search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பரிவுடன் காக்கும் பவளமலை முருகன்
    X
    பரிவுடன் காக்கும் பவளமலை முருகன்

    கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம் - பரிவுடன் காக்கும் பவளமலை முருகன்

    செந்தமிழின் தலைவன் முருகனின் நாமமே அனைவரின் உளத்திலும் ஒளி தரும் தீபமாக இருக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் முருகாவெனும் நாமமே அவர்களுக்குத் துணையாக இருக்கிறது.
    சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
    வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை  விளங்குவள்ளி
    காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் 
    சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்விலையே.
                                      -கந்தரலங்காரம்

    முருகனின் வேல் மிகவும் சக்தி உடையது.
    முருகா என்றதும் முன் வந்து நிற்பது அவனின் கைவேல். அவனின் கைவேல இருக்கக் கவலை ஏன் என்கிறார் அருணகிரி யார்.
    உடலும் உயிரும் கலந்து இருப்பதுபோல் முருகன் வேறு வேல் வேறு இல்லை.முருகனின் வேல் என்பது ஞானம். தன் ஞான சக்தியை அதில் சேர்த்து வைத்து முருகன் 

     தன் பக்தர் களுக்கு அள்ளி வழங்குகிறான். முருகன் எண் ணம் எனில் வேல் காரியம். அவன் நினைப்பதை நொடியில் நிறைவேற்றி விடுகிறது அவனின் கைவேல். அதன் வேகத்துக்கும், சக்திக்கும் முன் எந்த தீய சக்தியும் நிற்க முடியாது. எனவேதான் “வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை” என்கிறார்கள். தன் வேல் விருத்தம் பாடலில் சிறுவன் ஆறுமுகன் முருகன் திருதர்கள் குலாந்தகன் செம்பொற் திருக்கை வேலே” என்கிறார்.

    என்றும் ஒன்றாய் இருக்கப்பட்டவன் கந்தன். தன் பக்தர்களுடன் ஒன்றி இருப்பவன். நினைத்தாலே ஓடி வரும் கார்த்திகேயன்.
    நீயும் நானும் வேறல்ல. நான் உன்னைச் சேர்ந்த வன் என்கிறான் முருகன். என்னை நம்பி நீ வந்த பின் உனக்கு துன்பம் இல்லை என்பதே அவன் வாக்கு. இந்தப் பிரபஞ்சத்தின் சப்த சொரூபம் அவனே. அசையும், அசையாப் பொருளாய் இருப் பவன் அவனே.கந்தனிடம் முழுமையாக சரணடைந்து விட்டால் அமைதியும், நிம்மதியும், மன நிறைவும் கிடைக்கும். அப்போது அவனிடம் நம் குறைகளைப் பற்றி முறையிடும் எண்ணமே தோன்றாது. முழுமையான பக்தி அவன் பாதத்தைச் சரணடைந்தால் மட்டுமே கிடைக்கும்.

    கொஞ்சும் குமரனாக குன்றிருக்கும் இடமெல்லாம் குடி இருக்கும் முருகனின் தலங் களில் சிறப்பு வாய்ந்தது கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள பவளமலை.ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் நடந்த பலப்பரிட்சையில் சக்தி வாய்ந்த மேரு மலையைத் தகர்க்கும் எண்ணத்துடன் அதன் மீது வலிமையுடன் மோதினார் வாயு. அதன் வேகம் தாங்காமல் அதன் சிகரங்களில் ஒன்று பூலோகத்தில் விழுந்தது. அதுவே பவளமலை. துர்வாச முனிவர் இத்தலத்து முத்துக்குமார சுவாமியை வணங்கி வழிபட்டுள்ளார். விஜய நகர மன்னர்கள் இக் கோயில் திருப்பணிகளை செய்துள்ளனர்.

    இங்கு முருகன் குழந்தையாக, அழகனாக, பிரம்மசாரியாக காட்சி அளிக்கிறான்.மலைப் பாதையில் படிக்கட்டுகள் அமைக்கப் பட்டுள்ளது. மலைமேல் வாயு மூலையில் வள்ளி, தெய்வானை தவக் கோலத்தில் காட்சி அளிக்கிறார்கள். முரு கனை மணம் செய்து கொள்ள, அவர்கள் இரு வரும் தவம் செய்த இடம் இது. இங்கு உற்சவர் வள்ளி தெய்வானை யுடன் காட்சி அளிக்கிறார்.

    மகன் இருக்கும் இடத்தில் மகிழ்வுடன் தந்தை சுயம்புவாக, தாய் பெரிய நாயகி அம்மையுடன் காட்சி அளிக்கிறார். முருகன் திருநாமம் முத்துக்குமார சுவாமி. 

    பச்சைமலை, பவளமலை எங்கள் நாடு, பரமேஸ்வரன் வாழும் மலை எங்கள் நாடு என்று பாடுகிறது திருக் குற்றாலக்குறவஞ்சி. முல்லைக்குத் தேர் கொடுத்த பாரிவள்ளல் ஆண்ட  பகுதி என்ற பெருமைகளை உடையது பவளமலை. நோய்களைக் குணப்படுத்தும் லிங்கம் அருகில் வயல்வெளியில் புதைந் திருந்தது. விவசாயிகள் அதைக் கண்டெடுத்து இக்கோவிலில் வைத்து பூஜிக்க ஆரம்பித்தனர். இவர் தீராத வியாதிகளைத் தீர்ப்பார் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் நிலவுகிறது.

    இங்கு முருகனுக்கு நடைபெறும் திரிசத அர்ச்சனை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஈசனைப் போன்றே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என்று ஐந்தொழில் களையும் செய்கிறார். எனவே ஆறு முகத்துடன், பன்னிரு கரங்களுடன் அருள் பவன்  ஆறுமுகன் என்பதால் சரவணபவ என்று மந்திரம் உரு வானது. ஒரு முகத்துக்கு அம்பது வீதம் ஆறு முகத்திற்கு முன்னூறு அர்ச்சனைகள் செய்வதே திரிசத அர்ச்சனை.

    சூரனை வென்று தேவர்களைக் காத்த முருகப் பெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தேவர்கள் இந்திரனின் தலைமையில் செய்யப்பட்ட அர்ச்சனையே திரிசத அர்ச்சனை. இது சத்ரு சம்கார அர்ச்சனை என்றும் கூறப் படுகிறது. இந்த அர்ச்சனை செய்வதின் மூலம் செவ்வாய் தோஷம் நீங்குகிறது. திருமணத் தடை, அகலும். 

    ஒவ்வொரு செவ்வாய் அன்றும் மாலையில் திரிசத அர்ச்சனை நடை பெற்று,பருப்பு பாயாசம், உளுந்து வடை நைவேத்தியம் செய்யப்படுகிறது.தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, திருப்படி விழா, கந்த சஷ்டி போன்றவை மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது இங்கு. அன்று பக்தர்கள் பால் குடம் சுமந்து அரோகரா கோஷத்துடன் செல்வதைக் காண்பது மிக அழகிய காட்சி.

    சுற்றிலும் வயல்கள் சூழ்ந்த குளுமையான பகுதியில் முருகன் குன்றின் மேல் குடி இருக்கிறான். வள்ளி, தெய்வானை தவம் இருந்த தலம் என்பதால் இங்கு வந்து முருகனை வேண்டினால் திருமணம் நடக்கும். நோய் தீரும்.எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என்பது முருக பக்தர்களின் கோஷம். வேல் முருகா, வெற்றி வேல் முருகா என்று பவளமலை நோக்கி பக்தர்கள் படை எடுப்பார்கள். அவனைத் தரிசித்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. சிந்தையில் குடி கொண்ட சிங்கார வேலனை நினைத்தாலே போதும்.பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. முருகனுக்கென்று தேர்,  கோசாலை உள்ளன.எந்த இடத்திலும் இல்லாத சிறப்பாக இங்கு பச்சைமலை, பவளமலை என்ற இரு சிறப்பு வாய்ந்த முருகன் கோயில் அருகருகே அமைந்துள்ளது. பச்சைமலை வருபவர்கள், பவளமலையையும் தரிசனம் செய்ய வேண்டும் என்பது பக்தர்கள் பின்பற்றும் ஐதீகம். இங்கு முருகன் சிங்கார வடிவினனாக நின்ற கோலத்தில் கொஞ்சும் குமரனாகக் காட்சி அளிக்கிறான்.

    அழகனைக் காணப் படியேறிச் சென்று அவனை தரிசித்தால் நம் மனதில் குடி இருக்கும் துன்பங்கள், துயரங்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். அன்பர்கள் இதயமே அவன் இருக்கும் இடம். அவர்கள் கூப்பிட்ட உடன் ஓடி வருகிறான் கந்தன். அவனுக்கு முன் அவனின் வேல் வந்து நிற்கும்.
    “தனித்த வழி நடக்கும் எனது  இடத்தும் ஒரு வலத்தும் இருபுறத்தும் அருகு அடுத்து இரவு பகற் துணையதாகும்” என்கிறது வேல் மாறல் பதிகம். 

    செந்தமிழின் தலைவன் முருகனின் நாமமே அனைவரின் உளத்திலும் ஒளி தரும் தீபமாக இருக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் முருகாவெனும் நாமமே அவர்களுக்குத் துணையாக இருக்கிறது.செவ்வேலின் திருவடியே என்றும் துணையாக நிற்கிறது. தீமைகள் விஸ்வரூபம் எடுக்கும் யுகம் கலியுகம். இதில் நாம ஜெபமே நம்மைக் காக்கும் துணையாக இருக்கிறது. எல்லாவிடத்திலும் காத்து நிற்பது முருகாவெனும் நாமங்களே.அவன் நாமத்தைச் சொல்லும் போது இன்பம். அவன் உருவத்தைக் கண்டால் இன்பம். பார்க்கும் இடம்தோறும், முருகன் என்று அகிலம் முழுவதும் நிரம்பி நிற்கிறான் முருகன்.விழிக்குத் துணை அவன் பாதங்கள், மொழிக்குத் துணை முருகாவெனும் நாமங்கள் என்கிறார் அருணகிரியார்.

    “செய்தவத்தால் அஞ்சு சீரெழுத் தோதிவந்தீ தலருஞ் 
    செய்தவத்தால் அஞ்சுகம் பெறச் சேயுரைக் கேட்டுருப்போய் 
    செய்தவத் தாலஞ்சு வைக்கனி யீன்றதென் னேம் வினையே 
    செய்தவத் தாலஞ்சு கின்றன மும்மலச் செம்மல் கொண்டே”

    என்கிறார் கந்தர் அனுபூதியில். முற்பிறவி யில் செய்த தவத்தின் பயனாகவே ஐந்தெழுத்தை ஓதும் பாக்கியம் கிடைத்துள்ளது. மும்மலத்தால் அழுக்கு ஊறிக் கிடந்த இவ்வுடலை முருகனின் சரவணபவ என்னும் மந்திரமே தூய்மையாக்குகிறது.சிவந்த கிரவுஞ்ச கிரியையும், கடல் நடுவினில் மாமரமாய் நின்ற சூரபத்மனை தன் வேலால் தவிடு பொடியாக்கிய வேலாயுதக் கடவுளை நினையாமல் இருக்காதே. இனித்திருந்தாலும், கைக்கு அருகில் இருந்தாலும் பழைய பூவை வண்டினங்கள் விரும்பாது. 

    அதுபோல் அந்த முருகனையே பாட வேண்டும் என்கிறது கந்தர் அனுபூதி.முருகனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நூறு அடி முன்நோக்கி வருவான் என்பது திண்ணம். பக்தர்களைக் காக்கவே வந்துதித்தவன் அவன். சிவமும் சக்தியும் சேர்ந்த வடிவினன்.

    பவளமலையில் அன்னையும், பிதாவும் அருகில் இருக்க, அளவற்ற சக்தி படைத்தவனாய் அருள் பாலிக்கிறான். முருகா என்றழைத்தால் போதும். அவனே நம்மை அங்கு அழைத்து காட்சி கொடுக்கும் கருணை வள்ளல் பவளமலை முருகன்.

    பச்சைமலை முருகனை ஸ்தாபித்த துர்வாசர் இங்குள்ள முருகனையும் பிரதிஷ்டை செய்தார் என்கிறார்கள். முருகனுக்குரிய பூஜை விதிமுறைகளை வகுத்து முத்துக்குமார சுவாமியை பூஜித்தார். முருகனை மணம் புரிய வள்ளி, தெய்வானை இருவரும் இங்கு தவம் புரிந்தனர். கணவால குல ஷேத் திரத்தைச் சேர்ந்த பக்தர்களால் பவளமலை முருகன் கோவில் கட்டப்பட்டது.
    Next Story
    ×