிருடன் இருந்தது ஜோதிடருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
சீரடி சாய்பாபா வழங்கிய 9 லட்டுகள் மூலம் தான் பல்ராம் உயிர் தப்பியதோடு செல்வச் செழிப்பானவராக மாறி இருக்கிறார் என்ற உண்மையை ஜோதிடர் புரிந்து கொண்டார். சீரடி சாய்பாபாவை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கும் ஏற்பட்டது. அந்த ஜோதிடர் பல்ராமை அழைத்துக்கொண்டு சீரடிக்கு சென்றார்.
பல்ராமை பார்த்ததும் சாய்பாபா புன்னகை பூத்தார். எப்படி இருக்கிறீர்கள் என்று நலம் விசாரித்தார். அப்போது அருகில் இருந்த ஜோதிடர், ‘பாபா.... இவரது கர்ம வினை எப்படி சரியானது? அதன் சூட்சுமத்தை தயவு செய்து மறைக்காமல் எங்களுக்கு சொல்லுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
பாபா அதற்கு நீண்ட விளக்கம் அளித்தார். அவர் சொன்ன விளக்கம் வருமாறு:-
தற்போது நாட்டில் கலியுகம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த கலியுகத்திற்கு ஏற்றது பக்தி மார்க்கம் மட்டும் தான். யார் ஒருவர் பக்தி மார்க்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறாரோ அவரால் மட்டுமே கர்ம வினைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.
பக்தி நெறியில் 9 விதமான அம்சங்கள் உள்ளன. இந்த 9 அம்சங்களும் நவகிரகத்தை பிரதிபலிக்கக் கூடியது. இதை உணர்த்த தான் பல்ராமுக்கு நான் 9 லட்டுகளை கொடுத்தேன். அந்த 9 அம்சங்களை யார் ஒருவர் கையாளுகிறாரோ அவர்களால் நவகிரக பாதிப்புகளில் இருந்து நிச்சயம் விடுபட முடியும்.
1) ஸ்ரவணம்: இறைவனின் புகழ்பாடுவதை நாம் காது குளிரக்கேட்க வேண்டும். யார் ஒருவர் மற்றவர் காட்டும் இறைபாதையை கடைப்பிடிக்கிறாரோ அப்போது இறைஞானம் அதிகரிக்கும். அப்படி பட்டவர்களுக்கு நவகிரகத்தில் புதன் தோஷம் விலகி விடும்.
2) கீர்த்தனம்: இறை நாமங்களை இடைவிடாமல் உச்சரிப்பதை தான் கீர்த்தனம் என்று சொல்வார்கள். இறைவனின் நாமங்களை நாம் சொல்ல சொல்ல நன்மை உண்டாகும். இறைவனின் நாமங்கள் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களுக்கு சுக்கிரனின் தோஷம் விலகும்.
3) ஸ்மரணம்: இறை வனின் ஈடு இணையற்ற மகிமையை திரும்ப திரும்ப நினைத்துக் கொள்வதற்கு ஸ்மரணம் என்று பெயர். இறைவனின் திருவிளையாடல்களை நினைத்துப்பார்த்தால் சந்திரகிரகண தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
4) பாதசேவனம்: யார் ஒருவர் தன்னிடம் உள்ள ஆணவம், அகங்காரம் போன்றவற்றை கைவிட்டு விட்டு இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப் படைத்துக் கொள்கிறாரோ அதற்கு பாதசேவனம் என்று பெயர். அதாவது இறைவனிடம் நாம் முழுமையாக சரணடைய வேண்டும். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் முற்றும் துறந்த நிலையில் இறைவனின் பாதத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்தால் கேது தோஷம் அவரை நெருங்கவே நெருங்காது.
5) அர்ச்சனம்: இறைவனை அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். மலர்கள் தூவி அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு மலரை தூவும் போதும் இறைநாமத்தை மனப்பூர்வமாக சொல்ல வேண்டும். இந்த அர்ச்சனைக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. இந்த அர்ச்சனை செய்வதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் பிடியில் இருந்து விடுபட முடியும்.
6) வந்தனம்: இறைவனை மனப்பூர்வமாக வணங்க வேண்டும். வெறுமனே கைகூப்பி வணங்கினால் போதாது. ஆண்கள் என்றால் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். பெண்கள் என்றால் பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். இது தான் உண்மையான வந்தனம் ஆகும். இப்படி செய்பவர்களை இறைவனுக்கு மிகவும் பிடிக்கும். அப்படிப் பட்டவர்களிடம் குரு வாலாட்ட முடியாது.
7) தாஸ்யம்: இறைவனிடம் நாம் மனப்பக்குவத்துடன் நடந்து கொள்ள வேண்டும். சேவை செய்கிறோம் என்பதற்காக மனதிற்குள் அகங்காரம் வரக்கூடாது. நாம் அவருக்கு அடிமை என்று நினைத்துக்கொண்டு இறைவழிபாடுகளில் ஈடுபட வேண்டும். ஆனால் பெரும்பாலானோர்கள் அப்படி நினைப்பதில்லை. இறைவனுக்கு அடிமை என்று நினைத்துக்கொண்டு யார் பணிவிடைகளை செய்கிறார்களோ அவர்களுக்கு சனி பகவான் நல்லது செய்வார்.
8) சாக்யம்: இறைவனிடம் எந்த அளவுக்கு நாம் அடிமையாக இருக்கிறோமோ அதே அளவுக்கு நாம் உண்மையாகவும் இருக்க வேண்டும். அதாவது இறை வழிபாட்டில் உரிமையுடன் செயல்பட வேண்டும். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் எப்படி பழகுவார்களோ அதே மாதிரி இறைவனிடம் பழக வேண்டும். அப்படி பழகும் பட்சத்தில் ராகு உங்களிடம் எதுவும் செய்ய முடியாது.
9) ஆத்மநிவேதனம்: இறைவனிடம் வழிபாடுகள் செய்தால் மட்டும் போதாது நம்மையே நாம் ஒப்படைத்துக் கொள்ள வேண்டும். அதாவது நம் ஆத்மாவையே அவருக்கு நிவேதனம் செய்து விட வேண்டும். இது உயர்ந்த பட்ச பக்தி நிலை. இத்தகைய பக்தி இருந்தால் சூரிய கிரகத்தால் ஏற்படும் கோளாறுகளை அறவே நீக்கி கொள்ள முடியும்.
இந்த 9 விதமான பக்தியை நவ வித பக்தி என்று சொல்வார்கள். இந்த பக்தி நெறி இருந்தால் நவகிரகங்களும் உங்களுக்கு கட்டுப்படும். இந்த 9 வித பக்தியை உணர்த்தவே பல்ராமுக்கு நான் 9 லட்டுகளை கொடுத்தேன்.
ஆகவே நவ வித பக்தி நெறிகளை கையாளுங்கள். அவை உங்கள் கர்மாவை மாற்றும். அதைத்தான் உங்களுக்காக நான் செய்து கொண்டு இருக்கிறேன்.
இவ்வாறு சாய்பாபா விளக்கம் அளித்தார். இது சாய்பாபா காட்டிய தனித்துவமான பாதைகளில் ஒன்றாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X